எண்கள் தரும் ஞானம்! (Post.10,981)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,981

Date uploaded in London – –     14 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

எண்கள் தரும் ஞானம்!

ச.நாகராஜன்

உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் இருந்து வேறுபடும் அற்புத மொழிகளாகிய தமிழும் சம்ஸ்கிருதமும் கொண்டிருக்கும் அளப்பரிய ஞானம் சொல்லுக்கு அப்பாற்பட்டது.

இந்த இரு மொழிகளும் எண்களுக்குத் தரும் முக்கியத்துவமே தனி.

ஒன்று முதல் முப்பத்து முக்கோடி என்ற எண் வரை நமக்கு இவை வழங்கும் ஞானம் பிரமிக்க வைக்கும்.

ஒன்று என்று எடுத்துக் கொண்டால் ஏகம் சத் – உண்மை ஒன்றே என்று பிரம்மாண்டமான ஒரு ரகசியத்தை விண்டுரைக்கும் வேதம்.

இதையே ஒன்றெ குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்கால் அறிகிறோம். ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு என்றார் பட்டினத்தார்.

குபேரனுக்கு ஒரு கண். ஆத்மா ஒன்றே.

குபேரன், பலராமன், சேஷநாகம் ஆகிய மூவருக்கும் குண்டலம் ஒன்றே.

சூரியன் பவனி வருவது ஒரு சக்கரத்தாலேயே.

கணபதிக்கு ஒரு தந்தம் தான்! (ஏகதந்தம் உபாஸ்மஹே) மந்திரமும் ஒன்றே ஒன்று தான் – அது தான் ஓம்!

இரண்டு எடுத்துக் கொண்டால் அஞ்ஞானம் இரு வகைப்படும். ஒன்று அவிவேக ரூபம் இன்னொன்று விகல்ப ரூபம்.

அனாதி தத்வம் இரண்டு 1) புருஷம் 2) ப்ரக்ருதி.

இந்திரியங்கள் இரு வகை 1) கர்மேந்திரியம் 2) ஞானேந்திரியம் உபாசனை இரு வகை 1)சகுணோபாசனை 2) நிர்குணோபாசனை காவிய வகைகள் இரண்டு தான் 1) ச்ரவ்ய காவியம் 2)த்ருஷ்ய காவியம்

மூன்று என்ற எண்ணை எடுத்துக் கொண்டால் குணங்கள் மூன்று சத்வம், ரஜஸ்,தமோ.

ருணம் அதாவது கடன்கள் மூன்று. மாதா, பிதா, ருஷி ஆகிய மூவருக்குமான கடன்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ரிஷிகள் மூவகைப் பட்டவர்கள். பிரம்ம ரிஷி, தேவ ரிஷி, ராஜ ரிஷி.

கர்மங்கள் மூவகைப் படும் சஞ்சித கர்மம், க்ரியமான கர்மம், ப்ராரப்த கர்மம்.

காலங்கள் மூன்று – இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம். மிக அரிதானவை மூன்று – மனிதப் பிறவி எடுப்பது, முமுக்ஷூத்வம் அடைவது, மஹாபுருஷர்களின் தொடர்பு.

நர்த்தனம் மூவகைப் படும், நாட்டியம், ந்ருத்யம், ந்ருத்தம்.

தந்தையாகக் கருதப்படுபவர் மூவர். ஜென்ம தாதா -(பிறவி தந்த தந்தை), ப்ராண தாதா (உயிரைக் காப்பாற்றியவர்), அன்ன தாதா (அன்னமிட்டவர்)

யோகம் மூன்று வகைப்படும் – கர்ம யோகம்,ஞான யோகம், பக்தி யோகம்.

தெரிந்து கொள்ள வேண்டிய ராமர்கள் மூவர்: பரசுராமர், தசரத ராமர், பலராமர்.

நான்கு என்று எடுத்துக் கொண்டால் அதர்மங்கள் நான்கு – சரணமடைய வந்தவனை ஏற்க மறுப்பது, பெண்களைக் கொல்வது, பிராமணரின் சொத்தை அபகரிப்பது, நண்பனுக்கு துரோகம் செய்வது.

‘பரம மஹான் வஸ்து என்பவை நான்கு : காலம், ஆன்மா, ஆகாயம், திக்

ஐந்து என்று எடுத்துக் கொண்டால் சர்வ பாபங்களையும் நாசம் செய்ய தினமும் நினைக்க வேண்டிய பஞ்ச கன்யாக்கள் :

அகல்யா, தாரா, மண்டோதரி, சீதா, திரௌபதி

அக்ஷய நிதி என்பவை ஐந்து : சீலம் (ஒழுக்கம்), சூரத்தன்மை, சுறுசுறுப்பு (சோம்பேறித்தனம் இல்லாமை), பண்டிதத்வம், நல்ல நண்பர்களை அடைவது ஆகிய இவையே அழியாத செல்வங்கள்.

ரிஷிகள் ஐந்து வகைப்படுவர். மத்ஸ்ய புராணத்தின் படி இவர்கள் – அவ்யக்தாத்மா, மஹாத்மா, அஹங்காராத்மா, பூதாத்மா, இந்த்ரியாத்மா.

