புலவர் கண்ட பெண்! (Post No.12,060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,060

Date uploaded in London –   30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஒரு பெண்ணுக்கு கண்கள் ஏழுமுலை ஆறுகாது ஐந்துநெற்றி நான்கு! – புலவர் கண்ட பெண்! 

ச.நாகராஜன்

மதுரகவிராயர் என்ற ஒரு புலவர் தமிழின் பால் மிக்க பற்று கொண்டவர். இனிய தமிழ்ப் பாடல்களை அவ்வப்பொழுது சமயத்திற்கேற்றபடி உடனே புனைவார்.

அவருக்கு பிரம்பூர் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் பொருள் உதவி கொடுத்து ஆதரித்து வந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்த்த புலவர் கூறினார் : கர்ண ப்ரபுவே! ஆனந்த ரங்க மகிபாலா! உனது பிரம்பூரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்குக் கண்கள் ஏழு, முலைகள் ஆறு, காதுகள் ஐந்து, நெற்றி நான்கு என்றார்.

ஆனந்தரங்கம் பிள்ளை அசந்து போனார். பாடலின் பொருளைக் கண்டுபிடித்துப் புலவருக்குப் பரிசுகள் தந்தார்.

பாடல் இதோ:

கார்படைத்த கரதலத்தான் றுரைதிருவேங் கடமளித்த கன்னாவெங்கும்

பேர்படைத்த வானந்த ரங்கமகி பாலாநின் பிரம்பூர் நாட்டில்

நேரிழைக்கு விழியேழு முலையாறு காதைந்து நெற்றி நான்கு

பாரிடத்திலிப் புதுமை கண்டுவந்தே னிதன்பயனைப் பகர்ந்திடாயே

பாடலின் பொருள்:

கார்படைத்த – மேகத்தின் தன்மையைக் கொண்ட

கரதலத்தான் – கையை உடையவனும்

துரை – துரையும் ஆகிய

திருவேங்கடமளித்த கன்னா – திருவேங்கடம் என்ற வள்ளல் ஈன்றெடுத்த கர்ணனே

பேர் படைத்த – எங்கும் பிரபலமாக உள்ள

ஆனந்தரங்க மகிபாலா – ஆனந்தரங்க பூபாலனே

நின் பிரம்பூர் நாட்டில் – உனது பிரம்பூர் நாட்டில்

நேரிழைக்கு – ஒரு பெண்ணுக்கு

விழி ஏழு – ஏழு கண்கள் உள்ளன

முலை ஆறு – மார்பகங்கள் ஆறு உள்ளன

காது ஐந்து – ஐந்து காதுகள் உள்ளன

நெற்றி நான்கு – நான்கு நெற்றிகள் உள்ளன

பார் இடத்தில் – இந்த பூமியில்

இப்புதுமை கண்டு வந்தேன் – இந்தப் புதுமையைக் கண்டு வந்திருக்கிறேன்

இதன் பயனை – இதன் பொருளை

பகர்ந்திடாய்- சொல்வாயாக

நேரிழை என்பதை பன்னிரெண்டு ராசிகளில் ஒன்றாக அமையும் கன்னி ராசி என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு அழகியைக் கண்டேன் என்று பொருள்.

நேரிழைக்கு ஏழு கண்கள் என்பது ராசிகள் பன்னிரெண்டில்  கன்னி ராசிக்கு ஏழாவது ராசியாக அமையும் மீன ராசி என்று எடுத்துக் கொண்டு அவள் கண்கள் கெண்டை மீன் போல உள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து முலை ஆறு என்பது ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு ஆறாவது ராசியாக அமையும் கும்ப ராசி என்று எடுத்துக் கொண்டு அவளது திரண்ட மார்பகங்கள் குடம் போல அழகுற அமைந்துள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து காதுகள் ஐந்து என்பது ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசியாக அமையும் மகர ராசியை எடுத்துக் கொண்டு அவள் அழகிய மகர குண்டலங்களை காதில் அணிந்துள்ளாள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து நெற்றி நான்கு என்பதை ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு நான்காவது ராசியாக அமையும் தநுசு என்று எடுத்துக் கொண்டு அவள் நெற்றி வில் போல அமைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

வில் போன்ற நுதல், மகர குண்டலங்கள் அணிந்த காது, குடம் போன்ற மார்பகம், கெண்டை மீன் போன்ற கண்கள் உண்ட பேரழகியை உன் பிரம்பூர் நாட்டில் கண்டேன் என்கிறார் புலவர்.

ஆனந்தரங்கம் பிள்ளைக்கும் மகிழ்ச்சி, அவரிடமிருந்து பரிசு பெற்ற மதுரகவிராயருக்கும் மகிழ்ச்சி, ஒரு புதிர்ப் பாடல் கிடைத்ததில் நமக்கும் மகிழ்ச்சி! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தமிழின்பத்தில்!!

***

Leave a comment

Leave a comment