
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9384
Date uploaded in London – –15 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உலக இந்து சமய செய்தி மடல் 14-3-2021
இன்று மார்ச் 14-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
Xxxxx
பகவத் கீதை இ – புத்தகம்: பிரதமர் வெளியிட்டார்

:”பகவத் கீதையில் கூறியபடி, உலகளவில் மனித குலத்துக்கு, இந்தியா உதவி வருகிறது,” என, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பகவத் கீதை ஆங்கில பதிப்பின், ‘இ – புத்தகத்தை’ வெளியிட்டார்.
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர், பகவத் கீதைக்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்க உரைகளை எழுதினார்.
இரண்டு புத்தகங்களும், 19 பதிப்புகளில் வெளியாகியுள்ளன. அவற்றில், ஆங்கில பதிப்பின் விளக்க உரை அடங்கிய, ‘டிஜிட்டல்’ வடிவிலான, இ – புத்தகத்தை, பிரதமர் மோடி, நேற்று டில்லியில் இருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, பொது மக்கள், மாணவியர் இணைய வழி வாயிலாக பார்க்கும் வகையில், கரூர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன செயலர் சத்யயானந்த மகராஜ், சாரதா மகளிர் கல்லுாரி செயலர் யதீஸ்வரி நீலகண்ட பிரியா உட்பட, பலர் பங்கேற்றனர்; இதில், பிரதமர் மோடி பேசியதாவது: பகவத் கீதை நம்மை சிந்திக்க துாண்டுகிறது. நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க, நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும். நம் மனத்தை திறந்த நிலையில் வைத்திருக்க, கீதை உதவுகிறது.
கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும், இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும், ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பர்.கடந்த காலத்தில் உலகத்திற்கு மருந்துகள் தேவைப்பட்ட போது, இந்தியாவால் என்ன முடியுமோ, அவற்றை அவர்களுக்கு வழங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகம் முழுதும் சென்றுள்ளன.
நாம் மனித குலத்திற்கு உதவவும், குணமளிக்கவும் விரும்புகிறோம். இதையே கீதை, நமக்கு போதிக்கிறது. பகவத் கீதையின் முக்கிய தத்துவம், அனைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பது தான். 130 கோடி இந்திய மக்களும் தங்கள் கடமையை சரியாகச் செய்தால், சுயசார்பு இந்தியா உருவாகும்.
இ – புத்தகங்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன; இதை பயன்படுத்தி, கீதையை இளைஞர்கள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இந்த புத்தகம், பகவத் கீதையையும், பாரம்பரியமிக்க தமிழ் கலாசாரத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், இந்த புத்தகத்தை எளிதாக படிப்பர்.தமிழர்கள் எங்கு சென்றாலும், தங்கள் கலாசாரத்தை பரப்புவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். புதிய இந்தியா உருவாவதற்காக, உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்தவர் சுவாமி சித்பவானந்தா. இவ்வாறு பிரதமர் பேசினார்.
Xxxx
மகா சிவராத்திரி செய்திகள்

மார்ச் 11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இந்துக்கள் அதிகம் வாழும் மொரிஷியஸ் தீவு மற்றும் மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேபாளத்தில் ஒரே நாளில் பல லட்சம் மக்கள், பசுபதி நாதரை தரிசித்து வழிபட்டனர்.
12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது . இதோ சிவ ராத்திரி செய்திகள்
மகா சிவராத்திரி தினத்தன்று நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலுள்ள பசுபதிநாத் பெருமானை தரிசிக்க காலை முதல் மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் ஐந்து லட்சம் பக்தர்கள் வந்தனர். பிரசித்திபெற்ற இந்த சிவன் கோவிலுக்கு இந்தியாவிலிருந்தும் ஏராளமானோர் வந்தனர் . இந்திய சாது சன்யாசிகளுக்கு கோவில் நிர்வாகம் பிரசாதம் கொடுத்து கவுரவித்தது
Xxx
ராமேசுவரம் கோவிலில் பகல், இரவு முழுவதும் நடை திறப்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடந்தது.
கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்கள் தங்களது கைகளால் பால், தயிர், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவகை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
சிவராத்திரியை முன்னிட்டு காலை துவங்கி அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி கோயில் பிரகாரங்களில் இரவு முழுவதும் கண்விழித்து விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் விடிய விடிய நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் பங்கேற்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். இரவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த சாதுக்களும், பக்தர்களும் அதிகாலை கங்கை நீருடன் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

