
Post No. 9890
Date uploaded in London – 25 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc
உரை எண் : 4 – 19-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

உத்வேகமூட்டும் தகவல்கள்!
அறிவியல் வளர வளர அற்புதமான செய்திகள் நமக்கு ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகின்றன
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு உலகெங்கும் 90 கோடி ஹெக்டேர் அதாவது 220 கோடி ஏக்கர் நிலத்தை மறுபடி காடாக்க முடியும் என்று கண்டிருக்கிறது. இது மனித குலம் வெளியிடும் கார்பன் நச்சுப் புகையில் மூன்றில் இரண்டு மடங்கை உறிஞ்சி விடும். அதாவது மனித குலம் பிழைத்து, தழைத்து வாழும்! ஜூரிச்சை சேர்ந்த விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு எந்தெந்த பகுதியில் என்னென்ன மரங்களை நடலாம் என்பதையும் பரிந்துரைக்கும்.
உலகெங்குமுள்ள பத்து லட்சத்து நாற்பதினாயிரம் தோட்ட உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து உலகளாவிய விதத்தில் பசுமைத் தோட்டங்களை அதிகரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் இன்னொரு நற்செய்தியாகும். இதன் மூலம் அருகி வரும் இனங்களான தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் அழிவது தடுக்கப்படுவதோடு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதாகவும் அமையும்.
பசுமையான காடுகளும் தோட்டங்களும் அதிகமாக ஆக, வளி மண்டல மாசு குறையும், தட்பவெப்ப நிலை சீராக அமையும், அத்துடன் நீர் வளம் அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் இவை நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமிப்பதால் ஆண்டு முழுவதும் நன்னீர் கிடைக்கும். வெள்ளப் பெருக்கையும் தடுக்கும்.
நகரில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைவதால் நகரின் உஷ்ணநிலையில் ஒரு டிகிரி செண்டிகிரேட் குறைய வாய்ப்புண்டு. அத்துடன் ஒலி மாசும் குறையும். ஒலி பிரதிபலிப்பது குறைந்து, சுமார் 3 டெசிபல் முதல் 8 டெசிபல் வரை ஓசை குறையும். இதனால் அதிக ஓசையினால் ஏற்படும் உடல் கோளாறுகள் நீங்கும்.
ஆங்காங்கே பூங்காக்களும் தோட்டங்களும் இருப்பதாலும் நகர்ப் புறங்களை ஒட்டிக் காட்டு வளம் ஏற்படுவதாலும் மனதிற்கு இனிமையுடன் கூடிய சுகம் ஏற்படும்; மன அழுத்தம் குறையும். உடலுக்குத் தேவையான ஓய்வு ஏற்படும்;
மனோவியாதிகள் குறையும்.
அத்துடன் நமக்குத் தேவையான கீரைகள், கறிகாய்கள், பழங்கள் ஆகியவையும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். தோட்டங்கள் ஒரு நகரின் ஜீவ நாடி என்றே சொல்லலாம் என்பதால் வீட்டு மாடியில் தோட்டம், வீட்டைச் சுற்றித் தோட்டம் என, வாய்ப்பு உள்ள அனைவரும் இதில் ஈடுபடலாம். உலகெங்கும் பெருகி வரும் ஊக்கமூட்டும் இந்தப் பசுமைக் கலை பரவட்டும்; சுற்றுப்புறம் மாசின்றி ஆரோக்கியமான வாழ்வை அனைவருக்கும் நல்கட்டும்!
***



tags- வீட்டு மாடி, தோட்டம்