WRITTEN BY S NAGARAJAN
DATE- 19-12-19
TIME IN LONDON -8-06 AM
POST NO.7358
16-12-2019 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி இரண்டாம் கட்டுரை – அத்தியாயம் 438
உலக மக்களின் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஹோலோ லென்ஸ்!|
ச.நாகராஜன்
வாழ்க்கையை ஒரு புதிய பரிமாணத்தில் இயங்க வைத்தது. அடுத்து மொபைல் போனில் உலகமே அடங்கி விட்டது. தொலைதூரத்தில் இருப்போரிடம் கண நேரத்தில் வீடியோ மூலமாக நேரில் பார்த்துப் பேசுவது, பல நூறு ‘ஆப்ஸ்’ வாயிலாக ஏராளமான செய்திகளையும் படங்களையும் பரிமாறிக் கொள்வது என்பதெல்லாம் சாத்தியமானது.
ஜிபிஎஸ் மூலமாக எந்த இடத்திற்கும் யாருடைய உதவியும் இன்றி செல்வது எளிதானது.
இப்படிப்பட்ட சாதனங்களின் வரிசையில் அடுத்த மாற்றத்தை உலகில் ஏற்படுத்தப் போவது ஹோலோ லென்ஸ்!
மைக்ரோ சாஃப்ட் தரும் விந்தைகளில் இதுவும் ஒன்று!
இதைக் கண்டுபிடித்திருப்பவர் அலெக்ஸ் கிப்மேன் (Alex Kipman) என்னும் விஞ்ஞானி!
இது என்ன செய்யும்? உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.
கார் எஞ்சின் ஒன்று பழுதாகி விட்டது. உங்களுக்கு எஞ்ஜினைப் பற்றி ஒன்றுமே தெரியாது. என்ன செய்வது? கவலை வேண்டாம். ஹோலோ லென்ஸ் 2 உங்களின் உதவிக்கு வரும். இதை ஹெல்மெட் போல தலையில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். அதில் மோட்டார்சைக்கிள் ஹெல்மெட்டில் உள்ளது போல ஒரு முகத்திரை இருக்கும். அதில் பல படங்கள் காட்சிக்கு வரும்.
நீல நிற அம்புக்குறி ஒன்று டூல்ஸ் இருக்கும் மேஜையைக் காண்பித்து ஒரு கருவியை சுட்டிக் காட்டும். அது காட்டும் டார்க் ரெஞ்சை எடுத்தவுடன் இன்னொரு அம்புக் குறி எந்த சைஸ் போல்டை எடுக்க வேண்டும் என்று போல்ட் நட்டுகள் இருக்கும் பெட்டியைக் காட்டும். அடுத்து இன்னொரு அம்புக் குறி எஞ்ஜினில் அடுத்தாற்போல என்ன செய்யவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும். அவ்வளவு தான், ஹோலோ லென்ஸ் சொன்னபடியே செய்தால் ரிப்பேர் முடிந்து விடும்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு. அதை அப்படியே காட்டிக் கொண்டே வரும். மாஜிக் உலகம் – மாயாஜால உலகத்தில் இருப்பது போலத் தான் இனி மக்கள் வாழ்வர்.
சமையலறைக்கு ஒரு ஹோலோ லென்ஸ், பாடம் படிக்க ஒரு ஹோலோ லென்ஸ், இப்படி நமது கற்பனையைத் தட்டி விட்டால் உலகில் தீர்க்க முடியாத பிரச்சினையே இருக்காது என்ற அளவுக்குப் போய் விடுவோம்.
மக்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறப் போகிறது. தொழில் முறைகள், தொழில் வித்தைகள் அனைவருக்கும் பொது!
இதைக் கண்டுபிடித்துள்ள அலெக்ஸ் கிப்மேன் மைக்ரோ சாஃப்டில் வேலை பார்க்கும் ஒரு எஞ்ஜினியர். “ இது போன்ற சாதனங்கள் தாம் உலகை இனி ஆளப் போகின்றன” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் அவர்.
அறிவியல் புனைகதைக் காட்சிகள் எனப்படும் ஸயி-ஃபி (ஸயிண்டிபிக் ஃபிக்ஷன் விஷன்) இனி அனைவருக்கும் பொதுவாக ஆகி விடும். கதை படிப்பது போலத் தான் தோன்றுகிறது. என்றாலும் இது வாழ்க்கை முறையின் நிஜமாக ஆகி விட்டது!
கிப்மேன் பிரேஜிலில் வளர்ந்தவர். 2001ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்டில் வேலைக்குச் சேர்ந்தவர் கம்ப்யூட்டர் மேஜிக்கில் மன்னனாக ஆகி விட்டார் இன்று!
ஹோலோ லென்ஸ் 1 என்ற மாடலை அமைத்த அவர் 2016இல் அதை சந்தையில் அறிமுகப் படுத்தினார்.
முதலில் அனைவரும் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். 3- D கேமரா பொருத்தப்பட்ட ஒரு சாதனத்தை கம்ப்யூட்டருடன் பொருத்த வேண்டியது தான். அமோகமாக விளையாடலாம். இந்த சாதனம் விற்பனையில் 350 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டு விட்டது. இதனால் உற்சாகம் கொண்ட அவர் புதுப்புது சாதனங்களை அறிமுகப்படுத்த விரும்பி, இப்போது ஹோலோ லென்ஸ் – 2 மாடலை சந்தையில் விற்பனைக்கு உலவ விட்டிருக்கிறார்.
