மூன்றாவது நண்பன்! (Post No.12,044)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,044

Date uploaded in London –   26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூன்றாவது நண்பன்! 

ச.நாகராஜன்

ஒரு மனிதனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். 

முதலாவது நண்பன் மீது அவனுக்கு அளவு கடந்த அன்பு. இரண்டாவது நண்பன் மீது மதிப்பும் மரியாதையும் பாசமும் உண்டு; ஆனால் முதல் நண்பனுக்கு அடுத்தபடியாகத் தான் அடுத்த நண்பனை அவன் வைத்திருந்தான்.

மூன்றாவது நண்பனுடன் அடிக்கடி பேசுவதில்லை. ஆனால் அவனும் நண்பன் தான்.

 ஒரு சமயம் ஒரு கோர்ட் கேஸில் அவன் சிக்கிக் கொண்டான். யாராவது காப்பாற்ற வேண்டிய நிலை.

வேகமாகத் தனது முதல் நண்பனிடம் ஓடினான். நடந்த விஷயத்தைச் சொன்னான்.

“உடனே என் கூட கோர்ட்டுக்கு வந்து என்னுடைய இந்த கேஸிலிருந்து என்னை நீ விடுவிக்க வேண்டும்” என்றான்.

முதல் நண்பனோ உடனே, “இதோ பார், இதற்கெல்லாம் உன்னுடன் கூட வர முடியாது. என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது” என்று கூறி விட்டான்.

அந்த மனிதனுக்கு சலிப்பும் ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டது.

நேராக இரண்டாவது நண்பனிடம் ஓடினான். நடந்த விஷயத்தைச் சொல்லித் தன்னைப் பாதுகாக்க உடனே கோர்ட்டுக்கு வருமாறு அழைத்தான்.

இரண்டாவது நண்பனோ, “ நீ சொல்வதெல்லாம் சரிதான், என்னால் கோர்ட்டுக்கு வர முடியாது. ஆனால் கூடவே கோர்ட் வாசல் வரை வருகிறேன்” என்றான்.

இதனால் சலிப்புற்ற அந்த மனிதன் மூன்றாவது நண்பனைப் பார்க்க ஓடினான். நடந்த விஷயங்களைக் கேட்டான் மூன்றாவது நண்பன்.

“என்னுடன் வந்து என்னைக் காப்பாற்றுவாயா?” என்று அந்த மனிதன் கேட்டான்.

மூன்றாவது நண்பன் புன்சிரிப்புடன், “இதை விட எனக்கு வேறு என்ன வேலை? வா, போவோம். உனக்காக நான் வாதாடுகிறேன், சாட்சி சொல்கிறேன், போவோம் வா” என்றான்.

அந்த மனிதனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கோர்ட்டுக்குச் சென்றனர் இருவரும். மூன்றாவது நண்பன் அடுக்கடுக்கான உண்மைகளைச் சொல்லி நண்பனை கேஸிலிருந்து விடுவித்தான்.

அந்த மனிதன் தனது உண்மையான நண்பன் மூன்றாவது நண்பனே தான் என்று தெரிந்து கொண்டான்.

கதை அல்ல இது, உங்கள் வாழ்க்கை தான் இது!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மூன்று நண்பர்கள் உண்டு.

1) செல்வம்

2) உறவும், சுற்றமும்

3) தர்மம்.

முதல் நண்பனான செல்வம் இந்த உலகில் ஆட்டம் போட்டுப் பாட்டுப் பாடி மகிழ்விக்கும். அது ஒருவன் மறையும் போது அடுத்த உலகிற்கு வராது. ஏனெனில் அது அங்கு செல்லுபடியாகாது.

அடுத்த நண்பனான உறவும் சுற்றமும் சுடுகாடு வரை நிச்சயமாக வருவர். அதற்கு மேல் அவர்கள் வர மாட்டார்கள்.

ஆனால் மூன்றாவது நண்பனாக தர்மமோ அடுத்த உலகிலும் வந்து நாம் செய்த நல்லது அனைத்தையும் ஒவ்வொன்றாக முன் வைத்து நம்மை சிக்கலிலிருந்து விடுவிக்கும். நமக்கு தர்மத்தால் அடைய வேண்டிய அனைத்தையும் பெற்றுத் தரும்.

ஒவ்வொருவரும் மூன்றாவது நண்பனான தர்மத்தை மறக்கவே கூடாது; அவனே நிஜமான துணைவன்; நண்பன்!

ஏக ஏவ சுஹ்ருத் தர்மோ நிதனேப்யநுயாதி ய: |

சரீரேன சமம் நாசம் சர்வம் அன்யது கச்சதி ||

செல்வமோ சுற்றமோ அல்ல; நல்ல மனதுடன் அனுஷ்டிக்கப்பட தர்மம் மட்டுமே நமக்குத் துணை; மற்ற அனைத்தும் அகன்று போய்விடும்!

***

Leave a comment

Leave a comment