XXXXXXXXXXXXXXXXXXXXX
சிவராத்திரி பண்டிகைக்கு நெய்வேதியம் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பங்கள்
சிவராத்திரி பண்டிகையின் போது சிவபெருமானுக்கு படைக்கும் நெய்வேதியங்களை தயாரித்து வழங்கும் பணியை காலம் காலமாக இஸ்லாமிய குடும்பங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் இந்துக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் சிவராத்திரி முக்கியமானதாக உள்ளது. இப்பண்டிகையின் போது விரதம் இருந்து, இரவில் கண் விழித்து மறுநாள் சிவனுக்கு சாமை, கேழ்வரகு, சோளம், நெல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் மாவு கொண்டு பல நெய்வேதியம் செய்து படைப்பார்கள். ஒவ்வொன்றும் தனி தனியாக வீட்டில் தயார் செய்ய முடியாமல் கடைகளில் வாங்குவார்கள்.
கர்நாடக மாநிலத்தின் கோலார் தாலுகாவில் உள்ள சுல்தான் திப்பசந்திரா மற்றும் ஜமால்ஷாநகர் ஆகிய பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நூறாண்டுக்கும் மேலாக சிவராத்திரி பண்டிகைக்கு நெய்வேதிய பொருட்கள் தயாரித்து கொடுக்கும் பணியை ேமற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்தில் இருந்து சாமை, நெல் ஆகியவற்றையும் கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா, பாகல்கோட்டை, ஹாவேரி மாவட்டங்களில் இருந்து சோளம், கேழ்வரகு கொண்டுவந்து அதை அறைத்து பதப்படுத்தி வைக்கிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஓருவாரமாக மாவட்டம் முழுவதும் இஸ்லாமிய குடும்பங்கள் தயாரித்து கொடுத்துள்ள நெய்வேதிய பொருட்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காலங்கள் மாறினாலும் கலாச்சார பின்னணியுடன் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் நெய்வேதிய பொருட்களை வாங்குவதை இந்து குடும்பங்கள் மறக்காமல் பின்பற்றி வருகிறார்கள். இந்த மனிதநேயம், ஒற்றுமை அனைத்து செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்

Xxxx
ராமராக பிரபாஸ் நடிக்கும் ராமாயண கதையில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்
ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் ஆதிபுருஷ் என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது. ஓம் ராவத் இயக்குகிறார். இதில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர்.
வில்லத்தனமான ராவணன் கதாபாத்திரத்துக்கு பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை தேர்வு செய்துள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இந்தநிலையில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கீர்த்தி சனோன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன். ஆதிபுருஷ் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் ஆதிபுருஷ் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

XXXXX
சபரிமலை பிரச்னை வருத்தமளிக்கிறது: கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்கள் வருத்தமளிக்கினறன,” என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என, 2018ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து நடந்த போராட்டங்களை, கேரள அரசு கடுமையாக அடக்கியது.
போராட்டம் தொடர்பாக, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடந்திருக்க கூடாத இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறி உள்ளார். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளிக்கும் இறுதி தீர்ப்புக்கு, கேரள அரசு தலைவணங்கும் என்றும், அவர் கூறியிருந்தார்.
இதற்கு, ”சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுக்காக, அமைச்சர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கங்கையில் குளித்தாலும், செய்த பாவம் போகாது,” என, கேரள பாரதீய ஜனதா தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