“இனி நமது உலகில் முடியாதது என்பதே இல்லை” என்று கூறிச் சிரிக்கும் கிப்மேன், “சர்ஜன்கள் ஆபரேஷனுக்கு இதை உபயோகிப்பதையும் பைலட்டுகள் விமானத்தை ஓட்ட இதை மாட்டிக் கொள்வதையும் நான் பார்க்கிறேன்” என்கிறார்.
இதை மாட்டிக் கொள்ளும் போது சற்று கனமாக இருக்கிறது என்று பயனாளிகள் சொல்வதைக் கேட்ட அவர் அதை இன்னும் இலேசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடைசியில் இனி கம்ப்யூட்டர், போன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் கூடிய விரைவில் அவுட்!
இனி ஆளுக்கு ஒரு லென்ஸை முகத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான்!
நாமே ஹோலோ லென்ஸ் உலகம் இனிமேல் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்!
கிப்மேனின் குழுவினர் ஒரு வினாடிக்கு 12000 முறை அதிர்வு கொண்ட (அடேயப்பா, வினாடிக்கு 12000 அதிர்வுகளா!!!) சிறு கண்ணாடிகளைக் கண்டு பிடித்துள்ளனர். துல்லியமாக அனைத்தையும் தரும் இவை “மைக்ரான் ப்ரஸிஷன்” கொண்டவை. அதி அற்புதமான துல்லியத்துடன் இயங்குபவை எனலாம். இந்த ஹோலோ லென்ஸ் அனைவருக்கும் வாழ்நாள் துணைவன் ஆக இருக்கிறது!
நல்ல கண்பார்வைக்காக ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு சுலபமாக இயங்குவது போல நாள் முழுவதும் இதை அணியும் வண்ணம் இதை மேற்கொண்டு இலகுவாக ஆக்க வேண்டியது ஒன்று தான் பாக்கி என்கிறார் கிப்மேன்!
புதிய லென்ஸ் உலகத்தை லென்ஸ் அணிந்து கொண்டு வரவேற்போம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
உலகம் கண்ட மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (தோற்றம்14-3-1879 மறைவு 18-4-1955) தனது வாழ்நாள் காலத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சகாக்களுக்கும், முன்பின் தெரியாத குழந்தையிலிருது பெரியவர்கள் வரைக்கும் ஏராளமான பேருக்கு அருமையான கடிதங்களை எழுதியுள்ளார். இவையெல்லாம் காலமெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். உலகின் மிகப் பெரும் அறிஞரின் மூளை எப்படியெல்லாம் உலகினருக்குத் தன் ஆற்றலை வழங்கியுள்ளது என்பதற்கான அதிகாரபூர்வமான ஆவணங்கள் இவை தாம். இந்தக் கடிதங்களில் உணர்ச்சி, இரக்கம், அறிவுரை, காதல் அனைத்தும் இழையோடி இருக்கின்றன. தனது மகனுக்கு எதை வேண்டுமானாலும் எப்படிக் கற்பது என்பது பற்றி ஒரு கடிதத்தில் அறிவுறுத்தி இருக்கிறார். விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்பிய ஒரு இளம் பெண் ஆனால் பெண்ணாக இருப்பதால் தயக்கமாக இருக்கிறது என்று ஐன்ஸ்டீனுக்கு எழுத அவர் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தார் தனது பதிலின் மூலமாக. ஃப்ராய்டுக்கு கடிதம் மூலமாக வன்முறை, அமைதி, மனித இயற்கை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
ஆனால் அவரது மிக அருமையான கடிதங்களில் ஒன்று அவர் தன்னுடன் சிநேகம் கொண்டிருந்த பெல்ஜியம் ராணி எலிஸபத்திற்கு எழுதிய கடிதம் தான்! அவரது மனிதத் தன்மையை பிரகாசமாகக் காட்டும் கடிதம் அது. எலிஸபத் ராணி தன் கணவர் ஆல்பர்ட்டின் மரணத்தால் மிகவும் சோகமுற்றிருந்தார். அதைத் தொடர்ந்து அவரது அருமை மருமகளும் மரணமடைந்தார். ராணியால் இந்தப் பேரிடியைத் தாங்கவே முடியவில்லை. 1934ஆம் ஆண்டு அவர் ராணிக்கு எழுதிய கடிதத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினார். இந்தக் கடிதம் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
கடவுள், இயற்கை, போர், படைப்பாற்றல், காதல், அறிவியல் முன்னேற்றம். அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த விஷயமானாலும் ஐன்ஸ்டீன் தெளிவுபடத் தன் கருத்துக்களை எழுதியுள்ளார்.
விஞ்ஞானியின் மனப்பான்மைக்காகவும், மனித நேய மிக்க ஒரு மாமனிதரின் எண்ணங்களுக்காகவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதங்களை அனைவரும் படிக்க வேண்டியது இன்றியமையாததாக ஆது.
****
.