
Post No. 12,077
Date uploaded in London – – 3 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
காந்திஜி ஆற்றிய இரண்டு மூன்று சொற்பொழிவுகளிலும், ஹரிஜன் பத்திரிகை கட்டுரைகளிலும் பிரம்மச்சர்யம் என்றால் என்ன என்று விளக்குகிறார். பதஞ்சலி முனிவர் 5 விதிகளை சொன்னார்; பின்னர் 11 விதிகளைப் பின்பறுவோர் பிரம்மச்சாரி என்று விரிவாகியது. ஆனால் ராம நாமத்தை இருதயத்தில் வைத்தால் அந்த விதிகள் எல்லாம் கொசுறு போன்றது; பயனற்றவை என்பது தெரிந்தது; இதை உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்த பொழுது நான் உணர்ந்தேன் என்கிறார் காந்திஜி. (மகாராஷ்டிரத்தில் புனே அருகிலுள்ள உருளி காஞ்சன் கிராமத்தில் 1946ல் இயற்கை வைத்திய நிலையத்தை காந்திஜி துவக்கியதையும் அது 75 ஆண்டுகளாக நடந்து வருவதையும் பற்றி சில நாட்களுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையை வாசியுங்கள்) இப்போது பிரம்மச்சர்யம் பற்றி காந்திஜி சொல்லுவதைக் கேளுங்கள் :-
பிரம்மச்சர்யம் என்றால் என்ன ? பிரம்மன் அதாவது கடவுளை அடைய உதவும் வழிமுறை ஆகும் ; சந்ததிகளை உருவாக்கும் முறை மீது முழுக்கட்டுப்பாடு விதிப்பதாகும் . இது சொல், செயல், சிந்தனை என்ற த்ரிகரண சுத்தியுடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் . சிந்தனை தாறுமாறாக ஓடினால்கூட பயனற்றுப் போகும்.
ஹிந்துஸ்தானி மொழியில் ஒரு பழமொழி உண்டு: “எவனுடைய உள்ளம் சுத்தமாக இருக்கிறதோ, கங்கா நதியின் தூய்மை முழுதும், அவன் வீட்டிலுள்ள தண்ணீரிலும் உண்டு”. ஒருவன் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் மற்றவை எல்லாம் சின்னக்குழந்தை விளையாட்டு போல எளிதாகிறது .என்னுடைய கணக்குப்படி பிரம்மச்சாரி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வான் தலைவலி கூட வராது மனதினால் உடலினால் செய்யும் வேலைகள் அவனுக்கு களைப்பை உண்டாக்காது.எப்போதும் பிரகாசமாக காட்சி தருவான்; தூங்கி வழிய மாட்டான் ; அவனுடைய சுறுசுறுப்பான வெளித் தோற்றம் அவனது உள்ளத்தின் பிரதிபலி ப்பு ஆகும்.. பகவத் கீதையில் சொன்ன ஸ்திதப்ரக்ஞனின் எல்லா குணங்களும் அவனுக்கு இருக்கும் ; இப்படி ஒருவனுக்கு சர்வ குணங்களும் இல்லாவிடிலும் கவலைப்படவேண்டாம் .
இதில் என்ன வியப்பு இருக்கிறது? மனிதர்களை உருவாக்கவல்ல விந்துவை ஒருவன் கட்டுப்படுத்தி அதை சக்தியாகக் காக்கமுடியுமானால் மேற்கூறிய எல்லா குணங்களையும் காட்டுவதில் வியப்பே இல்லை.ஒரு சொட்டு விந்து ஒரு உயிரையே உண்டாக்குமானால், அதைச் சேர்த்துவைப்பவனின் வல்லமையை யாரால்தான் அளக்க முடியும்?

