
WRITTEN BY R. NANJAPPA
Post No.7961
Date uploaded in London – – – 12 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 34 – அதிக எண்ணிக்கை? எச்சரிக்கை!
R. Nanjappa
அதிக எண்ணிக்கை? எச்சரிக்கை!
முன்பெல்லாம் நீருக்காக ஆற்றுக்கோ, குளம் குட்டைக்கோ போகவேண்டும். வீட்டில் கிணறு இருந்தால் இறைத்துக் கொள்ளலாம். அது நம் வசத்தில் இருந்தது. இன்று குழாயில் நீர் வருகிறது. வரும்போது பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் எத்தகைய நீர் வருகிறது? அப்படியே அருந்துவதற்கில்லை. வடிகட்ட வேண்டும்.
அதுபோல் இன்று இசை டி.வி, இன்டர்னெட் வாயிலாக வீடுதேடி வருகிறது 24X7. ஆனால் அதன் தரம்? இங்கு எந்த “ஃபில்டர்” போடுவது? சில உரைகல் தேவை. நல்ல திரை இசைக்கு ஒரு அளவுகோலாக இருப்பது அதன் பொற்காலத்திய இசை.- 50களில் வந்த இசை.
திரை இசையின் தரம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் எண்ணிக்கை! வருடத்தில் நூற்றுக் கணக்கில் படங்கள் வருகின்றன, ஒவ்வொன்றிலும் சுமார் 7-8 பாடல்கள்! அதே சில இசைஞர்கள்! அவர்களும் என்ன செய்வார்கள்?
பொற்காலத்திற்கு முன் வந்த இசைஞர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நௌஷத்-50 வருஷங்களில் சுமார் 65 படங்களுக்கு இசையமைத்தார். எஸ்.டி பர்மன் அதே ஆண்டுகளில் 95 படங்கள். அனில் பிஸ்வாஸுக்கு அதே சமயத்தில் 90 படங்கள். ஸி.ராம்சந்த்ராவுக்கு 30 ஆண்டுகளில் 104 படங்கள். ஷங்கர்-ஜெய்கிஷனுக்கு 22 ஆண்டுகளில் (ஜெய்கிஷன் இருந்தவரை) சுமார் 130 படங்கள். வசந்த் தேசாய்க்கு 46, ஜெய்தேவுக்கு 40, ஸலில் சவுத்ரிக்கு 75 படங்கள். ரோஷன், ஹேமந்த் குமார் போன்றவர்களுக்கு சுமார் 50 தான். இவர்கள் இசையமைத்த பாடல்களை இன்னமும் விரும்பிக் கேட்கிறார்கள்.
பிறகு வந்தவர்களைப் பாருங்கள்.ஆர்.டி.பர்மனுக்கு 25 வருஷங்களில் 300 படங்கள்; கல்யாண்ஜி-ஆனந்த்ஜீக்கு சுமார் 300 படங்கள்; லக்ஷ்மீகாந்த்-பியாரேலாலுக்கு 635 படங்கள்! தரம் எங்கிருந்து வரும்? இவர்கள் இசையமைத்த பாடல்களில் எத்தனை நினைவில் இருப்பவை? விரல்விட்டு எண்ணலாம்.
மலைக்கள்ளன் படத்தை ஹிந்தியில் “ஆஃஜாத்” என்ற பெயரில் எடுத்தார் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. இசைக்கு நௌஷத்தை அணுகினார். மூன்றுமாதத்தில் இசை தயாராக வேண்டுமென்றார். “வந்த வழியைப் பாரும், நான் ஃபேக்டரி இல்லை” என்று சொல்லிவிட்டார் நௌஷத்!. அப்போதைக்காக இசையமைப்பதில்லை என்பது அவர் கொள்கை. ஒரு படம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க முடியாது. சில நடிகர்-நடிகையர் முகத்தையே திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்துச் சகிக்க முடியும்? எத்தகைய படமும் அதிக நாள் நினைவிலிருக்காது, நல்ல இசை நிலைத்து இருப்பது!
