
Post No. 12,053
Date uploaded in London – – 28 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Pictures are from Wikipedia

வெளியூரிலிருந்து சொந்தக் காரர்களும், நண்பர்களும் மதுரைக்கு வந்தால் மூன்று இடங்களைச் சுற்றிக் காண்பிப்பேன். 1987-ல் லண்டனில் குடியேறுவதற்கு முன், சுமார் கால் நூற்றாண்டுக்குக்கு நான் செய்த “சேவை” இது. மதுரை மீனாட்சி கோவில் மற்றும் அதன் எதிரேயுள்ள புது மண்டபம், சற்று தொலைவிலுள்ள திருமலை நாயக்கர் மஹால், ஊருக்கு வெளியேயுள்ள மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய மூன்றும் என் ‘லிஸ்டி’ல் எப்போதும் உண்டு. பெண்களாக இருந்தால், என் தாயார் சின்னாளப்பட்டி சேலைக் கடைகளுக்கும், நகைக் கடைகள் மட்டுமே உள்ள தெற்காவணி மூல வீதிக்கும் அழைத்துச் செல்லுவார்.
மதுரையில் வானளாவிய கோபுரங்களைப் பார்க்கும் எவரும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை மறக்கமுடியாது. அந்த நாயக்கர் கதையை நான் எத்தனை பேருக்குச் சொன்னேனோ எனக்கே நினைவில்லை. அது மட்டுமா? கோவிலுக்கும் அரண்மனைக்கும் இடையுள்ள சுரங்கப்பாதை, மற்றும் மதுரை செளராஷ்டிர சமூகத்தினர் வீடு கட்டுகையில் அந்தச் சுரங்கத்திலிருந்து எடுத்த தங்கக் கட்டிகள் போன்ற வழக்கமான ‘கப்ஸா’ கதைகளையும் அவிழ்த்து விடுவேன். நான் சின்ன வயசில் நம்பியதை அவர்களும் நம்பட்டுமே !
xxxx
திருமலை நாயக்கர் மஹால் எனப்படும் அரண்மனை பற்றிய உண்மைக் கதைகளை இப்போது சொல்கிறேன் .
திருமலை நாயக்கர் (1627-1659) மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். தென் இந்தியாவில் துலுக்கப் படைகள் அழித்த அரண்மனைகள் போக எஞ்சியது இது ஒன்றுதான் . இதில் அவர் 75 வயது வரை மனைவிகளுடன் வசித்தார் . இப்போது நாம் காணும் அரண்மனையைப் போல நான்கு மடங்கு பெரிதாக 164-0ல் திகழ்ந்தது; பல வெளிநாட்டினர் குறிப்புகளிலிருந்து நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.
அரண்மனையின் முக்கியப் பகுதிகள்
ரங்க விலாசம் , சொர்க்க விலாசம், , 18 இசைக்கருவிகள் வாசிக்கும் மண்டபம், பல்லக்கு வைக்கும் மண்டபம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், மனைவிகள் வசிக்கும் அந்தப்புரம், நாடக சாலை, வசந்த வாவி, நந்தவனம், படைக்கலன் வைக்கும் இடம், யானைகள் கட்டும் தூண்கள் எனப்பல பகுதிகள்.
நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வசித்தனர் . இப்போது நாம் காண்பது சொர்க்க விலாசம் மட்டுமே; உள்ளே நுழைந்ததும் முற்றமும் பிரம்மாண்டமான தூண்களும் இருக்கும். அவை இளம் பெண்களின் கன்னங்களை விட வழுவழுப்பாக இருக்கும்.; தாஜ் மஹாலின் சலவைக்கற்கள் தோற்றுப்போகும் .இந்தப் பள பள வழு வழு ராட்சத தூண்கள்!! அவை எப்படிக் கட்டப்பட்டன என்பதை திருப்பணி மாலை பாடல் வருணிக்கிறது.
சுண்ணாம்பு, வெல்லச் சாறு, கடுக்காய், ஆமலகம், தான்றிக்காய், உளுந்து , காட்டுஞ் சாறு ஆகியவற்றை அரைத்து மேலே பூசினாராம். ஆமலகம் என்பது நெல்லிக்காய்.; முட்டைகளை அரைத்துக் கலந்து கட்டியதாகவும் செவி வழிச் செய்தி.
அரண்மனையைச் சுற்றி பெரிய நீண்ட மதில் சுவர் இருந்தது . 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட 900 அடி நீளமும் 600 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம்.. பின்னர் எல்லோரும் வீடு கட்ட, கிடைத்த பகுதிகளை எல்லாம் எடுத்துச் சென்று விட்டனர்.
