விஜயனுக்கும் துரியோதனனுக்கும் போர்! போரை நிறுத்த கண்ணன் தூது!!(Post.8380)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8380

Date uploaded in London – – –22 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பேர் படைத்த விஜயனுக்கும் பார் படைத்த துரியோதனனுக்கும் போர்! போரை நிறுத்த தூது சென்ற கண்ணன்!!

ச.நாகராஜன்

வில்லி பாரதத்தில் உத்யோக பர்வத்தில் நான்காவது சருக்கமாக அமைவது கிருட்டினன் தூதுச் சருக்கம்.

இதில் 264 கருத்துச் செறிவுள்ள, அழகிய பாடல்கள் உள்ளன.

இந்தச் சருக்கத்தின் கடவுள் வாழ்த்தாக அமையும் பாடலில் சொற்சிலம்பம் ஆடி கருத்துச் செறிவைக் காண்பிக்கிறார் வில்லிப்புத்தூரார்.

கடவுள் வாழ்த்து!

பேர்படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியானாகிச்

சீர்படைத்த கேண்மையினாற் றேரூர்தற் கிசைந்தருளுஞ் செங்கண்மாலைப்

பார்படைத்த சுயோதனற்குப் படையெடேனமரிலெனப் பணித்த கோவைக்

கார்படைத்த நிறத்தோனைக் கை தொழுவார் பிறவாழிக் கரை கண்டாரே

அருமையான இந்தப் பாடலில் பல செய்திகளைப் பார்க்கிறோம்.

விஜயன் பேர் படைத்தவன். துரியோதனன் பார் படைத்தவன்.

ஆள்வதற்குப் பூமி இல்லை என்றாலும் பூமியெங்கும் நல்ல பேரை வாங்கியவன் விஜயன் – அர்ஜுனன். ஆனால் பார் படைத்திருந்தாலும் கூட தீய மனத்தவனான துரியோதனனுக்குப் பேர் இல்லை.

“பேர் படைத்த விஜயனுடன் “ மற்றும் “பார் படைத்த சுயோதனற்கு” என்பதால் இருவருக்கும் உள்ள குணநலன்களை சூசகமாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

அடுத்து “மும்மை நெடும் பிறவியினும் பிரியானகி” என்ற சொற்றொடரால் கண்ணனும் அர்ஜுனனும் மூன்று பிறவிகளிலும் பிரியவில்லை என்கிறார்.

மூன்று பிறவிகள் யாவை? அதில் கண்ணன் யார், அர்ஜுனன் யார்?

கேள்வி எழுகிறது, இல்லையா?

நர- நாராயணர்  முதல் பிறவி

இராம – லக்ஷ்மணன் இரண்டாம் பிறவி

கிருஷ்ணன் – அர்ஜுனன் மூன்றாம் பிறவி

இணைபிரியாமல் இருக்கும் இரட்டையரை குறிப்பால் உணர்த்துகிறார் கவிஞர்.

சில விரிவுரையாளர்கள் நர நாராயணர்களுக்குப் பதிலாக, இந்திரன் – அர்ஜுனன், உபேந்திரன் – கண்ணன் என்று பொருள் கொள்வதுமுண்டு.

அடுத்து சீர் படைத்த கேண்மை என்ற சொற்றொடரால் அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் உள்ள நட்பைச் சிறப்பிக்கிறார் வில்லிப்புத்தூரார்.

இருவரின் நட்பு சாதாரண நட்பு அன்று. ‘தேர் ஊர்தற்கு இசைந்து அருளும்’ நட்பு அது. கௌரவர்- பாண்டவர் போரில் – துரியோதனன் – அர்ஜுனன் போரில் – ஆயுதம் எடேன் என்று சூளுரைக்கும் பண்புள்ள நட்பு அது.

தேரை ஓட்டும் சாரதியாக இருப்பவன் கண்ணன். அவன் குதிரை முன் அமர்ந்து தேரை ஓட்டுவான்.

அவனுக்கு மேல் ஒரு படியில் அர்ஜுனன் இருப்பான்.

கடுமையான போர்க்களத்தில் தன் இஷ்டத்திற்குத் தக தேரை ஊர்ந்து செல்வதற்கு, தேர்ச் சாரதிக்கு அவன் எப்படி கட்டளை கொடுப்பான்?

வாயால் அல்ல; போர்க்களத்தில் யாருக்குமே பேசுவது கேட்காது.

க்ஷண நேரத்தில் தனக்கு தேர் எந்தப் பக்கம் போக வேண்டுமென்று கண்ணனுக்கு உணர்த்த கண்ணனின் இடது தோளிலும் வலது தோளிலும் காலை வைத்து அமுக்கி இடப் பக்கம் திருப்பு; வலப் பக்கம் திருப்பு என்று சொல்வான் அர்ஜுனன்.

இறைவனான கண்ணன் இங்கு எளியனாகி தன் நண்பன் தன் தோளின் மீது காலை வைக்க அருளும் அருள் பண்புக்கு ஈடு இணை எங்கேனும் உண்டா, என்ன?!

கண்ணன் செங்கண் மால்; கார்படைத்த நிறத்தோன்! அதாவது சிவந்த கண்களை உடைய திருமாலின் திரு அவதாரம். மேகம் போன்ற நிறம் படைத்தவன்.

இப்படிப்பட்ட பெருமை உடைய கண்ணனை கை கூப்பித் தொழுவாருக்கு என்ன பலன் கிடைக்கும்?

பிறப்பு என்பது பெருங்கடல். இந்த பிறவாழியை – பிறவிக் கடலைக் கடந்து அக்கரை அடைவர்!

ஒரு கடவுள் வாழ்த்தில் எத்தனை செய்திகள் அற்புதமாக விளக்கப்படுகின்றன! அது தான் வில்லிப்புத்தூரார்.

அது மட்டுமல்ல, இந்த கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில் உள்ள 264 பாடல்களில் ஏராளமான அற்புதச் செய்திகள் உள்ளன.

அதை பிறிதொரு சமயம் காண்போம்!

tags – தூது , கண்ணன், வில்லி பாரதம்

***

Leave a comment

Leave a comment