WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,410
Date uploaded in London – – 5 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 3
ச.நாகராஜன்
5
அங்கே இனிமேல் போக வேணாம்!
பெரும் மகான்களுடனான தனிப்பட்ட சில விஷயங்கள் அந்த நபருக்கு மட்டுமே பெரிய விஷயம். ஏனையோருக்கு, ‘இதில் என்ன இருக்கிறது, எழுதவோ, சொல்லவோ!’ என்று தோன்றும். அதனால் தான் பல விஷயங்களை எழுத நான் இதுவரை முற்பட்டதே இல்லை.
ஒரு சமயம் ஸ்வாமிஜியிடம் நான் பெருமையாக வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளச் செல்வதாகக் குறிப்பிட்டேன். ஒரு நிமிட மௌனம்.
“எங்கே போற?”
திண்டுக்கல் ரோடில் ஒரு குறிப்பிட்ட ஜலதரங்க வித்வான் வீட்டிற்குப் போவதாகச் சொன்னேன்.
“அங்கே இனிமேல் போக வேணாம்!”
அத்தோடு முடிந்தது வயலின் டியூஷன்!
ஏன் என்று அப்போது தெரியாவிட்டாலும் பின்னால் அந்த வீடு அவ்வளவு “சுகமான” வீடு இல்லை என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று வரை சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்கள் உண்டு என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஆலாபனை செய்பவரைக் கண்டால் அண்ணாந்து இன்று வரை வியப்புடன் பார்த்து வருகிறேன்.
ராகங்கள் பட்டியல், இசை மஹிமை பற்றி எழுதினாலும் கூட உண்மையில் சொல்லப் போனால் என்னப் பொருத்த வரை பழைய பாடலை மாற்றிப் பாட வேண்டியது தான்!
“சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்” என்பது அந்தக் காலப் பாட்டு.
எனது பாட்டு:
“சங்கடமான சங்கீதத்தை விட்டு சமைக்கத் தான் போறேன்”
6
குற்றாலச் சாரலிலே குளித்தது போல…
அருமையான குற்றாலச் சாரல்!
ஆயக்குடியில் வந்த வேலை – ஸ்வாமிஜியை தரிசனம் செய்து ஆசி பெற்றது – முடிந்து விட்டது. கிளம்ப வேண்டியது தான். என் மனம் சும்மா இருக்கவில்லை.
“ஸ்வாமிஜி, இவ்வளவு தூரம் வந்துட்டோம். குற்றாலம் போய் ஒரு குளியல் குளிச்சுட்டு ஊருக்குப் போறோம்.”
அவ்வளவு தான், ஸ்வாமிஜி வேறொரு பக்கம் திரும்பி விட்டார்.
அதற்கு அர்த்தம் : ‘உன் பேச்சே எனக்குப் பிடிக்கவில்லை’ என்பது தான்.
என்ன செய்வது?
நைஸாக அட்வகேட் ராமாராவிடம் சொல்லிப் பார்த்தேன். அவர் ஸ்வாமிஜியைக் கேட்டுப் பார்த்தார். பதில் சாதகமாக இல்லை.
கடைசி ஆயுதம் ஒன்று இருந்தது. எனது தம்பி ஸ்வாமிநாதனின் பெயர் தான் அது.
“சாமா தான் போகணுங்கறான்!”
ஸ்வாமிஜி இளகினார்.
“ராமாராவ், கூடவே நீங்களும் போய் பசங்களை பத்திரமாக மதுரையில் சேர்த்து விடுங்கள்”
ஓரே ஆனந்தம். எங்கள் கோஷ்டி கைப்பைகளுடன் குற்றாலம் நோக்கிக் கிளம்பியது.
பிரதான சாலைக்கு வந்தோம். மழை, மழை என்றால் இடி புயலுடன் கண்ணை மறைக்கும் மழை. சாலையே தெரியவில்லை. தொப்பலாக நனைந்தாயிற்று, ஒரு பஸ்ஸும் வரும் வழியாகக் காணோம்.
புலம்பிக் கொண்டே தென்காசி நோக்கி நடந்தோம் – பல மைல்கள்.
இரவு மணி ஒன்பது. தென்காசியில் எங்கு தங்குவது? நல்ல வேளை மழை நின்றிருந்தது.
ஒரு தெருக்கோடியில் சாலையின் நடுவே நின்று ராமாராவ் கத்தினார்: “ஓய், ராமகிருஷ்ணையர்!”
தெருவோர வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.
:அடடா! என்ன இது? மழையில் இப்படி நனையலாமா?”
“ஒண்ணும் வேணாம், இப்ப, இதோ இந்த பிள்ளையார் கோவிலைத் திறந்து விடும். குழந்தைகள் தூங்கணும்.”
