சிவபிரான் பாம்பை அணிந்தது ஏன்? (Post No.7983)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7983

Date uploaded in London – – – 16 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

By ச.நாகராஜன்

பலபட்டடைச் சொக்கநாதப் புலவருக்கு ஒரு கசப்பான அனுபவம் ஒரு தட்டானுடன் ஏற்பட்டது போலும்!

அதை மனதில் வைத்துப் புழுங்காமல் ஒரு பாடலைப் பாடி விட்டார்.

சிவ பக்தரான அவருக்கு வந்தது ஒரு சந்தேகம் – செம்பொன் மேருமலையைக் கொண்ட சிவபிரான் அப்படிப்பட்ட சொக்கத் தங்கமே மலை போல் குவிந்திருக்க அதிலிருந்து ஒரு துளியைக் கூட ஆபரணமாகச் செய்து அணியாமல் பாம்பை ஏன் அணிய வேண்டும்?

சிந்தித்தார், கிடைத்தது ஒரு விடை. அதைப் பாடலாகப் பாடினார் இப்படி:

ஒட்டாக ஒட்டியுங் காற்பொன்னின் மாப்பொன் னுலோபமதாய்,

வெட்டாதி ரான்பணி செய்யாதிரான் செம்பொன் மேருவினைக்

கட்டாகக் கட்டிக் கடுகள வாய்நிறை காட்டவல்ல

தட்டானுக் கஞ்சியல் லோவணிந் தான்சிவன் சர்ப்பத்தையே

பாடலின் பொருள் :

ஒட்டாக ஒட்டியும் – பற்று உண்டாக ஒட்டியும்

கால் பொன்னில் – கால் வராகன் எடையுள்ள பொன்னில்

மாப்பொன் – ஒரு மா வராகன் எடைப் பொன்னை

உலோபமதாய் வெட்டாது இரான் – லோபமாக ஏமாற்றாமல் இருக்க மாட்டான்

பணி செய்யாதிரான் – ஆபரணங்களைச் செய்யாமல் இருக்க மாட்டான்

செம்பொன் மேருவினை – செம்பொன் மலையாகிய மேரு மலையை

கட்டாகக் கட்டி – கட்டாகக் கட்டி

கடுகு அளவாய் – ஒரு சிறு கடுகின் அளவாக

நிறை காட்டவல்ல – எடையைக் காட்ட வல்ல

தட்டானுக்கு அஞ்சி அல்லோ – தட்டானுக்குப் பயந்து  அல்லவா

அணிந்தான் சிவன் சர்ப்பத்தையே – சிவபிரான் பாம்பை அணிந்தான்!

வெள்ளி மலை, பொன் மலை ஆகியவற்றைக் கொண்ட சிவபிரான்,அதை ஆபரணம் செய்ய தட்டானிடம் கொடுத்தால் அவன் அதைத் தட்டித் தட்டிக் கடுகளவாகக் காண்பிப்பான் என்பதற்கு பயந்தே, பாம்பைத் தன் ஆபரணமாக அணிந்தான் போலும்!

*

பாண்டியன் சிவபிரானைப் பிரம்பால் அடித்ததை நினைத்து வருந்தினார் புலவர்.

பாடல் பிறந்தது இப்படி:-

மண்ணென்ற மண்டல மெல்லாம் புரக்கும் வழுதி சற்றும்

தண்ணென்ற நெஞ்சந் தரித்தில னேதனு வேடனெச்சில்

உண்ணென்ற போதுண் டவர்சொக்கர் பாதியுடலம்பச்சைப்

பெண்ணென் றறிந்து மடித்தா னெவ்வாறு பிரம்பு கொண்டே!

பாடலின் பொருள் :

மண்ணென்ற -மண் உலகம் என்று சொல்லப்பட்ட

மண்டலம் எல்லாம் – ராஜ்யத்தை எல்லாம்

புரக்கும் வழுதி  – காக்கின்ற பாண்டிய மன்னன் வழுதி

சற்றும் தண்ணென்ற நெஞ்சம் தரித்திலனே  – சற்றாவது குளிர்ந்த மனத்தை உடையவனாக இல்லாமல் இருக்கிறானே!