பாடகர்களின் நிலையும் அதுதான்- அதிகம் பாடப்பாட தரம் தாழ்ந்து போகிறது!. ரஃபி சுமார் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார்; கிஷோர் பாடியவை 2700; மன்னாடே 4000 (வங்காளிப் பாடல்களும் சேர்ந்து) முகேஷ் 1300, தலத் மஹ்மூத் 800; ஹேமந்த் குமார் இன்னமும் குறைவு. தலத் பாடிய பாடல்களில் 80% சிறந்தவை; முகேஷ் பாடல்களில் 25% சிறந்தவை எனலாம். ஹேமந்த் குமார் பாடியவற்றில் 90% சிறந்தவை எனலாம். ஆனால் ரஃபி, விஷயத்தில் 5%, கிஷோர், மன்னா டே விஷயத்தில்? 10% தேறினால் அதுவே அதிகம்! இதற்கு பாடகர்களைக் குற்றம் சொல்லவேண்டாம். அவர்களை அப்படிப் பாட வைக்கிறார்கள்! உண்மையில் கிஷோர் குமாருக்கு இந்த நிலை பிடிக்கவில்லை-80களில் இசையின் தரம் சரிந்து வருவது கண்டு, பாடுவதை நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கே திரும்பிப் போக நினைத்தார்- பாவம், உலகை விட்டே கிளம்பி விட்டார்.
சில பாடல்களே பாடியிருந்தாலும் சிலர் பாடிய பாடல்கள் 60 ஆண்டுகள் கழித்தும் நினைவில் நிற்கின்றன. அத்தகைய இரு பாடல்களைப் பார்ப்போம்.

சுப் ஹை தர்தி
चुप है धरती, चुप हैं चाँद सितारे
मेरे दिल की धड़कन तुझको पुकारे
खोये खोये से ये मस्त नज़ारे ठहरे ठहरे से यह रंग के धारे
ढूंड रहे हैं तुझको साथ हमारे
चुप है धरती …
आअ हा
कोने कोने मस्ती फैल रही है, बाहें बनकर हस्ती फैल रही है,
तुझ बिन दूबे दिल को कौन उभारे,
चुप है धरती …
निखरा निखरा स है चाँद का जौवन, बिखरा बिखरा स है
नूर का दामन,
आजा मेरी तन्हायी के सहारे
चुप है धरती …
சுப் ஹை தர்தி, சுப் ஹை சாந்த் ஸிதாரே,
மேரே தில் கீ தட்கன் துஜ் கோ புகாரே
பூமி முழுவதும் அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது
வானிலும் நிலவும் தாரகைகளும் அமைதியில் மூழ்கிவிட்டன.
இந்த அமைதியில் என் மனம் உனக்காக ஏங்கி நிற்கிறது!
கோயே கோயே ஸே யே மஸ்த் நஃஜாரே,
டஹரே டஹரே ஸே யஹ் ரங்க் கே தாரே
டூண்ட் ரஹே ஹை(ன்) துஜ் கோ ஸாத் ஹமாரே
சுப் ஹை தர்தீ…
சுற்றுப்புறம் எங்கும் ஆனந்தக் களிப்பில் அமிழ்ந்து கிடக்கிறது
அதன் வண்ண வெள்ளம் அங்கங்கே தங்கி நிற்கிறது
நீ உடன் இருக்கவேண்டுமென மனம் தேடுகிறது
கோனே கோனே மஸ்தீ ஃபைல் ரஹீ ஹை
பாஹே(ன்) பன்கர் ஹஸ்தீ ஃபைல் ரஹீ ஹை
துஜ் பின் டூபே தில் கோ கௌன் உபாரே
சுப் ஹை தர்தீ சுப் ஹை .
.மகிழ்ச்சி அலை ஒவ்வொரு இடத்திற்கும் பரவுகிறது
மகிழ்ச்சி தன் கரங்களை விரித்து அணைக்க விழைகிறது
உன்னைத் தவிற வேறு யார் என் மனதை ஊக்குவிக்க முடியும்?
நிக்ரா நிக்ரா ஸ ஹை சாந்த் கா ஜௌபன்,
பிக்ரா பிக்ரா ஸ ஹை நூர் கா தாமன்
ஆஜா மேரீ தன்ஹாயீ கே ஸஹாரே
சுப் ஹை தர்தீ, சுப் ஹை சாந்த் ஸிதாரே
இளமை தவழும் சந்திரன் புதிய பொலிவுடன் விளங்குகிறது
அதன் கிரணங்கள் எங்கும் பரவியிருக்கின்றன
என் தனிமைக்குத் துணையாக இங்கே வா!
பூமி முழுவதும் அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது…
Song: Chup hai dharti Film: House No.44 1955 Lyricist: Sahir Ludhianvi
Music S.D.Burman Singer: Hemant Kumar
சந்திரனைப் பற்றிச் சொல்லும் காதல் பாட்டுக்களை எண்ணுவது கஷ்டம்! அவற்றில் இப்பாட்டு ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறது! (‘ஜால்” படப் பாட்டு போல- அதுவும் இதே பாடகர்-கவி-இசைஞர் கூட்டு)
மிக அருமையான கவிதை- ஹிந்தியும் உருதும் பயின்று வருகின்றன. “நிக்ரா நிக்ரா ஸ ஹை சாந்த் கா ஜௌபன், பிக்ரா பிக்ரா ஸ ஹை நூர் கா தாமன்” இந்தக் கவிதைக்கே சிகரமாக வரும் வரிகள்!
