
கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி! (Post No.7379)
written by S Nagarajan
Post No.7379
Date uploaded in London- 25-12-2019
contact – swami_48@yahoo.com
pictures are used from various sources; thanks.
ச.நாகராஜன்

தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உலகோர் வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டவை. சில சிற்பங்களைப் பார்க்கும் போது சிற்பிகளே வியந்து போற்றும் கோவில்கள் பல உள்ளன.
சிற்ப வேலைகளைச் செய்ய முன் வரும் சிற்பிகள் இந்தக் கோவில்களைத் தவிர வேறு எந்தக் கோவில் சிற்பமானாலும் செய்வோம் என்று சொல்லும்படியான கோவில்களில் தாரமங்கலம் – தாடிக்கொம்பு கோவில்களில் உள்ள சிற்பங்கள் அற்புதமானவை.
தாரமங்கலம் கோவிலின் முன் மண்டபத்தில் ஒரு தூணில் ராமரும் இன்னொரு தூணில் வாலியும் செதுக்கப்பட்டிருக்கின்றனர்.
வாலியின் சிலை அருகில் சென்று கண்ணைப் பொருத்திப் பார்த்தால் ராமர் தெரிவதில்லை.
ராமரின் சிலையின் அருகில் சென்று கண்ணைப் பொருத்திப் பார்த்தால் வாலி தெரிகிறான்.
மறைந்திருந்து ராமர் வாலியை வதம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்றே! அதை சிற்பக் கலையில் நிஜமாகவே வடித்துக் காட்டி இருப்பதை அதிசயத்துடன் இன்றும் பார்க்க முடிகிறது.
இதே போலத் திருச்செங்கோட்டிலும் (திருநண்ணா), பவானியிலும் பல கற்பணிகள் நடந்துள்ளன. அங்கு பல கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவாபரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.அர்ச்சர்கர்களுக்குத் திருமடம் அளிக்கப்பட்டுள்ளது. வேதாகம பாடசாலை வைத்துக் கல்வி கற்பித்ததோடு அதில நன்கு படித்துத் தேறியவர்களுக்கு விசேஷ பரிசுகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன; திருவிழாவும் நடத்தப்பட்டிருக்கிறது.
ஆற்றூர், அந்தியூர் ஆகிய இடங்களில் கோட்டைகள், ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வணங்காமுடிக் கட்டி முதலி, சீயாலகட்டி முதலி, இம்முடிக்கட்டி முதலி என பல தலைமுறையினர் தாரமங்கலம் முதலிய பல இடங்களைக் கட்டி ஆண்டிருக்கிறார்கள்.
பாண்டியர், நாயக்கர்,மைசூர் அரசர்கள் காலத்தில் இவர்கள் வீரத்துடன் திகழ்ந்து போற்றப்பட்டிருக்கின்றனர்.
வேளாள வகுப்பினரின் திருப்பணி பற்றி திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, சேலம் மானுவல் (Salem Manual), கெஜட், கோயமுத்தூர் மானுவல் ஆகியவற்றில் அவர்களது சரித்திரத்தைப் பார்க்கலாம்.
அவர்கள் பற்றிய கற்சாசனங்களும் கூட வெவ்வேறு இடங்களில் உள்ளன.
இப்படிப்பட்ட அரிய வீரர்களுள் கட்டி முதலியும் ஒருவர்.
கொங்கு மண்டல சதகம் தனது 74ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது.
பாடல் இதோ:-
கற்றார் வியப்புறு கற்பணிக் கோயில் கமலநன் னீர்
வற்றா துயரட்டக் கோணக் குளமும் வகுத்ததன்றிச்
சுற்றார் சதுரங்கம் வில்கயல் வேங்கை தொடர் கொடிகள்
மற்றார்க் கிலையெனப் பெறுகட்டி யுங்கொங்கு மண்டலமே
-கொங்குமண்டல சதகம் பாடல் 74
பாடலின் பொருள் :- சிற்ப நூல் வல்லுநர்கள் வியப்புறும் வண்ணம் கற்பணிக் கோவிலும் எண்கோண வடிவில் குளமும் செய்ததோடு மட்டுமன்றி, சதுரங்கம், வில், மீன், புலி ஆகிய விருதுக் கொடிகளையும் மற்றவர்க்கு இல்லை என்னும்படியாக, சிறப்பாகக் கொண்ட கட்டி முதலியும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாகும்.
***


krishnamoorthys
/ December 25, 2019அற்புதமான விசயங்கள் .
இதில் சில வீரர்கள் அரோகணித்து இருக்கும் யாளி என்ற விலங்கினத்தைப் பற்றி ஏதேனும் ஆய்வுகள் இருந்தால் எங்களுக்குச் சொல்லுங்கள் .நன்றி.
Santhanam Nagarajan
/ December 25, 2019நன்றி.
இருக்கிறது. ஒரு தனிக் கட்டுரையாகத் தருகிறேன் – விரைவில்