

Post No. 8227
Date uploaded in London – – –23 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஜகாரியா கானை எதிர்த்த சீக்கியர்களின் வீரம்!
ச.நாகராஜன்

பாரத வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சீக்கியர்களின் வீர வரலாறுகள் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் இருப்பது வருத்தத்திற்குரியது.
எடுத்துக்காட்டாக ஒரு வீர வரலாறை இங்கு பார்ப்போம்.
பெர்சியாவை ஆண்டு வந்த நாதிர் ஷா (Nadir Shah) ஆப்கானிஸ்தானத்தில் உள்ள காபூலிலிருந்து 1738ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்தான். டெல்லி வரை சென்று கொள்ளை அடித்தான்; கொலை செய்தான்.
1739ஆம் ஆண்டு அவன் கோடை காலத்தில் பெர்சியாவிற்குத் திரும்பிச் செல்லும் போது அவன் கொள்ளையடித்த ஏராளமான செல்வத்துடன் சென்றான். அதில் கோஹினூர் வைரமும் இருந்தது. ஏராளமான பெண்களையும் பிடித்துச் சென்றான்; அடிமை வேலைக்கான ஆட்களையும் பிடித்துச் சென்றான்.
கோடை கால வெயில் கடுமையாக இருந்ததால் பகலில் பயணப்படாது இரவில் மட்டுமே அவன் சேனையுடன் பயணத்தை மேற்கொண்டிருந்தான்.

சரியாக பகல் 12 மணிக்கும் சரியாக நள்ளிரவு 12 மணிக்கும் சீக்கிய வீரர்கள் அவன் மீது பஞ்சாபிலிருந்து சிந்து வரை கொரில்லா தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல் மூலம் ஏராளமான சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களை அவர்கள் விடுதலை செய்து மீட்டனர். அத்துடன் கலைஞர்களும், அடிமைகளும் விடுவிக்கப்பட்டனர்; ஏராளமான செல்வமும் மீட்கப்பட்டது.
சீக்கியர்கள் பற்றி இன்று வழங்கும் பகல் 12 மணி இரவு 12 மணி ஜோக்குகள் இந்தத் தாக்குதலின் அடிப்படையிலேயே எழுந்தவை. இதனுடைய மூலமான வீரப் போரை அறியாமல், உண்மையான வீரத்தை அறியாமல் 12 மணியை மட்டும் எடுத்துக் கொண்டு விவரம் அறியாமல் ஒருவிதமாகத் தவறாக பரிகசிப்பவை தாம் இன்றைய ஜோக்குகளான இவை!
ஜகாரியா கான் (Zakarya Khan – மரணம் :1745) தனது தந்தையான அப்துஸ் சமத் கானுக்குப் (Abdus-Samad Khan) பின்னர் 1726ஆம் ஆண்டு லாகூரில் கவர்னராகப் பதவியேற்றான். இதற்கு முன்னால் ஜம்முவின் கவர்னராக 1713 முதல் 1720 முடியவும் காஷ்மீர் கவர்னராக 1720 முதல் 1726 முடியவும் அவன் பதவி வகித்தான்.
லாகூரில் சீக்கிய தலைவர் பண்டா சிங் பஹாதூருக்கு (Banda Singh Bahadur) எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்திலும் இவன் பங்கு உண்டு. குர்டாஸ் நங்கலில் (Gurdas Nangal) பண்டா சிங்கை 1715இல் பிடித்த அவன், டெல்லிக்கு சிறைக் கைதிகளுடன் சென்றான். செல்லும் வழியில் இருந்த கிராமங்களிலெல்லாமிருந்து சீக்கியர்களைச் சிறைப் பிடித்தான்.
முகலாய தலைநகரை அவன் அடைந்த போது 700 மாட்டு வண்டிகளில் துண்டிக்கப்பட்ட தலைகள் இருந்தன. இன்னும் 700 சிறைக்கைதிகளும் இருந்தனர். 1726இல் கவர்னரானவுடன் அவன், சீக்கியர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளை வகுத்து அவர்களைப் பெரிதும் துன்புறுத்தலானான்.
அவனது படைகளால் அச்சுறுத்தப்பட்டதால் சீக்கியர்கள் தொலைதூரங்களில் உள்ள மலைப் பகுதிகளிலும் அடர்ந்த காடுகளிலும் ஒளிந்து வாழ்ந்தனர்.

என்றாலும் விடாமல் அரசாங்க பொக்கிஷத்தையும் அரசாங்க வண்டிகளையும் சேனை வீரர்களையும் சீக்கியர்கள் தொடர்ந்து தாக்கி வந்தனர்.
இந்த கடுமையான தாக்குதலால் ஜகாரியா கான் அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
1735இல் அரசாங்க ஆணை ஒன்றைப் பிறப்பித்து சீக்கியர்களைப் பிடித்துக் கொல்லுமாறு அவன் உத்தரவிட்டான்.
சீக்கியர்களின் தலை முடியை வெட்டிக் கொண்டு வருவோருக்கு விசேஷ பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
சீக்கியர்களைப் பிடிக்க தகவல் தருவோருக்கு பத்து ரூபாய் வழங்கப்பட்டது.
சீக்கியர்களின் வெட்டப்பட்ட தலையைக் கொண்டு வருவோருக்கு ஒவ்வொரு தலைக்கும் 50 ரூபாய் வழங்கப்பட்டது.
உயிரோடு பிடிக்கப்பட்ட ஒவ்வொரு சீக்கியருக்கும் 100 ரூபாய் வழங்கப்பட்டது.
சீக்கியர்களின் வீடுகளைக் கொள்ளையடிப்பது சட்டபூர்வமான ஒன்றாக அங்கீகாரமாக்கப்பட்டது.
சீக்கியர்களுக்கு தங்க இடம் கொடுப்பதோ அவர்கள் பயணத்திற்கு உதவி செய்வதோ குற்றமாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக 20000 (போலீஸ்) கண்காணிப்பாளர்களை அவன் பணியில் அமர்த்தினான்.
கிராமப்புறங்களில் பிடிக்கப்பட்ட சீக்கியர்களை சங்கிலியால் பிணைத்து இழுத்து வந்தான்.
இவர்களில் பிரதானமாக இருந்தவர்கள் : பூஜ்யர் பாய் மானி சிங், (Bhai Mani Singh) பாய் தாரு சிங் (Bhai Taru Singh) உள்ளிட்டோர் ஆவர்.
கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின் லாகூரில் உள்ள நகாஸ் குதிரைச் சந்தையில் (Nakhas, the horse market) இவர்களின் தலைகள் வெட்டப்பட்டன. இந்த இடம் இநத வீரத் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஷாஹித்கஞ்ச் (Shahidgang) என்று பின்னர் பெயரிடப்பட்டது.

இப்படி சொல்லவொண்ணா கொடுமையை எல்லாம் கட்டவிழ்த்த பின்னும் கூட, ஜகாரிய கானால் வெற்றி பெற முடியவில்லை.
லாகூரில் 1745ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று அவன் இறந்தான்!
வீர சீக்கியரின் வரலாறு பெரும்பாலானோருக்குத் தெரியாத நிலை தான் இன்று நிலவுகிறது!
வாழ்க சீக்கிய வீரர்கள்! வாழ்க மாபெரும் தியாகிகள்!
TAGS- ஜகாரியா கான், பண்டா சிங் பஹாதூர் , Banda Singh Bahadur, சீக்கியர்
***