ஆயுள் குறைய ஏழு காரணங்கள் : சமணர் தகவல் (Post No.11,143)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,143

Date uploaded in London – –    27 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சமண மதத்தின் 24-ஆவது தீர்த்தங்கரர்தான் கடைசி தீர்த்தங்கரர். புத்தர் காலத்துக்கு சற்று முந்தி பீஹாரில் கொள்கைப் பரப்பு செய்தவர் . புத்தர், பாலி மொழியில் பேசி க்ஷத்ரியர்களைக் கவர்ந்தார் ; மஹாவீரர், அர்த்த மாகதி  மொழியில் பேசி வைஸ்யர்களைக் கவர்ந்தார். இந்து சமய பெரியோர்கள் சம்ஸ்க்ருதத்தில் பேசி அனைவரையும் கவர்ந்தனர்.! சம்ஸ்க்ருதம் படித்தோருக்கு பாலி, அர்த்தமாகதி போன்ற மொழிகள் மிகவும் எளிதில் புரியும். நிற்க.

சமண மதக் கொள்கைகளை மஹாவீர வசனாம்ருதம் என்ற நூல் சொல்கிறது.

ஆயுள் குறைய  மஹாவீரர் சொல்லும் 7 காரணங்கள் :

அஜ்ஜவ ஸாண  நிமித்தே ஆஹாரே வேயணா பராகாயே

F பாஸே ஆணாபாணு சத்தவிஹம் ஜிஜ்ஜயே  ஆஉம்

கீழ்கண்ட ஏழு வழி களில் மனித ஆயுள் குறைகிறது :

1.அத்யவசான

சில கவலைகளை நினைத்து நினைத்து ஏங்குதல் ; அதாவது தனக்கோ குடும்பத்திலோ ஏற்பட்ட துயர சம்பவங்களை நினைத்துக் கொண்டே இருத்தல் ; காதல், வெறுப்பு, அதிர்ச்சி தரும் சம்பவங்களும் இதில் அடக்கம் .

2.நிமித்த

ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள்

3.ஆஹார

அதிக உணவு, தவறான உணவு

4.வேதனா

நோய்கள் தரும் துன்பம்

5.பராகாத

உயரத்தில் இருந்து கீழே விழுதல் ; பொதுவாக விபத்துக்கள்

6.ஸ்பர்ஸ

விஷ ஜந்துக்களினால் ஏற்படும் மரணம் ; அல்லது பாறை விழுந்து, பாறையில் மோதி இறத்தல்

7.ஆண ப்ராண

மூச்சு விடுதலில் வரும் கோளாறுகள் நுரையீரல் கோளாறுகள்

எனது விளக்கம் –

1.கவலை , வெறுப்பு, தோல்வி முதலியன மனிதனைக் கொள்ளும் என்ற அரிய விஷயம் முதல் காரணத்தில் உளது . உலகெங்கிலும் நடக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை இதற்கு ஒரு சான்று . ஆகவே கவலை,வெறுப்பு ஆகியனவற்றை ஒதுக்கவேண்டும். கோபத்தினால் நாடியிலே  அதிர்ச்சி உண்டாம் என்ற பாரதியார் பாடலை இங்கே நினைவு கூறுதல் பொருத்தம் :-

சென்றதினி மீளாது மூடரே ! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர் ! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம்  என்று நீவிர்

எண்ணமதை த் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று  இருந்து வாழ்வீர் ;

தீமையெலாம் அழிந்து போம் , திரும்பி வாரா

— சுப்ரமண்ய பாரதியார்

இன்னும் ஒரு பாடலில் கோபமும் காதலும்/காமமும்தான் மனிதனின் ஆயுள் குறையக் காரணம் என்கிறார் :

அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்

மிச்சத்தைப் பின் சொல்வேன் ; சினத்தை முன்னே

வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை

— சுப்ரமண்ய பாரதியார்

XXXX

சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பார்

— சுப்ரமண்ய பாரதியார்

XXXX

கோபத்தால்  நாடியிலே அதிர்ச்சி உண்டாம்

கொடுங்கோபம் பேரதிர்ச்சி ; சிறிய கோபம்

ஆபத்தாம் , அதிர்ச்சியிலே சிறியதாகும் ;

அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்

தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும் ;

கவலையினால் நாடியெலாம் சிதைந்து வேகும் ;

கோபத்தை வென்றிடவே பிறவற்றைத்தான்

கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே

— சுப்ரமண்ய பாரதியார்

xxx

2. எவ்வளோ தொழிற்சாலை விபத்துக்களை தினமும் பத்திரிகையில் படிக்கிறோம். உலகில் எப்போதும் குறைந்தது 50 இடங்களில் போர், சண்டை, பெரிய மோதல் நடந்து வருகிறது இன்றி எக்கனாமிக் டைம்ஸ் ஆண்டு மலர் (Economic Times Annual Issue ) கூறும். ஆக  ஆயுதங்களால் , கருவிகளால் மரணம் வரும் என்பது உண்மையே ; ஜப்பானில் அமெரிக்கா போட்ட  இரண்டு அணுகுண்டுகளால் சில நொடிகளில் பல லட்சம் பேர் இறந்ததை உலகம் அறியும். அண்மைக்காலத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் இராக் , லிபியாவில் எவ்வளவு பேரைக் கொன்றனர் என்பது விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உள்ளது

3.ஆஹார

உணவு எவ்வளவு பேரைக் கொல்கிறது என்பதை எழுதப் போனால் ஒரு நூல் அளவுக்குக் கட்டுரை விரிந்துவிடும். சர்க்கரை நோய் வந்தால், அதன் சகோதர்கள் ரத்த அழுத்தமும், இருதய நோயும் வந்து விடும். உடற் பருமன் அதிகரித்தாலோ மூன்று நோய்களும் குடி ஏறி விடும். சத்தில்லாத உணவுகளையோ, விஷ உணவுகளையோ, அதிகமான மாமிச உணவுகளையோ சாப்பிவிட்டாலோ, நோய்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வெற்றிலை பாக்குடன் (Invitation to diseases) வரவேற்றது போல ஆகிவிடும்.

4. நோய்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை; எந்த விஞ்ஞானியும் முன்கூட்டி எச்சரிக்காத கோவிட் (Covid)  என்னும் சீன வைரஸ் கோடிக்கணக்காணோரைக் கொன்றதை உலகம் அறியும் ; குரங்கு அம்மை (Monkey Pox)  , டெங்குக் காய்ச்சல் முதலியன அவ்வப்போது நம்மை அச்சுறுத்துகின்றன

5.விபத்துக்கள் எத்தனை மனிதர்களைக் கொல்கிறது என்பதையும் நினைவுபடுத்துகிறது இது. பூகம்பம், சுனாமி, பாறைச் சரிவு, பனிச்சரிவு, பனிப்பொழிவு என்பன இதில் அடக்கம்

6.பாம்பு, தேள், சிலந்தி, சுறாமீன்கள், முதலை , சிங்கம், புலி, யானை  முதலியவற்றால் இறப்போர் இந்த வகையில் சேரும்

7.மூச்சு தொடர்பான வியாதிகள்(Respiration Diseases) – ஆஸ்த்மா முதல் கொரோனா வரை எவ்வளவோ உள்ளன.இவற்றின் புள்ளி விவரங்களை அவ்வப்போது பத்திரிக்கைக் கட்டுரைகளில் காணலாம்.

இந்த ஏழு காரணங்களையும் விலக்கி விட்டு, ஆரோக்கியமான வாழ்வு வாழ எத்தனையோ வழிகள் உண்டு; நோய்கள் வந்தபின்னர் வருந்துவதை விட, வருமுன் காப்பதே அறிவுடைமை / புத்திசாலித்தனம் ஆகும்.

XXX SUBAHM XXXX

Tags- சமணர், 7 காரணங்கள், ஆயுள், குறைய, மஹாவீர, வசனாம்ருதம்

Leave a comment

Leave a comment