Post No. 11,095
Date uploaded in London – – 11 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 26
ச.நாகராஜன்
பட்டாபி சீதாராமையா தனது Feathers and Stones என்ற நூலில் குறிப்பிடும் சம்பவங்கள் இவை.
1
கூடுதலாக வந்த நாணயங்கள்!
ஒருவர் ஒரு ரயில் நிலையத்திற்குச் சென்று ஸ்லாட் மெஷினில் ஒரு அணாவைப் போட்டு விட்டு டிராயரைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கட் இருக்கும். அதே போல சிகரட் பெட்டி, தீப்பெட்டி, சாக்லட் அல்லது சில்லறை நாணயங்கள் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் பெற முடியும். இந்த ஸ்லாட் மெஷின்களைப் பற்றி பல விசித்திரமான கதைகள் உண்டு.
ஒரு முறை நண்பர் ஒருவர் இதில் அரை ஷில்லிங் நாணயம் ஒன்றைப் போட்டார். அவருக்கு வர வேண்டியது 6 காப்பர் நாணயங்கள். ஆனால் அவருக்கு வந்ததோ 26 காப்பர் நாணயங்கள்! கூடுதலாக உள்ள 20 நாணயங்களை அவர் என்ன செய்வது? ரயில்வே அதிகாரிகள் இது பற்றிய புகாரை வாங்க மறுத்து விட்டார்கள். ஏனெனில் அது அனாவசியமாக கடிதத் தொடர்பை நீட்டித்துக் கொண்டே போகும். அது மட்டுமல்ல, இந்த தவறுதலுக்காக அவர்கள் பக்கம் யாரேனும் ஒருவர் பலி ஆக வேண்டி இருக்கும். கூடுதலாக நிறைய நாணயங்களைப் பெற்றதால் அவர் மனச்சாட்சி உறுத்த அவர் என்னிடம் வந்து யோசனை கேட்டார் -“ இப்படி உங்களுக்கு நேர்ந்தது என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று?”
உடனே நான் சொன்னேன் -“ ஆறு நாணயங்களை நான் வைத்துக் கொள்வேன். மீதியை இருபது பிச்சைக்காரர்களுக்குப் போட்டு விடுவேன்.”
அதற்கு அவர், “ஓ! எங்கள் இங்கிலாந்தில் பிச்சைக்காரர்களே கிடையாது” என்று ஒரு போடு போட்டார்.
ஆனால் அவர் தனக்குப் பல சமயம் ஒரு பென்னி நாணயம் போட்டு ஒன்றுமே வராததை நினைத்துத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்.
(அதற்கு நஷ்ட ஈடாக இதை அவர் வைத்துக் கொண்டார் போலும்!)
2
ஒரு அணாவுக்கு இருவர் எடை பார்ப்பது எப்படி?
இந்த ஸ்லாட் மெஷின் சம்பவம் அலெக்ஸாண்டர் உபயோகித்த எடை மெஷினைப் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது.
ஒருவருடைய சரியான எடையைக் கண்டுபிடிக்க பல சரிபார்க்கும் கணக்குகளைப் போட வேண்டி இருக்கும்.
அதில் நின்று, முன்னால் குனிந்தால் 154 பவுண்ட் என்று அது காண்பிக்கும். பின்னால் சாய்ந்தாலோ 350 பவுண்ட் என்று அது காண்பிக்கும். ஆகவே உங்கள் எடையை கூட்டிக் கழித்து பார்த்து 152 என்று கொள்ள வேண்டி இருக்கும். பல ரயில் நிலையங்களில் சில எடை மெஷின்கள் செங்குத்தாக இருக்கும். மேலே டயல் இருக்கும். அதில் ஒரு அணாவைப் போட்டு உங்கள் எடையைப் பார்க்க வேண்டி இருக்கும். சில சமயங்களில் ஒரு அணாவைப் போட்டு இரண்டு பேரின் எடையைக் கூடப் பார்க்கலாம்.
ஒரு பெண்மணி, அவள் புருஷன், அல்லது இரண்டு பெண்மணிகள் அல்லது ஒருவரோடு அவர் குழந்தை என்று இப்படி இருவர் எடையைப் பார்க்க முடியும். அப்போது என்ன செய்வது?
ஒரு அணாவை ஓட்டை வழியே போடுங்கள். இருவரும் ஏறி நில்லுங்கள். எடையைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒருவர் இறங்கி விடுங்கள். இப்போது வரும் எடையைக் குறித்துக் கொள்ளுங்கள். முதலில் உள்ள எடையை இப்போதுள்ள எடையிலிருந்து கிடைத்தால் வருவது கீழே இறங்கியவரின் எடை.
என்ன கணக்கு சரி தானே! இப்படிப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3
மொழிக் குழப்பம்
ஒரு சேட் தனது உதவியாளரைக் கூப்பிட்டார். அவர் அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்ததால் ஒரு தந்தியை தனது வீட்டிற்கு அனுப்பச் சொன்னார்.
உதவியாளரும் தந்தியை அனுப்பினார். தந்தி இது தான்.
பாபுஜி ஆஜ் மர் கயே. படி பஹு கோ பேஜ் தோ!
பாபுஜி – பாபுஜி,; ஆஜ் – இன்று, மர் கயே – இறந்து விட்டார்.
படி பஹூ கோ – பெரிய பெண்ணை
பேஜ் தோ – அனுப்பு.
அலறி அடித்துக் கொண்டு வந்தாள் பெண்.
ஆனால் பாபுஜி இறக்கவில்லை என்று தெரிந்து கொண்டு அனுப்பி இருக்க வேண்டிய தந்தியின் வாசகத்தையும் கண்டு பிடித்தாள்.
உதவியாளர் அனுப்பி இருக்க வேண்டிய தந்தி இது தான்.
பாபுஜி ஆஜ்மீர் கயே படி பஹி கோ பேஜ் தோ
பாபுஜி – பாபுஜி, ஆஜ்மீர் கயே – ஆஜ்மீருக்குப் போயிருக்கிறார்
பாடி பஹி கோ – பெரிய கணக்குப் புத்தகத்தை
பேஜ் தோ – அனுப்பு.
ஆஜ்மீர், பஹு, பஹி என்ற வார்த்தைகள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன, அவ்வளவு தான்!
இப்படி ஏராளமான சுவையான நகைச்சுவைகளையும், உண்மையான சம்பவங்களையும் குறித்து வைத்துள்ளார் பட்டாபி சீதாராமையா!
***
Tags- நடந்தவை தான் நம்புங்கள் 26, பட்டாபி சீதாராமையா