பதஞ்சலி , இதற்கு ஐந்து கட்டுப்பாடுகளை விதித்தார் ; அதில் ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும் என்ற பேச்சுக்கே இடமில்லை; வேண்டுமானால் சத்தியம் (வாய்மை) ஒன்றிருந்தால் போதும் என்று சொல்லலாம். ஏனெனில் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் மற்ற நான்கும் அதில் அடக்கம் ஆகிவிடும். தற்போதைய உலகிற்கு அந்த 5 விதிகள் 11 ஆக விரிவாக்கப்பட்டது ஆசார்ய வினோபா இதுபற்றி ஒரு மராட்டி மொழி கவிதை எழுதியுள்ளார் . அவர் அஹிம்சை, சத்யம், பிறர் பொருள் நயவாமை , நாக்கினைக் கட்டுப்படுத்தல், உழைத்து உண்ணுதல், அச்சமின்மை, எல்லா மதங்களையும் மதித்தல், ஸ்வதேசி உணர்வு , தீண்டாமை ஒழிப்பு என்று சொல்லுவார் . இவை எல்லாம் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கக்கூடியதே. வாழ்க்கை என்பது சிக்கலானது ஆகையால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானதே (ஹரிஜன் இதழ் 8-6-1947)
Xxxx
இந்தியாவில் பிரம்மச்சாரிக்கான கட்டுப்பாடுகள்
இந்தியாவில் பிரம்மச்சாரிக்கான சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பெண்களுடனோ, பிராணிகளுடனோ, அலிகளுடனோ அவன் வசிக்கக்கூடாது .பெண்களுக்குத் தனியாகவோ குழுவாகவோ பாடம் எடுக்கக்கூடாது ; தயிர், பால் வெண்ணெய், போன்ற கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தக்கூடாது பெண்களுடன் ஒரே பாயில் அமரக்கூடாது பெண்களின் உடலுறுப்புகளைக் காணக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள். நான் தென் ஆப்பிரிக்காவில் சில பிரம்மச்சாரிகளைக் கண்டேன். அவர்கள் இந்தக்கட்டுப்பாடுகளை தேவை என்று கருதவில்லை.. நானும் இதைக் கடைப்பிடிக்கவில்லை. விதிகளை மீறுவதில் சமர்த்தன் நான். நானும் பால் , தயிர் நெய்யை விட்டவன்தான். ஆனால் அதற்கான காரணங்கள் வேறு. இந்தியாவுக்கு வந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் அதையும் விட்டேன். பால், தயிர் , நெய் ஆகிய சத்துக்கு இணையான காய்கறிகள் கிடைத்தால் பிராணிகளிடம் கிடைக்கும் பொருட்களை உண்ண மாட்டேன் ; மகிழ்ச்சியோடு அவைகளை விட்டுவிடுவேன் ; அது வேறு கதை (இப்போது வேண்டாம் ) .
Xxxx
நல்ல பிரம்மச்சாரி ஒரு துளி விந்துவையும் வீணடிக்க மாட்டான் .. அதை அவன் அதிகரிக்கவும் செய்கிறான் ; அதை வீணடிக்காமல் பாதுகாக்கிறான் .ஆகையால் அவனுக்கு (மனத்தளவில்) முதுமை வராது; அவன் புத்தி கூர்மையாகவே இருக்கும் எனக்கு ஒரு விஷயம் மனத்தில் படுகிறது . உண்மையான பிரம்மச்சாரிக்கு இவை எல்லாம் கூடத் தேவையில்லை; .வெளிப்புற கட்டுப்பாடுகளால் வருவதில்லை பிரம்மச்சர்யம்.; பெண்களையே பார்க்காமல் ஓடுபவன் , பிரம்மச்சர்யத்தைப் புரிந்துகொள்ளவில்லை .
பொய்யான கட்டுப்பாடுகளை அவன் வெறுத்து ஒதுக்குவான் .அவனுடைய வரம்புகளை அறிந்து அவனே வெளி போட்டுக்கொள்ளலாம். இனி அவை தேவை இல்லை என்ற நிலை வருமானால் வேலிகளை உடைத்து எறியலாம்.. முதலில் பிரம்மசர்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மஹிமையை உணர்ந்து விலை மதிக்க முடியாத அந்த பொக்கிஷத்தை பாதுகாத்துக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டிற்கு சேவை செய்ய இது தேவை
ஹரிஜன் 15-6-1947
Xxx

இறைவனை அறிய பிரம்மச்சர்யம்
மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக்காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.
என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம் தீர்வு தரும்; யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.
இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர் கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம் இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும் ஒன்றே அல்லவா ?
மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்
–ஹரிஜன் இதழ் 22-6-1947
–சுபம்—
Tags- பிரம்மச்சர்யம் , பிரம்மச்சாரி, விதிமுறைகள் , கட்டுப்பாடுகள், காந்திஜி, உருளி காஞ்சன்