ஓதவும் கேட்கவும் வேண்டிய ஸூக்தங்கள் ஐந்து : புருஷ ஸூக்தம், தேவி ஸூக்தம்,  சூர்ய ஸூக்தம், பர்ஜன்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம்.

ஆறு என்று எடுத்துக் கொண்டால் குருமார் ஆறு வகைப்படுவர் :

ப்ரேரக், சூஸக், வாசக், தர்ஷக், போதக், சிக்ஷக்.

கீதம் ஆறு வகைப்படும் : சுஸ்வரம், சுரஸம், சுராகம், மதுராக்ஷரம், சாலங்கார், சப்ரமாண்.

இப்படி வரிசையாக ஒன்று முதல் ஒரு லக்ஷத்திற்கும் மேற்பட்ட எண்கள் தரும் ஞானத்தை இதிஹாஸ, சாஸ்திரங்களிலிருந்து நாம் காணலாம். எண்கள் மூலம் உயர் ஞானத்தை அடையலாம். (எனது தொகுப்பில் சுமார் 20000 மட்டுமே உள்ளன)

அருட்பிரகாச வள்ளலார் தமிழின் பெருமை எண்ணுக்கும் எழுத்துக்கும் அப்பாற்பட்டது என்று சொல்லி அதை சொல்லத் தொடங்க, அதைக் கேட்ட அனைவரும் பிரமித்தனர். ஒரு கட்டத்தில் எல்லையற்ற மஹிமையைக் கேட்க முடியாமல் அனைவரும் திகைத்தனர்.

இதே போல பாஸ்கரராயர் அளவற்ற தேவதா சொரூபங்களைச் சொல்லி வர அவரை மட்டம் தட்ட நினைத்த எதிர் வாதிகள் பிரமித்து அவருக்கு அடி பணிந்தனர். இப்படி எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட காலமும் கணக்கும் நீத்த காரண சக்தியை தமிழும் சம்ஸ்கிருதமுமே விளக்குவதை நன்கு அறிய முடியும்.

இது ஒரு புறமிருக்க அருளாளர்கள் ஒன்று முதல் பத்து வரை எண்கள் கொண்ட ஏராளமான பாசுரங்களையும் பதிகங்களையும், பாடல்களையும் அருளியுள்ளனர்.

திரு எழு கூற்றிருக்கை என்ற யாப்பு அமைப்பில் சிவபிரானைப் பற்றி நக்கீரர் மற்றும் திருஞானசம்பந்தரும் திருமாலைப் பற்றி திருமங்கையாழ்வாரும் முருகனைப் பற்றி அருணகிரிநாதரும் அருளிச் செய்துள்ளனர்.

இவற்றில் ஒன்று முதல் ஏழு வரை எண்கள் கூடியும், குறைந்தும் வரும். பாடல் அமைப்பு தேர் போல இருக்கும்.

எடுத்துக்காட்டாக திருக்கழுமலத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய திரு எழுகூற்றிருக்கையில்,

“ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய் எனத் தொடங்கும் பதிகத்தைக் காணலாம்.

இதில் எண்கள் செய்யும் ஜாலம் ஏராளம். ‘ஓர் ஒரு என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்து வாக்கு, மனம் ஆதிகளுக்கு எட்டாத உரு என்ற அர்த்தத்தை தருகிறது. 

‘ஈர் இயல்பு என்பது சக்தி சிவத்தைக் குறிக்கிறது.  ‘மும்மூர்த்திகள் ஆயினை என்பது ‘பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திரி மூர்த்திகள் ஆனாய் என்பதைச் சொல்கிறது. விருட்சங்களுக்கு எல்லாம் தலைமையாக அமையும் வட விருக்ஷத்தின் நீழலில் உதயம், மத்தியானம், அஸ்தமனம் என்ற மூன்று காலங்களிலும் தோத்திரம் செய்யும் அகத்தியன், புலஸ்தியன், ஜனகன், சனத்குமாரன் ஆகிய நால்வருக்கும் சிவபிரான் திருமேனியைக் காட்டியது குறிக்கிறது.

இப்படி ஒன்று முதல் ஏழு வரை எண்கள் கூடியும் குறைத்தும் வரும் போது எண்ணற்ற தத்துவங்களையும் அருமையான ரகசியங்களையும் நம்மால் அறிய முடிகிறது.

எண்களுக்கென நம் வாழ்க்கையில் ஒரு தனி இடத்தைத் தினம் தோறும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டியது தான்.

தமிழ் இன்பத்தையும் அடையலாம்; முக்திப் பேறுக்கான எண்கள் தரும் ரகசியங்களையும் பெறலாம். சொல்லப் போனால் நமது வாழ்க்கை மொத்தத்தையும் ஆள்வது எண்களும் எழுத்துக்களுமே!

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு (திருக்குறள் எண் 392)

***


Tags-  எண்கள் ,ஞானம்,

Leave a comment

Leave a comment