
WRITTEN BY S NAGARAJAN
Post No.7920
Date uploaded in London – – – 4 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கத்தி முனை உன் பக்கமும், கைப்பிடி எதிரிலிருப்பவரிடமும் இருக்க வேண்டும்!
ச.நாகராஜன்
ஸ்வாமி துரியானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களுள் ஒருவர்.

அவரின் வாழ்க்கைச் சரிதம் அற்புதமான ஒன்று. சுவையான சம்பவங்கள் நிறைந்தது.
அதில் சில சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.
ஹரிநாத் சட்டோபாத்யாயா கல்கத்தாவின் வட பகுதியில் 1863, ஜனவரி 3-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு மூன்று வயது ஆகும் போது அவரின் தாயார் மறைந்தார். 12 வயதில் அவர் தந்தையை இழந்தார். பின்னர் அண்ணன், மன்னி ஆதரவில் வளர்ந்து வந்தார்.
பதிமூன்று அல்லது பதிநான்கு வயதிருக்கும், ஒரு நாள் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை கல்கத்தாவில் தீனநாத் பாசுவின் வீட்டில் சந்தித்தார்.
அந்த தரிசனம் அவரை ஈர்த்து ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் ஒன்றச் செய்தது.
அவர் பின்னாளில் ஸ்வாமி துரியானந்தர் ஆனார்.
59 வயது வாழ்ந்த ஸ்வாமி துரியானந்தர் பல செயற்கரிய செயல்களை ஆற்றி கல்கத்தாவில் 21-7-1922 அன்று மாலை 6.45 மணிக்கு நிர்வாண நிலையை எய்தினார்.
அதற்கு முதல் நால் ஸ்வாமிஜி தனது அருகிலிருந்தவர்களிடம், “ நாளை தான் எனக்கு கடைசி தினம்” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அதன் படியே நடந்தது!
ஸ்வாமி விவேகானந்தர் மேற்கில் வெற்றி யாத்திரையை முடித்துக் கொண்டு 1897ஆம் வருட ஆரம்பத்தில் கல்கத்தா திரும்பினார். 1897, மே மாதம் முதல் நாள் அவர் ராமகிருஷ்ண மிஷனைத் துவங்கினார்.
ஸ்வாமி துரியானந்தர் விவேகானந்தருடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார்.
தவ வாழ்க்கை வாழ்வதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது.
ஒரு நாள், ஸ்வாமி விவேகானந்தர் துரியானந்தரை நோக்கி, “பரமஹம்ஸரின் பணிக்காக என் இறுதி வரை ஒவ்வொரு துளியாக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை நீ பார்க்கவில்லையா? அதை வெறுமனே நீ பார்த்துக் கொண்டே இருப்பாயா? எனது சுமையைச் சற்று இறக்கி விட மாட்டாயா?” என்று கேட்டார்.
துரியானந்தர் மனம் உருகினார்.
விவேகானந்தர் கூறிய படி 1899இல் ஜூன் மாதம் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். அங்கு பெரும் பணி ஆற்றினார்.
அமெரிக்கா செல்லும் முன்னர் சகோதரி நிவேதிதையை நோக்கி துரியானந்தர், “எனக்கு மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் தெரியாதே! அது பற்றிக் கொஞ்சம் சொல்லக் கூடாதா” என்றார்.
நிவேதிதை அவரை நோக்கி, “ஐயனே! எப்பொழுதெல்லாம் நீங்கள் ஒருவருக்கு எதையேனும் கொடுக்க முற்படுகிறீர்களோ அப்போதெல்லாம் வசதியற்ற, விரும்பத்தகாத பக்கங்களை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். கத்தியின் கூர்மையான முனை இருக்கும் பக்கத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு கைப்பிடியை எதிரிலிருப்பவரிடம் கொடுக்க வேண்டும், அவ்வளவு தான்!” என்றார்.
அதன்படியே அவர் அமெரிக்காவில் சீடர்களுக்கு ஒவ்வொரு கணமும் தன் வசதியை அறவே துறந்து விட்டு அவர்களின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்தும் செலுத்தினார்.
சின்னச் சின்ன பழக்கங்களையும் அவர் மிருதுவாக அமெரிக்க சீடர்களுக்குச் சொல்லித் தந்தார்.
ஒரு முறை சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு பெண்மணி அவரது வேதாந்த வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வந்து கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியின் கணவனுக்கோ இது சற்றும் பிடிக்கவில்லை.