.jpg)
ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை என்பது தமிப்பழமொழி. அப்படி இந்த அரண்மனை ம் மதில் சுவரும் மொட்டை அடிக்கப்பட்டன. 1868ல் சென்னை கவர்னராயிருந்த நேப்பியர் இந்த அரண்மனையின் அழகைக்கண்டு அந்தக்கால இரண்டு லட்சம் ரூபாய்களை செலவிட்டு பழுது பார்த்தார். வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி , தமிழ் நாடு தொல்பொருட் துறை இயக்குனராக இருந்த காலத்தில் மேலும் பாதுகாப்பு மற்றும் திருப்பணிகளைச் செய்தார் .
அரண் மனையின் தற்போதைய கட்டிட உயரம் 58 அடி. தூண் களின் எண்ணிக்கை 248. தூண்களின் உயரம் 82 அடி; அகலம் 6 அடி; மூன்று நான்கு பேர் இருந்தால்தான் அதைக் கட்டிப்பிடிக்க முடியும்.
கூரைகளில் சிவன், விஷ்ணு புராணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன
1981ம் ஆண்டு முதல் ஒலி -ஒளிக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது . நாள்தோறும் நடக்கும் இக்காட்சியில் மஹாலின் சிறப்பும் மன்னரின் சிறப்பும் விதந்து ஓதப்படுகிறது.
இப்போதும் அரண்மனைக்கு சற்று தொலைவில் பத்துத் தூண் என்ற பகுதி இருக்கிறது. அங்கேதான் யானைகள் நிறுத்தப்பட்டன.
திருமலை நாயக்கரின் பேரன் இந்தக் கட்டிடத்தின் சில பகுதிகளை இடித்து திருச்சிக்கு கொண்டு சென்று புதிய அரண் மனை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கிருந்த பொக்கிஷங்களையும் அவர் எடுத்துச் சென்றார்.
சொர்க்க விலாசம்
இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகள் வழியே மேலே செல்லலாம்;.உயர்ந்த தூண்களும், வேலைப்பாடுமிக்க சுதைகளும் (சிற்பங்கள்) இருக்கும் உயரமான பகுதி; ஒரு காலத்தில் இதன் தூபிகள் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன .நடுவில் யானைத் தந்ததினால் ஆன மண்டபம் இருந்தது. அதில் வைக்கப்பட்ட இரத்தின சிம்மாசனத்தில் நாயக்கர் அமர்ந்து அரசவை நடத்தினார். இதைக் கற்பனை செய்து மனக்கண்களில் பார்த்தால் இதற்கு ஏன் சொர்க்க விலாசம் என்று பெயரிட்டனர் என்பது புரியும் .
XXX

செங்கோல் விழா
மதுரையை ஆள்வது மீனாட்சி அம்மன் ; அவரது பிரதிநிதிதான் பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும். இது புற நானூற்றிலும் உள்ளது. பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி. அவர் இரண்டு பேருக்குத்தான் சல்யூட் Salute அடிப்பாராம் ; ஆசீர்வாதம் செய்யும் பிராமணர்களுக்கு ஒரு முறை தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். அடுத்த சல்யூட் மீனாட்சி கோவிலுக்கு; அங்கே செ ன்றாலும் தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். வேறு எங்கும் தலை நிமிர்ந்து நிற்க , அவருக்கு எல்லோரும் சல்யூட் அடிப்பார்கள்.
செங்கோல் விழாவில் இதையே திருமலை நாயக்கரும் செய்தார். .ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை நாயக்கர், கோவிலுக்குச் சென்று அங்கயற்கண்ணி அம்மனுக்கு முடி சூட்டு விழா நடத்தி, அங்கு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று, வீதி உலாவாக அதைக்கொண்டு வந்து , அரண்மனையின் சொர்க்கவிலாசத்தில் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்கு சிறப்பாக வழிபாடுகள் நடக்கும். அனறைய தினம் வந்திருக்கும் அனைவருக்கும் மன்னர் பரிசுகளை வழங்குவார் . அன்று முழுதும் அரியணையில் செங்கோல் இருக்கும் ; மறுநாள் செங்கோலுக்கு மன்னர் புனர்பூஜை செய்வார். அதை மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்று ,மீனாட்சி அம்மனின் பாதங்களில் வைத்து வணங்குவார் . மன்னர் என்பவன் இறைவனின் சார்பில் ஆட்சி நடத்தும் ஒரு ஊழியர்தான் என்பது இதன் தாத்பர்யம் .
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் திருமலை மன்னர் தன்னை அலங்கரித்துக்கொண்டு , அரியணையில் கொலு வீற்றிருப்பார். சிற்றரசர்கள் வந்து அவருக்கு கப்பம் செலுத்துவார்கள்
தொடரும் ……………………………….
XXX
Tag- செங்கோல் விழா, நான் கண்ட, நாயக்கர் அரண்மனை , திருமலை நாயக்கர், பிரம்மாண்டமான தூண்கள்,