ஹேமந்த் குமாரின் குரலில் இப்பாட்டிற்குத் தனிமெருகேறுகிறது!
இப்படத்தில் ஹேமந்த் குமார், தேவ் ஆனந்திற்காக மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார்- மூன்றும் டாப் ஹிட் ஆனவை. ஒரு ஹீரோவுக்கு ஒரு குரல் என்ற விதிக்கு எஸ்.டி பர்மன் என்றும் கட்டுப்பட்டவரல்ல. ஒரே படத்தில் ஹேமந்த் குமார், ரஃபி, மன்னாடே, கிஷோர் குமார் என எவரையும் பாடவைப்பார். சில பாடல்களே பாடியிருந்தாலும் ஹேமந்த் குமார் பாடல்கள் நினைவில் நிற்பவை.

மன்ஃஜில் வஹீ ஹை ப்யார் கீ
मंज़िल वही है प्यार की, राही बदल गए
सपनों की महफ़िल में हम–तुम नए
मंज़िल वही है प्यार की, राही बदल गए
दुनिया की नज़रों से दूर, जाते हैं हम–तुम जहाँ
उस देश की चाँदनी गाएगी ये दास्ताँ
मौसम था वो बहार का, दिल थे मचल गए
सपनों की महफ़िल में हम–तुम नए
मंज़िल वही है प्यार की, राही बदल गए
छुप ना सके मेरे राज़, नग़्मों में ढलने लगे
रोका था फिर भी ये दिल पहलू बदलने लगे
ये दिन ही कुछ अजीब थे, जो आज–कल गए
सपनों की महफ़िल में हम–तुम नए
मंज़िल वही है प्यार की, राही बदल गए
மன்ஃஜில் வஹீ ஹை ப்யார் கீ ராஹீ பதல் கயே
ஸப்னோ(ன்) கீ மஹஃபில் மே, ஹம்–தும் நயே
காதலின் இலக்கு அதுவாகவே இருக்கிறது,
ஆனால் அந்தப் பாதையில் பயணிகள் மாறிவிட்டனர்!
இந்தக் கனவுக் களிப்பில் நாம் இருவரும் புதியவர்கள்!
துனியா கே நஃஜ்ரோ(ன்) ஸே தூர், ஜாதே ஹை ஹம்–தும் ஜஹா(ன்)
உஸ் தேஷ் கீ சாந்த்னீ காயேகீ யே தாஸ்தா(ன்)
மௌஸம் தா வோ பஹார் கா, தில் தே மசல் கயே
ஸப்னோ(ன்) கீ மஹஃபில் மே ஹம்–தும் நயே
மன்ஃஜில் வஹீ ஹை ப்யார் கீ
.
நாம் உலகின் பார்வையிலிருந்து வெகுதூரம் போகிறோம்
அங்கு வீசும் நிலவொளி இந்தக் கதையைப் பாடும்—
அது வஸந்த காலம், மனம் மகிழ்ச்சியில் துள்ளியது
கனவின் இந்தக் களிப்பில், நாம் இருவரும் புதியவர்கள்!….
சுப் ந ஸகே மேரே ராஃஜ். நக்மோ மே டல்னே லகே
ரோகா தா ஃபிர் பீ யே தில் பஹ்லூ பதல்னே லகே
யே தின் பீ குச் அஜீப் தே ஜோ ஆஜ்–கல் கயே
ஸப்னோ(ன்) கீ மஹ்ஃபில் மே ஹம் தும் நயே
என் ரகசியத்தை மறைத்துவைக்க முடியவில்லை–
பாட்டில் வெளிவந்து விட்டது!
மனதை அடக்கினாலும், மாற்றம் முகத்தில் தெரிகிறதே
இந்த சமீப நாட்கள் வித்தியாஸமானவை தான்!
Song: Manzil wohi hai pyar ka Film: Kathputli 1957 Lyrics: Shailendra
Music: Shankar Jaikishan Singer: Subir Sen
இந்தப் பாடலை அசப்பில் கேட்பவர்கள் பாடியது ஹேமந்த் குமார் என நினைப்பார்கள்! சுபீர் சென் குரல் ஹேமந்த் குமார் குரல் போலவே இருக்கும்- மிகவும் கவனித்துக் கேட்டால்தான் வித்தியாசம் தெரியும்!
