பிரார்த்தனை புரிபவனுக்குப் பாவம் இல்லை! (Post No.12,033)


 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,033

Date uploaded in London –   23 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சம்ஸ்கிருத சுபாஷிதம்

பிரார்த்தனை புரிபவனுக்குப் பாவம் இல்லை!

 ச. நாகராஜன்

 உழுபவனுக்கு உணவுப் பஞ்சம் இல்லை!

உழுபவனுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. பிரார்த்தனை புரிபவனுக்குப் பாவம் இல்லை. மௌனத்தைக் கடைப்பிடிப்பவனுக்கு சண்டை இல்லை; விழிப்புடன் இருப்பவனுக்கு பயமே இல்லை.

இப்படி பல உண்மைகளைச் சொல்கிறது ஒரு சுபாஷிதம்.

க்ருஷதோ நாஸ்தி துர்பிக்ஷம் ஜபதோ நாஸ்தி பாதகம் |

மௌனின: கலஹோ நாஸ்தி  நாஸ்தி ஜாக்ரதோ பயம் ||

மச்சானே வீட்டுக்கு நாசம்!

ஒரு அனுபவ மொழியை உதிர்க்கிறார் ஒரு கவிஞர்!

விவசாயம் அழகை நாசம் செய்கிறது!

குதிரைப் பந்தயம் செல்வத்தை அழிக்கிறது!

மச்சான் (மைத்துனன்) வீட்டை நாசம் செய்கிறான்!

தீயோ அனைத்தையும் நாசம் செய்கிறது!

க்ருஷிகா ரூப நாஷாய அர்த்தநாஷாய வாஜின: |

ஸ்யாகஜீ க்ருஹநாஷாய சர்வநாஷாய பாவக: ||

 புத்திரன் இல்லாத குடும்பமும் தாமரை இல்லாத ஏரியும்!

ஒரு குடும்பம் எவ்வளவு தான் வளமாக இருந்தாலும் சரி, அந்தக் குடும்பத்தில் ஒரு (வாரிசாக) மகன் பிறக்கவில்லை எனில் அந்தக் குடும்பம் அதிர்ஷ்டமுள்ளதாகச் சொல்லப்படமாட்டாது. ஒரு ஏரியானது முழுவதும் நீர் நிரம்பி இருந்தாலும் கூட சில தாமரை மலர்கள் அதில் இல்லை எனில் அது சோபிக்காது.

குலம் சுவ்ருத்தமப்யேதன் நிஸ்சோகம் தனயம் வினா |

ந ஷோபதே சர: பூர்ணம் அபேதகமலாகரம் || 

தர்ம வழியில் நிற்பவர்கள் யார்?

குடும்பத்தில் பாரம்பரியமான அநுஷ்டானங்களையும் இதர விஷயங்களையும் செய்பவர்களும்.  தனது பெற்றோருக்கு உரியனவற்றைச் செய்யும் சுத்தமான மனிதனும், சாஸ்திரங்களின் வழி நடக்கின்ற மனிதனும் – இவர்கள் அனைவரும் சரியான வழியைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்களே தர்ம வழியில் நிற்பவர்களாவர்.

குலமார்கபர் ஸ்ரேஷ்ட: ப்த்ரௌ சுஷூஷக: சுசி: |

சாஸ்த்ரமார்கனுசாரி ச தர்மிஷ்டோ தர்மமாப்நுயாத்

 நீசர்களின் ஒலிபரப்பு!

மற்றவர்களுடைய குடும்பம், குணங்கள், நடத்தை, படிப்பு, மற்றும் செயல்கள் ஆகியவை பற்றிய குற்றம் குறைகளை நீசர்கள் ஒலிபரப்புவார்கள் (உலகெங்கும்)! ஆனால் மிக சௌகரியமாகத் தங்கள் குற்றம் குறைகளை மறந்து விடுவர்!

 குலஷீல வ்ருத்ததோஷான் வித்யாதோஷாம்ஸ்ச கர்மதோஷாம்ஸ்ச |

கதயதி பரஸ்ய நீசோ ந து ஸ்மரத்யாத்மனோ தோஷான் ||

ஒரு புதிர்! விடை கண்டுபிடிக்க முடியுமா?

இதோ ஒரு சம்ஸ்கிருத ஸ்லோக புதிர்!

விடை கண்டுபிடிக்க முடியுமா?

அதன் முகம் கறுப்பாக இருக்கும் ஆனால் கறுப்பு பூனை இல்லை!

இரட்டை நாக்கு கொண்டது; ஆனால் அது ஒரு பெண் நாகம் இல்லை!

அதற்கு ஐந்து கணவர்கள் உண்டு; ஆனால் திரௌபதி இல்லை!

இதற்கு விடை சொல்பவர் பண்டிதரே தான்!

க்ருஷ்ணமுகீ ந மார்ஜாரீ த்விஜிஹ்வா ந ச ஸர்ப்பிணீ |
பஞ்சபர்த்தோ ந பாஞ்சாலி யோ ஜானாதி ந பண்டித: ||

ப்ரசேலிகா வகை புதிர் இது!

விடை என்ன?

பேனா!

ஆமாம் லேகானி!

கறுப்பு நிறம், இரு நாக்கு (நிப்); ஐந்து எஜமானர்கள் உண்டு – அந்தப் பேனாவிற்கு!

சம்ஸ்கிருத புதிர் விந்தைகளுக்கு ஒரு முடிவே இல்லை!

***

Leave a comment

Leave a comment