
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9104-B
Date uploaded in London – –4 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜனவரி 4-ஆம் தேதி — திங்கட் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
முதலில் புத்தாண்டை நல்ல செய்தியுடன் துவக்குவோம்
ஞானமயம், அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்து, நடத்திய அகில உலக ருத்ர மந்திர பாராயணம் வெற்றிகரமாக முடிந்தது. ஞானமயம் மற்றும் உலக மஹா இந்து சந்து சங்கத்தின் தலைவர் சிவ ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாச்சார்யா அவர்கள் முயற்சியில் உலக நன்மைக்காக ஜனவரி 2, 3 தேதிகளில் ஐந்து கண்டங்களில் ருத்ர மந்திர பாராயணம் நடந்தது. நியுஸிலாந்து முதல் அமெரிக்கா வரையுள்ள ஏராளமான அன்பர்கள் இதில் பங்கேற்றனர்.
1. ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
2. வேதபுரீ ஶ்ரீசித்பவானந்த ஆச்ரம பீடாதிபதி பூஜ்யஶ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள்
3. கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க சரவண மாணிக்க வாசக ஸ்வாமிகள்
.
4 விகாஸரத்னா சிவஶ்ரீஅண்ணா, குருமுதல்வர், வேதாகம பாடசாலை பிள்ளையார் பட்டி
5 ப்ரும்மஶ்ரீ சுந்தர் சர்மா,
6 முல்லைவாசல் ப்ரும்மஶ்ரீ R.கிருஷ்ணமூர்த்தி கணபாடிகள்
7. சிவஶ்ரீ .ஏ.வி ஸ்வாமிநாத சிவாச்சாரியார் ,குருமுதல்வர், வேதாகம பாடசாலை சிவபுரம் குளோபல் சிவாகம அகாடமி மாயவரம்
8 சிவஶ்ரீ ராஜா பட்டர், குருமுதல்வர், வேதாகம பாடசாலை, திருப்பரங்குன்றம்
9. சிவாகம கல்பதரு சிவஶ்ரீ விஜயசோமசேகர சிவாச்சாரியார்
10. இலங்கை முத்தமிழ் குருமணி சிவஶ்ரீ ந .ஸர்வேஸ்வர குருக்கள்
11. தில்லை கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், கள்ளக்குறிச்சி
மித்ர சேவா, லண்டன்,
காஞ்சி காமகோடி கைங்கர்யசபை,
உலக இந்து மஹாசங்கம்,
தாம்ராஸ் அமெரிக்கா
SACRAMENTO MAHA PERIYAVA MANDALI
SIVA SRI ABHIRAMA SIVACHARYA , USA
மற்றும் கோவில் தலைமை அர்ச்சகர்களும் ஆசியுரை நல்கி சிறப்பித்தனர்.
XXXX
இனி இந்திய செய்திகளைப் பார்ப்போம்…………………………
முதலில் ஆந்திர மாநிலத்தில் எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஆந்திரத்தில் இந்துக்கோவில்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் பெரிய அரசியல் பிரச்சனையாக உருவாகி வருகிறது
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், ராமதீர்த்தம் பகுதியில் உள்ள கோதண்டராமர் சிலையின் தலை மற்றும் உடல் பாகத்தை மர்ம நபர்கள் உடைத்து வெவ்வேறு பகுதியில் வீசியதால் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆந்திரத்தின் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால்தான் இப்படி தாக்குதல் அதிகரிப்பதாக முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சித்தலை வருமான சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் தெலுங்குதேசம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி தாக்கப்பட்ட கோவிலின் தலைவரை ஜகன்மோகன் அரசு நீக்கிவிட்டது. அவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்

ராமர் சிலை உடைக்கப்பட்ட கோயிலை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
விஜயநகரம் மாவட்டத்தில் நுழைவதற்கு முன்பு சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி வைத்த போலீஸார், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து ராமதீர்த்தம் செல்ல விடாமல் தடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராமதீர்த்தம் செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
சமீபத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு தேர் தீப்பிடித்து எரிந்தது. ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்குதேச கட்சித் தலைவர் ஜெயதேவ் கல்லா இந்த தாக்குதல்களுக்கு ஆளும் கட்சியின் மீது குற்றம் சுமத்தினார்.
சமீப காலத்தில் மட்டும் 6 ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறிய அவர், இதனால் மாநில அரசாங்கம் தங்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று குற்றவாளிகளுக்கு தைரியம் வந்துள்ளதாக கூறினார். சில நாட்களுக்கு முன்பு தான் வரலாற்று சிறப்பு வாய்ந்த காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் உள்ள நந்தி சூறையாடப்பட்டது.
இந்து கோவில்களின் மீதான தாக்குதலுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தினார்.
இந்த மாத ஆரம்பத்தில் தெலுங்கு நடிகர் மற்றும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண்,
பல பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ,
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹா கோவிலை சேர்ந்த தேர் ஒன்று சதித் திட்டத்தால் எரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.. இந்த விஷயத்தில் பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது .
XXXXX
2 லட்சம் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம்

எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடற்கரையில் கடலை நோக்கி அமைந்துள்ள சின்னம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 12 மூட்டை மக்காச்சோளம், 2.15 லட்சம் எலுமிச்சை பழம், 11 பெட்டி ஆரஞ்சு பழம் மற்றும் 3 ஆயிரம் சாத்துக்குடி பழங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றை கொண்டு கடந்த 3 நாட்களாக கோவில் வளாகத்தில் அலங்காரம் மற்றும் தோரணங்கள் அமைத்தனர்.
பின்னர் சின்னம்மன் மற்றும் சியாமளா தேவிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன.
புத்தாண்டு வழிபாடு முடிந்த உடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
XXXX
ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்
ராமேசுவரம் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதையொட்டி அதிகாலை 2.30 மணிஅளவில் கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிவரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாமிஅம்பாளுக்கு பால், பன்னீர், தேன், மாபொடி, மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் கோவிலின் சாமி சன்னதியில் இருந்து தங்ககேடயத்தில் மாணிக்கவாசகர் நடராஜர் சன்னதி எதிரே எழுந்தருளினார்.
தொடர்ந்து நடராஜர் சன்னதி முன்பு அமைக்கப்பட்டு இருந்த 7 திரைகள் திறக்கப்பட்டு கடைசியாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்த நடராஜர் காட்சி தந்தார். அவருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு மகாதீபஆராதனை பூஜைகள் நடைபெற்றன.
XXXXXXXXXXXXXX
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.
ஆருத்ரா தரிசன விழா
கடந்த டிசம்பர் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. முக்கிய திருவிழாவான தேரோட்டம்
முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக வந்து ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கு இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து தங்க காசுகளால் சொர்ணாபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. இதையடுத்து மாலை 5.10 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ராஜசபையில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
XXXXXX

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30ம் தேதி நிகழ்ச்சி நடந்தது.
சாமிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் அன்று கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பைரயில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவர் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சில பக்தர்கள் டிசம்பர் 30ம் தேதி இரவில்
விடிய, விடிய கிரிவலம் சென்றனர். டிசம்பர் 31ம் தேதியும் காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
XXXXX
45 வகை திரவியங்களால் அபிஷேகம்.
அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 45 வகை திரவியங்களால் நடராஜனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவிநாசி லிங்கேசுவரர் கோயில் உள்ளது. தேவார, திருவாசக பாடல் பெற்றதும், கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான இங்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.
இதில், விபூதி, வெண்ணெய், அன்னம், சந்தனாதி தைலம், நெல்லிப்பொடி, பாசிப்பயறுமாவு, வில்வப்பொடி, நெல்லிப்பொடி, அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்பு சர்க்கரை, தேங்காய்த்துருவல், மாதுளை, பால், தயிர், கரும்புச்சாறு, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, அன்னாசிப்பழம், கொய்யா, விளாம்பழம், எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், சங்காபிஷேகம், சொர்ணாபிஷேகம், ஸ்தாபன கலச புனித தீர்த்தம் உள்ளிட்ட 45 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.. பின்னர் நடராஜப்பெருமானுக்கும், சிவகாமியம்மனுக்கும் அந்திமந்தாரை, சம்பங்கி, தாமரை, வேர், ஏலக்காய், வெட்டிவேர், மருகு, மயிற்கண், திராட்சை, செவ்வந்தி, விருட்சப்பூ ஆகிய அழகிய மணம் மிகுந்த மலர்களைக்கொண்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.
XXXXXX
பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்குதல் தொடர்பாக 26 பேர் கைது
பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம், தெரி கிராமத்தில், ஹிந்து கோவில் உள்ளது. இங்குள்ள ஒரு மகான் சமாதிக்கு, வியாழன் தோறும் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். இதில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் வருவர். இந்த கோவிலை புனரமைத்து, விரிவாக்கம் செய்யும் பணி சமீபத்தில் துவங்கியது. இதற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஜமாத் உலமா இ இஸ்லாம் என்ற கட்சியைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து சேதப்படுத்தினர் இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜமாத் உலமா இ இஸ்லாம் கட்சி தலைவர் ரஹ்மத் சலாம் கட்டக் உள்ளிட்ட, 26 பேரை கைது செய்தனர்.
பாகிஸ்தானில், 75 லட்சம் ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், சிந்து மாகாணத்தில் உள்ளனர்.
XXXXXXXXXXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

–subham–
tags – உலக, இந்து சமய, செய்தி மடல் 4-1-2021,