
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,121
Date uploaded in London – 12 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 3
ச.நாகராஜன்
ஆற்றல் தரும் ஆரத்தி!
பாரத விஞ்ஞானிகளுள் மிகவும் பெருமை வாய்ந்த விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ்.
1894ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று பிறந்த சத்யேந்திரநாத்
1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.
பெரும் கணித மேதையாகவும் இயற்பியலில் பெரும் விஞ்ஞானியாகவும் விளங்கிய அவருக்கு 1954ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு அளித்து கௌரவித்தது.
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்த கொள்கையை இவர் அனுப்ப, ஐன்ஸ்டீன் வியந்து போனார். அவரது இந்தக் கொள்கை முடிவை அணுக்களின் மீது ஐன்ஸ்டீன் பிரயோகம் செய்து பார்த்தார். அது ஒரு புதியகண்டன்ஸேட்டை – ‘Condensate’ஐக் கண்டு பிடிக்க வழி வகுத்தது.
இதுவே இப்போது போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்’ என்று அழைக்கப்படுகிறது.
காட் பார்டிகிள் எனப்படும் கடவுள் துகள் பற்றிய ஆராய்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
இப்படிப்பட்ட பெரும் விஞ்ஞானியான இவருக்கு ஒரு நாள் மிக நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து அவர் இல்லத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது.
அவரும் திருமணத்திற்குச் சென்றார். வைதீக முறைப்படியான அந்த திருமணத்தை குருமோகன் பட்டாசார்யா என்பவர் நடத்தி வைத்தார்.
அவர் திருமணத்தை நடத்தி வைத்த முறையால் கவரப்பட்ட சத்யேந்திரநாத் நெடுந்தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டாமெனக் கூறி, அவரை அன்றிரவு தன்னுடன் தங்க அழைப்பு விடுத்தார். அவரும் விஞ்ஞானியின் வீட்டிற்குச் சென்று அவருடன் அளவளாவி அன்றைய இரவை அவரது இல்லத்தில் கழித்தார்.
காலையில் அவர் எழுந்த போது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.
சத்யேந்திரநாத் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துளசி மாடம் அருகே நின்று கொண்டிருந்ததையும் அவர் துளசிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார்.
அவரது பிரமிப்பைக் கண்ட சத்யேந்திரநாத், புன்சிரிப்புடன், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
குருமோகன் வியப்புடன் கூவினார்: “நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி! நீங்கள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் காண்கிறேன்!” என்றார்.
சத்யேந்திரநாத் நிதானமாகக் கூறினார் :’ ஆம், ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது பெரும் சக்தியின் ஆதாரம்!” என்றார்.
துளசிக்கு ஆரத்தி எடுக்கும் போது, அப்படி எடுப்பது சக்தியின் ஆதாரத்திற்கானது என்ற அவரது கூற்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் காலம் காலமாக ஆரத்தி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதற்கான பெரும் பயனை எடுத்துரைத்தது.
ஒரு விஞ்ஞானியின் கூற்று என்பதால் அதை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து அதன் பயனைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை உணர்ந்த குருமோகன் அவரை வணங்கிப் போற்றினார்.
தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் அனைவருடனும் பின்னால் பகிர்ந்து கொண்டார்.

xxxxxxxxxxx
ஜே.பி.எஸ். ஹால்டேன் காயத்ரி மந்திரம் பற்றிக் கூறியது!
பிரபல விஞ்ஞானியான ஜே.பி.எஸ்.ஹால்டேன் (பிறப்பு : 5-11-1892 மறைவு 1-12-1964) இந்தியாவின் மீது அளவற்ற மதிப்பு கொண்டவர். தன் வாழ்நாள் இருப்பிடமாக அவர் இந்தியாவையே தேர்ந்தெடுத்தார். 1956இல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த அவர் கல்கத்தாவிலும் புவனேஸ்வரிலும் பணியாற்றினார். புவனேஸ்வரிலேயே மறைந்தார்.
அவர் காயத்ரி மந்திரத்தின் பால் பெரும் ஈடுபாடு கொண்டவர். அதன் அபூர்வ சக்தியை உணர்ந்தவர்.
“காயத்ரி மந்திரம் உலகில் உள்ள ஒவ்வொரு சோதனைச்சாலையிலும் பொறிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். (The Gayatri Mantra should be carved on the doors of every laboratory of the world – J B S Haldane).
காயத்ரி மந்திரத்தின் பொருளை மஹாகவி பாரதியார் அழகுற, “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று தமிழில் தந்துள்ளார்.
விஞ்ஞானிகள் பிரமிக்கும் தியான பலன்கள்!
இந்திய தியான முறை மற்றும் யோகா பற்றி உலகின் தலையாய விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் ஏராளம். அவை விரிப்பின் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும்.
தலாய்லாமா ஊக்குவித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ சயிண்டிஸ்ட் ரிச்சர்ட் டேவிட்ஸன் ஆறுவிதமான தியான வகைகளை ஒரு யோகி செய்து காண்பிக்க அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை அதி நவீன கருவி வைத்து ஆராய்ந்தார்.
இதே போல இன்னொரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி ஷன்னஹாப்-கால்ஸா நடத்தியதாகும். இவரால் 1200 ஆய்வுகள் நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன..
மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் பிரபலமான ஒன்று. இதைப் பற்றிய அவரது விஞ்ஞான விளக்கப்படங்கள் பிரமிக்க வைப்பவை.
ராப் நாரின் என்ற அறிஞர் ஒருமுனைப்படுத்தப்பட்ட தியானத்தால் வெளியில் என்ன நடந்தாலும் ‘உள்ளே’ அமைதியைப் பெறலாம் என்கிறார்.
பிரபல மருத்துவரான ரோஜர் தாம்ஸன்.” தியானத்தின் முடிவில் உங்களுக்கு நன்மை தெரிந்ததெனில் அது நல்ல தியானம் தான்” என்று சுருக்கமாகச் சொல்கிறார்.
இந்த அனைத்து முடிவுகளையும் ஒரே வரியில் சொல்வதானால் தியானமானது நீண்டநாள் வாழ்வை ஆரோக்கியத்துடனும் மன நலத்துடனும் தந்து வாழ்க்கையை உற்சாகம், மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குகிறது என்பதே ஆகும்.
விஞ்ஞானிகளின் தொடர்பு
மேலே கண்ட விளக்கங்களைத் தந்தவர்களுள் மூவருடன் நான் தொடர்பு கொண்டேன். ஹான்ஸ் ஜென்னி தனது விளக்கத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் அளித்தார். டேவிட் கால்ஸா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது நூல்களை எனக்கு அனுப்பி வைத்தார். அனில் குர்ஜர் அவர்களோ என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கங்களை உற்சாகத்துடன் அளித்ததோடு தனது ஆய்வு பற்றிய குறிப்புகளை அனுப்பி வைத்தார்.
விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம் கண்டு நாம் வியக்க வேண்டிய காலமாக இது இருக்கிறது
ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞானம் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து வருகிறது.
இதைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் கூறுகையில் விஞ்ஞானம் ஆன்மீகத்தை ஆய்வு செய்வதை வரவேற்பதாகக் கூறியதோடு, முத்தாய்ப்பாக இப்படிக் கூறினார்:
“நமது மகரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள். அவர்களின் கூற்றை உண்மை என்பதை உலகம் அறிய நெடுங்காலம் ஆகும்”.
***,
கட்டுரையாசிரியர் 132 நூல்களை எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரை மூன்றாம் பகுதியுடன் முடிகிறது.