அவருடம் உடனே சின்னப் பிள்ளையார் கோவிலைத் திறந்து விட்டார்.
கோவிலின் முன் பிரகாரத்தில் தொப்பென விழுந்து படுத்தோம். அப்போது தான் ஒரு கூச்சல் கேட்டது:
“நக்ஷத்திரம் ஒழுகறது டோய்!”
அலறி அடித்துக் கொண்டு எழுந்தோம்.
மழை போய், இப்போது நக்ஷத்திரம் ஒழுகறதா? ஏதாவது நக்ஷத்திரம் கீழே விழுந்து கொண்டிருக்கிறதா?
அனைவரும் அலற, ராமாராவ் கூறினார் : “பேசாம படுங்கடா! அது அரைப் பைத்தியம்!”
ஓஹோ ஒரு பைத்தியம் தான் இப்படி உளறுகிறதா!
அந்தக் குரல் அவ்வப்பொழுது இரவில் எழுந்து எங்களைத் தூங்க விடாமல் அடிக்க, காலை முதல் பஸ்ஸுக்காக அவசரம் அவசரமாக சாலைக்குச் சென்றோம். ஒரு பஸ் வந்தது.
“சார்”, என்ற கண்டக்டர் எங்கள் தலைகளை எண்ணினார்.
“கரெக்டா போச்சு, இனிமே இடமில்லை. உங்களுக்குத் தான் இடம் இருக்கு! ரைட் போகலாம்” எனக் கூவினார்.
ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தோம்.
ஸ்வாமிஜிக்கு “பத்திரமாக” வந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
அந்த நாள் முதல் அவர் சரி என்று சொன்னால் மட்டுமே எந்த வேலையையும் தொடங்க வேண்டும் என்பது மட்டும் புரிந்தது. எங்கள் சாமர்த்தியத்தை அவரிடம் காட்டக் கூடாது என்பதும் கூடவே புரிந்தது!
இல்லாவிட்டால் நக்ஷத்திரம் அல்லவா ஒழுகும்?!
7
பர்மிஷன் வாங்கிட்டேன்!
ஆஸ்பத்திரியில் கட்டிலில் அமர்ந்திருந்த ஸ்வாமிஜி திடீரென்று, “சந்தானம், சாமாவுக்குப் பூணுல் போடணும்” என்றார், என் தந்தையிடம்!
என் தந்தையார், “சரி போடறேன்” என்றார்.
“உடனே போடணும். மதுரையிலேயே!”
என் தந்தையார் தயங்கினார். மென்று முழுங்கினார்.
“இல்லை, திருப்பதியில் வந்து போடறென் – னு வெங்கடஜலாபதிக்கு வேண்டிண்டிருக்கேன்…”
எனக்கும் என் அண்ணனுக்கும் திருப்பதியில் தான் பூணூல் போடப்பட்டது. எனது தம்பிக்கும் அப்படி ஒரு வேண்டுதல்!
ஸ்வாமிஜி மௌனமாக கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
சில நிமிடங்கள் கழிந்தன.
என் தந்தையாரைப் பார்த்தார் அவர்.
“உம், இங்கேயே போடலாம். பர்மிஷன் வாங்கிட்டேன்”
வேங்கடாஜலபதி பர்மிஷன் கொடுக்க மஹா கணபதி அதை ஆமோதிக்க என் தம்பி ஸ்வாமிநாதனின் பூணூல் மதுரையிலேயே போடப்பட்டது.
ஒரு மூட்டை அரிசி உள்ளிட்ட பொருள்கள் ஸ்வாமிஜியால் அனுப்பப்பட்டது எனக்குத் தெரியும்.
இப்படி இறைவனுடன் நேருக்கு நேர் பேசும் பெரும் மகான் அவர்.
நல்ல மழை. சுபயோக சுபதினம். பூணூல் போடப்பட்டது.
ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் அவரது அருள் பார்வை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் ஒரு வித துன்பமும் எங்களுக்குத் தெரியவில்லை.
சொல்லப் போனால் திரௌபதி, “கிருஷ்ணா, எனக்குக் கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டே, இரு. அப்போது தான் உன்னைப் பற்றி நினைப்பு இருந்து கொண்டே இருக்கும்” என்று பிரார்த்தித்தாள் அல்லவா! அந்த நிலையும் உணர்வும் உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.
ஒவ்வொரு சிறு பிரச்சினை வந்தாலும் அங்கு இடர் தீர்க்க அவர் இருந்தார்.
அது ஒரு பொற்காலம். பூர்வ ஜென்ம புண்யத்தை அனுபவித்த காலம் அல்லவா அது!
ஸ்வாமிஜி நினைவை நாளும் போற்றுகிறோம். அவரை வணங்கிக் கொண்டே இருக்கிறோம்!
***
TAGS- ஸ்வாமிஜி கிருஷ்ணா-3