இதை அறிந்து கொண்ட துரியானந்தர் அவரிடம், “ ஒரு மனைவியானவள் கணவனின் விருப்பப்படி அவருக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும். அடிக்கடி இங்கு வர வேண்டாம். இங்கு என்ன கற்றுக் கொள்கிறாய் என்பதை கணவனிடம் கூறு. தேவியை பிரார்த்தனை செய். எல்லாம் சரியாகும்” என்று அறிவுறுத்தினார்.
ஆனால் கணவனுக்கோ மனைவி துரியானந்தர் வகுப்புகளுக்கு வருவது பிடிக்கவே இல்லை.
ஒருநாள் துரியானந்தர் அந்தப் பெண்மணியிடம், “உன் கணவனை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.
“ஐயையோ! அது மட்டும் வேண்டாம்” என்று அவர் அலறினார்.
ஆனால் துரியானந்தர் ஒரு நாள் அவர் இல்லம் சென்றார். அவரது கணவனைப் பார்த்து கைகுலுக்கினார்.
என்ன ஆச்சரியம்! அந்த ஒரே கைகுலுக்கலுடன் கணவனின் வெறுப்பு மறைந்தது. மனைவி வழக்கம் போல வேதாந்த சொஸைடிக்கு வரலானார்.
ஒவ்வொருவரின் மனப்பக்குவம், பழக்க வழக்கத்திற்குத் தக்கபடி அறிவுரை கூறுவது அவர் பழக்கம்.
ஒரு பெண்மணிக்கு அதீத உளவியலில் ஆர்வம் அதிகம். அவர் ஆவிகளுடன் பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
அவரது விசேஷ திறமை ஆடோமேடிக் ரைட்டிங் எனப்படும் ஆவி கைகளின் வழியே எழுதும் முறையில் விகசித்தது.
சிறிது நேரம் ஓய்வாக இருந்த பின்னர் அவர் கைகளில் இருக்கும் பென்சில் தானே பேப்பரின் மீது எழுத ஆரம்பிக்கும்.
ஒரு நாள் இதைப் பார்த்த துரியானந்தர் அவரிடம், “ என்ன முட்டாள்தனம்! பிசாசுகளின் கட்டுப்பாட்டில் நீ இருக்க விரும்புகிறாயா, என்ன? இந்த முட்டாள்தனத்தை அடியோடு விடு. நாம் விரும்புவது முக்தி! இந்த உலகத்தை மட்டுமல்ல, எல்லா உலகங்களையும் கடந்து செல்ல நாம் விரும்புகிறோம். இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள ஏன் நீ விரும்புகிறாய்? அவர்களை அமைதியுடன் இருக்க விடு. இதெல்லாம் மாயையே! மாயையை விடு. சுதந்திரமாக இரு” என்றார்.
அன்றுடன் அந்தப் பெண்மணி தன் ஆவி உலகத் தொடர்பை விட்டார்.
இன்னொரு பெண்மணி சமைக்கும் போது உப்பு சரியாகப் போட்டிருக்கிறோமா என்பதைச் சரி பார்க்க உணவில் ஒரு சிறிய பகுதியை எடுத்து சுவைத்துப் பார்த்தார்.
இதைக் கவனித்த துரியானந்தர் அவரிடம் சென்று, “சமைக்கும் போது உணவை ருசி பார்ப்பது இந்தியாவில் வழக்கமே இல்லை. ஏனெனில் அது சமைக்கப்பட்டவுடன் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நமது குடும்பத்திற்காக நாம் சமைக்கவில்லை. இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் சமைக்கிறோம். குளித்து, ஆடை அணிந்து இறைவனைத் துதித்த பின்னரே சமையலறைக்குள் நுழைவது இந்தியரின் பழக்கம்” என்றார்.
ஒவ்வொரு சிறு செயலையும் அவர் தன் மேலை நாட்டு சீடர்களுக்கு மிருதுவான குரலில் அன்பைக் குழைத்துக் கற்றுத் தந்தார்.
தினந்தோறும் காலை எழுந்தவுடன் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை அவர் ஓதுவார்; பின்னர் தான் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்வார்.
1909ஆம் ஆண்டு கங்கைக் கரையோரம் இருந்த நகோல் என்ற இடத்திற்கு அவர் சென்றார். 1910ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை அங்கு இருந்தார். ஹரித்வாரின் கீழே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள கிராமம் நகோல். அதைச் சுற்றி ஒரே காடுகள். இந்தக் காட்டினுள் நுழைந்து சென்று தவம் செய்வது துரியானந்தரின் வழக்கம்.
ஒரு நாள் பாறை ஒன்றின் மீது அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். கண் விழித்த போது ஜொலிஜொலித்த இரு கண்கள் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தன. பெரிய புலி ஒன்று அவருக்குச் சற்று தூரத்தில் இருந்தது. முதலில் திடுக்கிட்ட துரியானந்தர் அதைக் கூர்ந்து பார்த்தார். புலி அங்கிருந்து அகன்றது.
என்ன நடந்தது என்று கவலையுடன் கேட்டவர்களிடம் அவர் கூறினார் : “அது என்னைப் பார்த்தது. நானும் நகராமல் அதைப் பார்த்தேன். ஒரு தாவு தாவி அது ஓடி விட்டது” என்றார்.
அவரது வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்களை ஸ்வாமி ரிடஜானந்தா ஸ்வாமி துரியானந்தா என்ற நூலில் எழுதியுள்ளார்.

படித்தால் பரவசமூட்டும் நூல் இது!
Tags – துரியானந்தர் , கத்தி முனை , உன் பக்கம்
***