xxxxx
தாஜ்மஹாலில் பிரார்த்தனை -மூன்று இந்து மகாசபா உறுப்பினர் கைது
ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலில் பிரார்த்தனை நட த்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் பெண். இது மத்திய தொல்பொருட் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னம். இதில் மீனா திவாகர் என்ற பெண்மணி மேலும் இருவரை அழைத்து வந்து இந்து சமய பிரார்த்தனைகளை நடத்தினார் அவர்கள் மூவர் மீதும் ஆக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . தாஜ் மஹால் ஒரு காலத்தில் இந்துக்களின் அரண்மனையாக இருந்தது என்பது ஒரு சாராரின் வாதம். இது பற்றி பி.என் ஓக் மற்றும் பலர் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளனர்
Xxxx
முதியோருக்கு இலவச யாத்திரை உதவி
டில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மாநில சட்டசபையில் பேசுகையில் பென்சன் வயதுள்ள முதியோ ருக்கு இலவச யாத்திரை, உணவு, தங்கும் வசதிகள் செய்யப்படும் என்றார். மாநில கவர்னர் ஆற்றிய உரை மீதான விவாதத்தில் பேசுகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னர், வயதான முதியோரை இலவசமாக அங்கே தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல தனது அரசு பணம் ஒதுக்கியுள்ளது என் றார் . தானும் ராமரையும் ஆஞ்சனேயரையும் வணங்கும் பக்தர் என்றும் ராமராஜ்யம் அமைப்பதே தனது கனவு என்றும் டில்லி அசெம்பிளியில் முதலைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார் .
xxxxxx
ஸ்ரீ ரவிசங்கருடன் மகா சிவராத்திரி விழா…
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடனான மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் பெங்களூரில் விமரிசையாக நடைபெற்றது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட் டது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடனான மகா சிவராத்திரி விழா மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாலை மகா ருத்ர பூஜையுடன் தொடங்கியது.
இரவு 11.45 மணிக்கு நள்ளிரவு தியானம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி உரை நிகழ்த்தினார் . ருத்ர ஹோமமும் செய்யப்பட்டது
XXXXXXXXXXXXXX
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஈஷாவின் 27-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு கொண்டாடப்பட் டது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் ,தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. விடிய விடிய பிரபல கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழ் நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன், பிரபல தெலுங்கு பாடகி மங்களி, ராஜஸ்தானிய நாட்டுப் புற கலைஞர் குட்லே கான், பின்னணி பாடகர் பார்த்தீவ் கோஹில், கபீர் கபே இசை குழு, கர்நாடக இசை பாடகர் சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .
அவர்களுடன் ‘சவுண்ட்ஸ் ஆப் ஈஷா’ மற்றும் ‘ஈஷா சமஸ்கிரிதி’ குழுவினரும் சேர்ந்தனர் . சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படது.
விழாவில் நடிகை சமந்தா பங்கேற்றார்.
மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் , பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரைவி மகா ஆரத்தி, ,நள்ளிரவு தியானம், ஆதியோகி திவ்ய தரிசனம், சத்குரு சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில், ஷம்போ தியானம், பிரம்ம முகூர்த்த மந்திரம் என பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடந்தன
xxxx

கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி
கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள
தங்கவயலில் புகழ் பெற்ற கோடி லிங்கேஸ்வர் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தங்கவயல் தாலுகா கம்மசமுத்திரம் கிராமத்தில் கோடி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஒரு கோடி சில லிங்கங்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கோவிலில் காணும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான லிங்கங்கள் அணிவகுத்து அமைந்திருப்பதையும், அதற்கெல்லாம் மகுடமாக 108 அடி உயர பிரமாண்டமான சிவ லிங்கத்தையும் கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைகின்றனர்.
இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். காலை முதலே நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு , சாமி கும்பிட்டனர்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags – உலக, இந்து சமய, செய்தி மடல் 14-3-2021 ,