காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்! (Post No.12,056)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,056

Date uploaded in London –   29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்!

 ச.நாகராஜன்

காவ்யகண்ட கணபதி முனிவர்

பகவான் ரமண மஹரிஷிக்கு ரமணர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர் மாபெரும் கவிஞரும் உள்ளொளி பெற்றவருமான காவ்ய கண்ட கணபதி முனிவர் ஆவார். இவரை நாயனா என்றே அனைவரும் மரியாதையுடன் அழைப்பர்.

பகவானுடனான இவரது அனுபவம் மகத்தானது.

இவரும் இவருடனான மற்ற பல அன்பர்களும் அவ்வப்பொழுது பகவான் ரமணரிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெறுவது வழக்கம்.

அவற்றை ஸம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாக எழுதினார் இவர். அந்த நூலே “ஶ்ரீ ரமண கீதை” ஆகும்.

பகவான் எழுதிய ‘உள்ளது நாற்பது’ மற்றும் ஸத் தர்சனம் ஆகியவற்றையும் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாக இவர் வழங்கினார்.

இந்த இரண்டிற்கும் ஶ்ரீ கபாலி சாஸ்திரிகள் சம்ஸ்கிருதத்தில் விரிவுரை எழுதியுள்ளார்.

இந்த விரிவுரைகள் ரமண பாத சேகரன் ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமிகள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

முகவை கண்ண முருகனார்

இவர் பகவானின் அணுக்க பக்தர். பெரும் தமிழ்க் கவிஞர். பகவானின் பேரில் 1851 தோத்திரப் பாடல்கள் கொண்ட ‘ஶ்ரீ ரமண சந்நிதி முறை” என்ற நூலை இவர் இயற்றியுள்ளார்.

பகவானின் உபதேசங்களை ஒருங்கு திரட்டி 1254 பாடல்களாக, ‘குருவாசகக் கோவை’ என்ற நூலையும் ஶ்ரீ ரமண தேவமாலை, ஶ்ரீ ரமணாநுபூதி (இரு பாகங்கள்) என்ற நூலையும் இவர் படைத்துள்ளார்.

இவர் எழுதிய இன்னொரு நூல் ‘ஶ்ரீரமண ஞான போதம்’

இந்த இரு கவிஞர்களுக்கும் திருவண்ணாமலை காட்டிற்குள் போக ஆசை.

ஆனால் திருவண்ணாமலை காட்டை ஒவ்வொரு அங்குலமாக அளந்து அதை நன்கு அறிந்தவர் பகவான் ரமணர் ஒருவரே.

கணபதி முனிவருக்கு ரமணரின் உறுதி மொழி

ஒரு நாள் கணபதி முனி பகவானிடம் தான் பல காடுகளைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் திருவண்ணாமலை போன்ற ஒன்றைக் கண்டதே இல்லை என்றும் கூறினார்.

பகவான் அவரைத் தன்னுடன் காட்டின் உட்பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

கணபதி முனிவருக்கு யோகாப்யாசம் செய்ததால், குறிப்பாக கபால பேதம் (கபாலத்தை உடைப்பது) என்ற ஒரு யோகாப்யாசத்தைச் செய்ததால், ஒரு சிறிது உஷ்ணத்தையும் தாங்க முடியாத உடல் வாகு அமைந்திருந்தது. ஆகவே நல்ல மேகமூட்டம் சூழ்ந்த ஒரு நாளை பகவான் தேர்ந்தெடுத்தார்.

அன்று அணுக்க பக்தரான ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமியிடம் இன்று காட்டிற்குள் போகலாமா என்று பகவான் கேட்க அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இதற்காகத் தானே அவர்கள் காத்திருந்தனர்!

உடனே ஓடோடிச் சென்று கணபதி முனிவரிடம் சொல்ல அவரும் மகிழ்ந்தார்.

ஒரு சில நிமிடங்களில் பலாக்கொத்தில் இருந்த கணபதி முனிவர் அறைக்கு பகவான் வர, மூவரும் காட்டின் உட்பகுதி நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

திருவண்ணாமலை காட்டிற்குள் செல்ல பல பாதைகள் உண்டு. பகவான் தேர்ந்தெடுத்தது மூன்றாவது பாதையை.

முகவை கண்ண முருகனாரின் வருகை

ஒரு மைல் உள்ளே சென்ற பிறகு பகவான் பெரிய பாறைக்கு அருகே

ஒரு குளிர்ந்த, நிழல்பகுதியை ஓய்வெடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார்.

அப்போது சலசல என்ற ஒரு சப்தம் கேட்டது. யாரோ ஒருவர் வருகிறார் என்று எண்ணியபோது முகவைக் கண்ண முருகனார் அங்கு வந்து நின்றார்.

மூக்கின் மேல் விரலை வைத்த பகவான், “நாங்கள் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது. வனக்காவலர் கூட நாங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே” என்று கூறினார்.

முருகனார் கூறினார், “பகவான் நாயனாவிடம் காட்டிற்குள் ஒரு நாள் அழைத்துச் செல்வதாக கூறி இருப்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட வர ஆசை. ஆகவே ஆஸ்ரமத்திற்கு சீக்கிரமாகவே வருவது வழக்கம். ஆனால் இன்று பகவானை அங்கு காணோம். உடனே பலாக்கொத்து சென்றேன். அங்கு நாயனாவின் அறை பூட்டி இருந்தது. அங்கு இருந்த வாட்ச்மேன் சபாபதி என்னிடம் ‘நாயனா, விஸ்வநாத ஸ்வாமியுடன் பகவான் காடு நோக்கிச் சென்றார்’ என்று கூறவே நான் ஓடோடி காட்டுப் பக்கம் வந்தேன்.

இரண்டாவது காட்டுப் பாதை வழியே வந்த நான், இன்னொரு பாதை காட்டிற்குள் செல்வதைப் பார்த்தேன். அதன் வழியாக வந்து இந்த இடத்தை அடைந்தேன்”.

“அட, இப்படி கூட ஒரு குறுக்கு வழி இருக்கிறதா?” என்ற பகவான், திரும்பிப் போகும் போது அந்த வழியாகச் செல்லலாம்” என்றார்.

 முருகனாரின் முதுகைத் தட்டிக் கொடுத்த கணபதி முனிவர், “பகவானின் அருள் இருக்கிறது என்பதற்கு இதுவே அறிகுறி” என்று கூறி மகிழ்ந்தார்.

மாலை நான்கு மணிக்குள்ளாக அவர்கள் அனைவரும் ஆசிரமம் திரும்பினர்.

இந்த அனுபவத்தை ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமி பதிவு செய்துள்ளார்.

திருவண்ணாமலை, சிவன் உறையும் மலை அல்ல, சிவனே இந்த மலை தான் என்பதை மஹரிஷி ரமணர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்த மலையில் ஏராளமான அதிசயங்கள் உண்டு.

அவற்றை ரமண மஹரிஷியின் விரிவான வாழ்க்கை சரிதத்தைப் படிப்பதன் மூலம் அறியலாம்.

***

Leave a comment

Leave a comment