நடுவெழுத்தலங்காரப் பாடல் – 3 (Post No.10,730)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,730
Date uploaded in London – – 10 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 3
ச.நாகராஜன்

நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் புனைவது என்பது ஒரு கடினமான விஷயம்.

காளமேகப் புலவர் சித்திர கவி பாடுவதில் வல்லவர்.
அவர் புனைந்த ஒரு நடுவெழுத்து அலங்காரப் பாடல் இது:-

இது எண்சீர்க்கழி நெடிலடி விருத்தம் என்ற யாப்பு வகையில் அமைந்த ஒரு பாடலாகும்.

திருமால் வாகன நாவா யிராசியொன்று
கிளைதெவிட்டார் மாதுலன்கோ கிலமெவ் வேழின்
உருவாமே றெழுத்துநடு வெனக்குச் செய்தான்
உடனான பதினான்குந் தானே கொண்டான்
ஒருபாகத் திருத்தினான் றலையி லேற்றான்
ஒருமதலை தனக்களித்தா னுண்டான் பூண்டான்
பரிவாயொண் காத்தமைத்தா னுகந்தா னிந்தப்
பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன் றானே

அருமையான இந்தப் பாடல் தில்லையில் கூத்தாடும் சிவபிரானைப் பற்றிய ஒரு பாடல்.

பாடலின் பொருள் இது:
இந்தப் பைம்பொழிழ் தில்லையுள் ஆடும் பரமன் – பசுமையான சோலை சூழ்ந்த இந்தத் தில்லையில் (சிதம்பரத்தில்) நடனம் புரிகின்ற மேலோனாகிய சிவபிரான்
திருமால் வாகனம் – கருடன் (நாகாரி)
நாவாய் – தெப்பம் (கலம்)
இராசி ஒன்று – கன்னி
கிளை – கவடு
தெவிட்டார் – ஆரார்
மாதுலன் – மாமன்
கோகிலம் – பல்லி
இவ்வேழின் – இந்த ஏழு சொற்களில் உள்ள
உரு ஆம் ஏழ் எழுத்து நடு – வரி வடிவாம் நடு எழுத்து ஏழு எழுத்தாலும் ஆகியதை
எனக்குச் செய்தான் – (காலன் வராமல் – என்பதை எனக்குச் செய்தான்
உடனான பதிநான்கும் தானே கொண்டான் – கூட இருந்த பதினான்கையும் தானே கொண்டு
ஒரு பாகத்துக்கு இருத்தினான் – (முறையே) நீரை நாரியை ஒரு பங்கில் வைத்துக் கொண்டான்
தலையில் ஏற்றான் – சிரத்தில் ஏற்றுக் கொண்டான்
ஒரு மதலை தனக்கு அளித்தான் – (கனி மாங்கனியை) ஒரு புதல்வனுக்குத் தந்தான்
கடு – விஷத்தை உண்டான்
ஆர் – அத்தி மாலையை பூண்டான்
பரிவாய் – அன்போடு
ஒள் கரத்து அமைத்தான் மானை – (பலி பிச்சையை_ அழகாகிய கையில் அமைத்துக் கொண்டான்
உகந்தான் – சினை தெவிட்டார் என்றும் பட்டம் உண்டு – சினை கவடு விரும்பினான்.

நா(கா)ரி, க(ல)ம், க(ன்)னி, க(வ)டு, ஆ(ரா)ர், மா(ம)ன், ப(ல்)லி, நடுவில் உள்ள ஏழு எழுத்துக்களை இப்போது எடுத்துப் பார்த்தால் வரும் சொற்கள் – காலன் வராமல் என்பதாகும்.
காலன் வராமல் என்பதை எனக்குச் செய்தான் என்று பொருள் அமைகிறது.

இந்தச் செய்யுளில் பாடபேதங்களும் உண்டு.
ஒரு பாகத்திருத்தினான் கையிலேற்றான் என்று சிலர் கூறுவர்.
பாகம் – இதில் வரும் கம் என்பதை கபாலம் என்று பொருள் கொள்வர்.
ஆனால் பின்னால் கரத்து அமைத்தான் என்று வருவதால் இதை மேலே பாடலில் வருவதன்படியே
ஒரு பாகத்திருத்தினான், தலையிலேற்றான் என்பதே சிறப்புடையதாகும்.

இனி நடு எழுத்துக்களை நீக்கி விட்டு வரும் சொற்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
அவை தான் கூட இருந்த பதினான்கு ஆகும். அவற்றைத் தானே கொண்டான் என்கிறார் புலவர்.
அவையாவன :-
நாரி, கம், கனி, கடு, ஆர், மான், பலி ஆகிய ஏழு சொற்களைக் காணலாம்.

அதாவது பெண்ணை பாகத்தில் இருத்தினான்,
நீரைத் தலையில் ஏற்றான்,
கனியைப் புதல்வனுக்குத் தந்தான்,
விஷத்தை உண்டான்,
ஆத்தி மாலையை அணிந்தான்,
மானைக் கையில் அமைத்தான்,
பலியை விரும்பினான்
என்ற பொருள் அமைவதைக் காணலாம்.
இப்படி ஏழு வரலாறுகளைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நடுவெழுத்தலங்காரப் பாடல்!

கனி கொடுத்த செய்தி விநாயகரையும், முருகனையும் பற்றிய வரலாறாகும். நாம் அறிந்த
ஒன்று தான் அது. பழநி மலை வரலாறை மறக்க முடியுமா என்ன?

தமிழ் மொழியின் சிறப்பு என்ன என்று கேட்டால் இது போன்ற பாடல்களைச் சொன்னால் கேட்பவர்கள் தமிழ் என்னும் விந்தையைப் பற்றி அறிந்து மகிழ்வர்!


TAGS-  காளமேகப் புலவர், சித்திர கவி, 

Leave a comment

Leave a comment