மஹரிஷி அஸிதர்! (Post No.7462)


WRITTEN BY S NAGARAJAN

Post No.7462

Date uploaded in London – 17 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

பிரம்மாவின் புதல்வர் பிரசேதஸ்.

பிரசேதஸின் குமாரர் அஸிதர். அஸிதர் தனக்கு புத்திரன் இல்லாததால் பெரிதும் வருத்தமுற்றார். தனது பத்னியுடன் ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்தார். ஆனால் பலனில்லை.

தனது இஷ்டம் நிறைவேறாததால் தான் வாழ்ந்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்தார். அதற்கு அவர் யத்தனித்தபோது ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.

ஆகாயவாணி கூறினாள் : “அஸிதரே! நீர் உயிரை விட வேண்டாம். ஈஸ்வரருடைய சந்நிதானத்திற்குச் செல்லும். அவர் உபதேசிக்கும் மந்திரத்தை சித்தி செய்தால் உடனே அந்த மந்திரதேவதை பிரத்தியக்ஷமாகத் தோன்றும். அந்த தேவதையின் வரப்பிரசாதத்தினால் உமக்கு நிச்சயமாக புத்திர சந்தானம் உண்டாகும்”

இதைக் கேட்ட அஸிதர் மனம் மிக மகிழ்ந்தார்.

யோகிகளுக்கும் அரிதான சிவ லோகத்திற்குத் தன் பத்தினியுடன் சென்று சிவனை தரிசித்து மிகுந்த வணக்கத்துடன் துதிக்கலானார். அவரது ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்த பரமசிவன், “ஓ! முனி ச்ரேஷ்டரே! உமது கோரிக்கையை நான் அறிவேன். எனக்குச் சமமாக உடைய ஒரு குமாரன் உமக்கு உண்டாகப் போகிறான். பதினாறு அட்சரங்களுள்ள ஒரு அருமையான மந்திரத்தை உமக்கு உபதேசிக்கிறேன்” என்று சொல்லி அவருக்கு அந்த மந்திரம், ஸ்தோத்திரம், பூஜா விதிகள், கவசம் ஆகியவற்றை உபதேசித்து அருளினார்.

அஸிதர் பரமசிவனிடமிருந்து அரிய மந்திரங்களைப் பெற்று அவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டார். நூறு வருட காலம் அந்த மந்திரங்களை ஜெபித்து வந்தார்.

பிறகு அந்த மந்திரங்களின்  மஹிமையினால் சிவனுடைய அம்சத்தைப் பெற்றவராகவும், பிரம்ம தேஜஸ் உள்ளவராகவும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவராகவும் உள்ள தேவவர் என்ற புத்திரனை அடைந்தார்.

தேவவர் பெரும் தவத்தை மேற்கொண்டு புகழ் பெற்றார். அவர் பின்னால் அஷ்டாவக்ரர் என்ற பெயரைப் பெற்றார். இவரது சரித்திரமும் சுவையான ஒன்று. அதைப் பின்னர் பார்ப்போம்.

***

மஹரிஷி அஸிதருடைய சரிதம் பிரம்ம-வைவர்த்த புராணத்தில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

Tags  —  மஹரிஷி,  அஸிதர்

*

Leave a comment

Leave a comment