
Post No. 12,052
Date uploaded in London – 28 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –
அத்தியாயம் 1
ச.நாகராஜன்
கனவு நிஜமானால் கஷ்டம் தான்!
29 வயதான ஜென்னா ஹோவல் (Jenn Howell) என்ற இளம் பெண்மணி கனவு ஒன்றைக் கண்டாள். அதில் அவள் சில மோசமான பேர்வழிகளிலிருந்து தப்பிக்க ஒரு ஓடும் ரயிலில் ஓடிக் கொண்டிருந்தாள். அவரது துணைவன் அவரிடம் உன் கையிலிருக்கும் மோதிரத்தை ஒளித்து வைத்துக் கொள் என்று கூற அவள் லபக்கென்று வாயில் போட்டு விழுங்கிக் கொண்டாள்.
திடீரென்று ஹோவல் விழித்தெழுந்தாள். அப்பாடா, கண்டது ஒரு கனவு தான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் அப்போது யதேச்சையாக தன் இடது கையைப் பார்த்த போது அங்கு மோதிரத்தைக் காணோம். நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கு எக்ஸ்ரே எடுத்த போது அதை அவள் விழுங்கி விட்டிருப்பது தெரிய வந்தது. என்டாஸ்கோபி மூலமாக மோதிரம் ஒரு வழியாக உடலிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது.
ஹோவல் மோதிரத்தை வடிவமைப்பைச் செய்தவரிடம் தான் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தார். அவர் சொல்லியிருந்தார் :
“அடடா! எப்படி இருக்கிறது இது! அப்படியே வாயில் போட்டு விழுங்கி விடலாம் போல இருக்கிறது!”
திறக்க முடியாத லாக்கர்!
ஸ்டீபன் மில்ஸ் என்பவர் ஒரு வெல்டர், மெஷினிஸ்டும் கூட. அவர் அல்பெர்டாவில் ஃபோர்ட் மக்மர்ரே என்ற இடத்தில் வசிப்பவர். அவர் வெர்மில்லியன் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு கண்காட்சியைப் பார்க்க வந்தார். அங்கு ஒரு 2000 பவுண்ட் மதிப்புள்ள பூட்டப்பட்ட லாக்கர் இருந்தது. அது 1990களில் நன்கொடையாக அங்கு தரப்பட்டிருந்தது. ஆனால் அதைத் திறக்கவே முடியவில்லை. பல நிபுணர்களும் வந்து அதைத் திறக்க முயன்றனர். முடியவே இல்லை. அதற்குள் நிறைய தங்கம் இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர்.
ஸ்டீபன் அந்த லாக்கரிடம் வந்த போது இந்த விஷயத்தை அங்கிருந்தவர் சொல்லக் கேட்டார். உடனே நான் இதைத் திறக்கப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு விளையாட்டாக 20-40-20 என்று அமுக்கி விட்டு மூன்று முறை வலது புறமும் இரு முறை இடது புறமும் திருகினார். என்ன ஆச்சரியம்! லாக்கர் திறந்து கொண்டது. உடனே அனைவரும் ஓடி வந்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அனைவருக்கும் ஆவல்!
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல அதில் தங்கமோ பணமோ இல்லை.
1977இல் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல் சர்வரின் ஆர்டர் புக் இருந்தது. 1978இல் 9.95 டாலர் செலுத்தப்பட்டதற்கான பேப்பர் இருந்தது. ஆனால் 40 வருடம் திறக்காக ஒரு லாக்கரைத் திறந்தாரே அதற்கு விலை மதிப்பு உண்டா என்ன?
வீட்டிலேயே நடைப்பயிற்சி
பிரான்ஸில் பல்மாவில் (Balma) ஒரு உணவுவிடுதியில் சர்வராக வேலை பார்த்து வந்தார் எலிஷா நோகோமோவிட்ஸ் (Elisha Nochomovitz). பார்சிலோனா மாரத்தானில் 2020 மார்ச் 15ஆம் தேதி கலந்து கொள்ள அவர் எண்ணியிருந்தார்.ஆனால் கோவிட் 19 தொற்று வரவே அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் விடவில்லை.
தனது வீட்டு 23 அடி நீள பால்கனியில் இந்தப்புறத்திலிருந்து அந்தப்புறமும் அந்தப்புறத்திலிருந்து இந்தப் புறமும் ஓட ஆரம்பித்தார். இப்படி 42 கிலோமீட்டர் ஓடினார். ஆறு மணி நேரம் 48 நிமிடத்தில் இது முடிந்தது. ஆனால் மூன்றரை மணி நேரம் தான் ஆகி இருக்க வேண்டும் அந்தப் போட்டியில் ஓடி வெற்றி பெற! என்றாலும் தனது இந்த வீட்டு சாதனையை அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். இவரைப் போல கோவிடினால், வீட்டில் ஓடிக் கொண்டே இருக்கும் அனைவருக்கும் ஒரே உற்சாகம். இதை வரவேற்று எலிஷாவைப் பாராட்டினர்.
பிரபல மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் தனது வாசகர்களிடமிருந்து பெற்ற நிஜமான சம்பவங்கள் தாம் இவை!
**