ஹேமந்த் குமார் குரலில் இருக்கும் ஆழம், கம்பீரம் இதில் இல்லை. ஆனால் இந்தப் பாட்டு இவருக்குப் பொருந்தியிருக்கிறது. இவரை குரு தத் பம்பாய்க்கு வரவழைத்தார் என்பர். இது இவர் பாடிய முதல் பாட்டு- இதற்குப் பிறகு பிரபலமானார். வங்காளத்திலும் பாடினார். ஆனாலும் இவர் ஹேமந்த் குமாரின் சமகாலத்தவரானதால் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்தப் பாடல் ஒரு Stunning composition. படத்தில் ஒரு முக்கிய இடத்தில் வருகிறது-சில விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது, அருமையான கவிதை வழக்கம் போல் பழகு ஹிந்தியில் எழுதிவிட்டார் ஷைலேந்த்ரா!
இந்தப் படத்தில் ஷங்கர்-ஜெய்கிஷனின் இசை அபாரம்! இவர்களே சுபீர் சென்னுக்குப் பல படங்களில் பாட வாய்ப்பளித்தனர். இவர் ஆஸ் கா பஞ்சீ படத்தில் பாடிய “தில் மேரா ஏக் ஆஸ் கா பஞ்சீ” என்ற பாட்டும் பிரபலம்.
நான் தமிழில் படித்த முதல் ஹிந்தி பட விமர்சனம் இதைப் பற்றியது தான்! 1957ல் தினமணி கதிரில் [அப்போது ஞாயிற்றுக்கிழமை இதழுடன் வரும்] இதை விமர்சனம் செய்திருந்தார்கள். முக்கியமாக இசையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். பாடல்களை ரேடியோ சிலோனில் கேட்போம்.
நான் சினிமா விமர்சனம் செய்வதில்லை, அதிகம் சினிமாவும் பார்ப்பதில்லை- பாட்டு கேட்பதோடு சரி! ஆனால் இந்த விமர்சனம் பள்ளி நாட்களில் படித்ததால் இது மனதிலிருந்தது-1966ல் படம் பார்க்கக் கிடைத்தது. இது அமியா சக்ரவர்த்தி எடுத்த படம் [அவரது பிற படங்கள் தாக், பதீதா ஸீமா மூன்றிலும் ஷங்கர் ஜெய்கிஷன் இசையே- நல்ல குறிப்பிடத் தகுந்த பாடல்கள் இருக்கும்] அவரே இயக்கினார், இடையில் காலமானார். வேறொருவர் முடிக்கவேண்டியதாயிற்று. இந்தக் குழப்பத்தில் படம் சரியாக அமையவில்லை. [இந்தக் குழப்பத்திற்கு இந்தப் பாட்டும் ஒரு காரணம்!] ஆனால் சிறந்த இசை. இதில் வைஜயந்திமாலாவின் அருமையான நடனங்கள், கமலா லக்ஷ்மண் டான்ஸும் கூட!
சுபீர் சென் கதை பாடகர்களாக விரும்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஒருவர் குரலில் தனித்தன்மை-ஏதாவது விசேஷ அம்சம் இருக்கவேண்டும்! வேறொருவர் குரல் போல இருந்தால் எடுபடுவதில்லை. ஹிந்தி இசையில் பாடகிகளில் சுமண் கல்யாண்பூருக்கும் இதே கதிதான் நேர்ந்தது! அவர் குரல் அசப்பில் லதா குரல் மாதிரியே இருக்கும்-அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை! இது ஒரு துயர நிலை. வேண்டுமென்றே வேறொருவரைப்போலப் பாடுவது ஒன்று, இயல்பாகவே குரல் அப்படி அமைந்திருப்பது ஒன்று! இரண்டும் திரையிசையில் எடுபடுவதில்லை!

ஹேமந்த் குமார், சுபீர் சென் போன்றவர்கள் அதிகம் பாடவில்லை, ஆனால் அவர்கள் பாடிய பாட்டுக்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. எண்கள் முக்கியமில்லை- தரமே நிலைக்கும்.
It is not growing like a tree
In bulk, doth make man better be;
Or standing long an oak, three hundred year,
To fall a log at last, dry, bald, and sere:.
In small proportions we just beauties see
And in short measures life may perfect be.
-Ben Jonson, 1640
tag –ஹிந்தி படப் பாடல்கள் – 34
xxx subham xxx