தனு வேடன்  -வில்லைக் கொண்ட வேடனாகிய கண்ணப்பன்

எச்சில் உண் என்ற போது உண்டவர் சொக்கர் – எச்சிலை உண் என்று சொன்ன போது அதை உண்டவர் சொக்கேசர் (சிவபிரான்)

பாதி உடலம் – (அவர் உடம்பில்) பாதி உடம்பு

பச்சைப் பெண் என்று அறிந்தும் – பச்சைப் பெண்ணாகிய உமாதேவி என்று அறிந்தும் கூட

பிரம்பு கொண்டே எவ்வாறு அடித்தான் -பிரம்பைக் கொண்டு எப்படித்தான் அடித்தானோ!

வேடன் கண்ணப்பன் அன்பினால் எச்சிலை உண் என்று சொல்ல அதை மனமுவந்து ஏற்றவன் சிவபிரான். அப்படிப்பட்ட சிவபிரானின் பாதி உடம்பை உமா தேவி கொண்டிருக்கும் நிலையில் வழுதி மன்னன், சிவனை எப்படித்தான் அடித்தானோ என்று வியக்கிறார் புலவர்.

***

பெருமை பல வாய்ந்த சிவபிரானுக்குத் தன் மீது சிறிது கூட இரக்கம் இல்லையே, அருள் தரக் கூடாதா என்று ஏங்குகிறார் புலவர். அது பாடலாக வடித்தது இப்படி:-

குதியால் நமனை யுதைத்துள்ளங் காலினிற் கூனிமிர

மதிராகந் தேய்த்தவ் விலங்கேசம் மாமுடி பத்துநக

நுதியால் மிதித்து முயலகன் மேனி நுறுங்க வின்னும்

மிதியாநின் றாலரு ளெங்கேசொக் கேசர்தம் மெல்லடிக்கே

பாடலின் பொருள் :-

குதியால் நமனை உதைத்து – குதிகாலினால் நமனைஉதைத்து

உள்ளங் காலினில் – உள்ளங்காலினால்

கூன் நிமிர – கூன் நிமிரும்படி

மதி ஆகம் தேய்த்து – சந்திரனின் உடம்பைத் தேய்த்து

அவ் இலங்கேசன்  மாமுடி பத்து நக நுதியால் மிதித்து – அந்த இலங்கை அரசனான இராவணனின் தலை முடி பத்தையும் நகத்தின் நுனியால் அழுத்தி மிதித்து

முயலகன் மேனி நுறுங்க – முயலகனின் உடல் நுறுங்கும்படி செய்து

இன்னும் மிதியா நின்றால் – இப்படி பல காரியங்களைச் செய்தும் இன்னமும் மிதிப்பதை நிற்காமல் இருந்தால்

சொக்கேசர் தம் மெல்லடிக்கே அருள் எங்கே – சொக்கேசப் பெருமானின் திருவடிக்கு அருள் எப்படி வரும்!

சிவபிரானின் திருவடிகளுக்கு ஏகப்பட்ட வேலைகள்! நமனை உதைப்பது, சந்திரனின் கூன் நிமிர உடலைத் தேய்ப்பது, இராவணனின் பத்து மகுடங்களையும் நக நுனியால் அழுத்துவது, முயலகனை நுறுங்கச் செய்வது என்று இப்படி பல வேலைகள் இருந்தால் எனக்கு அவர் பாதம் பிடிக்க வாய்ப்பு இல்லையே!  (அவருக்கு இந்தச் செயல்களுக்கே நேரம் போதவில்லையே!) எனக்கு சொக்கேசரின் அருள் எங்கே இருந்து வரும்!

புலவரின் அங்கலாய்ப்பு நியாயம் தானே!

tags — சிவபிரான், பாம்பு, சொக்கநாதப் புலவர்.

***

Leave a comment

Leave a comment