
Post No. 12,143
Date uploaded in London – 17 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்!
ச.நாகராஜன்
மூன்று ரதங்களின் பெயர்கள்
அம்பாளைப் பற்றிய சகல விவரங்களையும் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் 1000 நாமங்கள் தருகின்றன.
அதில் மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே நமக்கு வெற்றி கிடைக்கும் என்கின்ற ரகசிய செய்தி ஒன்றும் உண்டு.
யாருடைய ரதங்கள் அந்த மூன்று?
அம்பாள், மந்த்ரிணீ மற்றும் வாராஹீ.
அம்பாளுடைய ரதம்- சக்ரராஜ ரதம்.
மந்த்ரிணீயுடைய ரதம் – கேய சக்ர ரதம்
வாராஹியினுடைய ரதம் – கிரி சக்ர ரதம்.
இந்த மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே சொன்னவருக்கு வெற்றி தான்! கேட்டாலும் கேட்டவருக்கு வெற்றியே!
சக்ரராஜ ரதோயத்ர தத்ர கேய ரதோத்தம: |
யத்ர கேய ரதஸ் தத்ர கிரி சக்ர ரதோத்தம: ||
ஏதத் ரத த்ரயம் தத்ர த்ரை லோக்யமிவ ஜங்கமம் |||
ஸம்பத்கரீ
66வது நாமமாக ஸஹஸ்ர நாமத்தில் வருவது இது:
ஸம்பத்கரீ சமாரூட சிந்துவ்ரஜ சேவிதா
இதன் பொருள்:
ஸம்பத்கரீ தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள்.
ஸம்பத்கரீ தேவியானவள் அம்பாளின் சதுரங்க சேனை பலத்தில் யானை சைன்யத்திற்கு அதிகாரி.
அம்பாளின் ஆயுதங்களில் அங்குசத்திலிருந்து உருவானவள் இவ்ள்.
ஸம்பத்கரியின் வாகனமான யானைக்கு ரணகோலாஹலம் என்று பெயர்.
சுகசம்பத்யமான சித்த விருத்திக்கு ‘ஸம்பத்கரீ’ என்று பெயர். அதற்கு ஆதாரமான சப்தாதி விஷயங்களை யானைகளுக்கு சமமாக சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளால் வணங்கப்படுபவள் என்பது பொருள்.
சுக சம்பத்கரீ என்றால் என்ன?
ஞானம் (அறிவு) ஞாத்ரு (அறிகின்றவன்), ஞேயம் (அறியப்படும் பொருள்)
ஆகிய இந்த மூன்றுக்கும் த்ரிபுடீ என்று பெயர்.
இந்த மூன்றின் வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்தவிருத்திக்கு ‘‘சுக சம்பத்கரீ’ என்று பெயர்.
அஸ்வாரூடா
67வது நாமமாக வருவது இது:
அஸ்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா
அஸ்வாரூடா தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட கோடி கோடிக் கணக்கான குதிரைகளைக் கொண்டவள்.
அம்பாளுடைய சதுரங்க சேனா பலத்தில் அஸ்வாரூடா தேவி குதிரை சைனியங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவள்.
அம்பாளுடைய ஆயுதங்களில் பாசத்திலிருந்து ஆவிர்பவித்ததால் அஸ்வாரூடா தேவியின் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர்.
மந்த்ரிணீ, தண்டிணீ
அம்பாளுடைய சக்திகளில் மிக முக்கியமாக அருகிலேயே இருப்பவர்கள் இருவர்.
1) மந்த்ரிணீ 2) தண்டிணீ
மந்த்ரிணீ, தண்டிணீயைத் தாண்டி அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் அம்பாளை அணுக முடியாது.
இவர்களே மிக முக்கியமானவர்கள்.
ஸம்பத்கரீ, அஸ்வாரூடா போன்றவர்கள் இவர்களுக்கு உட்பட்டுத்தான் இருப்பர்.
இந்த இருவரும் எப்போதும் அம்பாளின் சந்நிதியில் இருப்பதாகவும் அம்பாளின் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மந்த்ரிணீ தேவதை அம்பாளுக்கு பிரதான மந்திரி ஸ்தானம் வகிப்பவர். சங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை ராஜ ச்யாமலை மற்றும் ஸங்கீத ச்யாமலை என்று பெயர். மந்த்ரிணீயிடம் அம்பாள் தனது ராஜ்ய பொறுப்பு அனைத்தையும் தந்து விட்டதாக 786வது நாமத்தின் மூலமாக நாம்
அறிய முடிகிறது. (மந்த்ர்ணீ ந்யஸ்த ராஜ்ய தூ:- 786)
சக்ரராஜ ரதம்
சக்ரராஜ ரதாரூட ஸ்ர்வாயுத பரிஷ்க்ருதா (68வது நாமம்)
இதன் பொருள்:
சக்ரராஜ ரதத்தில் ஆரூடமாயிருக்கும்படியான சம்ஸ்த ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டவள்.
யுத்த காலத்தில் தேவிக்கு சமீபத்தில் சகல விதமான ஆயுதங்களும் சக்ர ராஜ ரதத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
அம்பாளின் ரதத்தின் கொடிக்கு ‘ஆனந்த த்வஜம்’ என்று பெயர்.
இந்த ரதத்திற்கு 9 தட்டு உண்டு. 10 யோஜனை உயரம், 4 யோஜனை அகலம் கொண்ட ரதம் இது.
சக்ர ராஜ ரதம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது இதுவே ஶ்ரீ சக்கரம் ஆகும்.
ஶ்ரீ சக்கரத்திலும் 9 பீரிவுகள் உண்டு.
1) த்ரைலோக்ய மோஹனம்
2) சர்வாசா பரிபூரகம்
3) சர்வசம்சேக்ஷாபணம்
4) சர்வ சௌபாக்யதாயகம்
5) சர்வார்த்தசாதகம்
6) சர்வரக்ஷாகரம்
7) சர்வரோகஹரம்
8) சர்வஸித்திப்ரதம்
9) சர்வானந்தமயம்
ஶ்ரீ சக்கரத்தில் உள்ள பிந்துவே அம்பாளின் இருப்பிடம்.
இதில் இருக்கும் ஆயுதங்கள் ஆத்ம ஞானம் அடைவதற்கான சாதனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஆதமஞானம் அடைவது நிச்சயம். சக்தரஸித்தி ஏற்படுகிறது. அதுவே யோகம் என்று கூறப்படுகிறது.
சக்ர ராஜம் என்பது ஆறு அதாவது ஷட் சக்கரங்களை, ரத – ஆதாரமாகக் கொண்டது சக்ர ராஜ ரதம்.
இதை சக்ரேசத்வம் என்றும் கூறுவர்.
சகல ஆயுதங்களையும் கொண்டு அந்த ஷட் சக்கரங்களை அடக்க முடியும். இதை சுத்த வித்யா என்று கூறுவர்.
கேய சக்ர ரதம்
அடுத்து 69வது நாமம் இது:
கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா
இதன் பொருள்:
கேய சக்ரம் என்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் மந்த்ரிணீ தேவியால் வலம் வந்து சேவிக்கப்பட்டவள்.
இந்த ரதத்திற்கு 7 தட்டுகள் உண்டு.
கேய – பிரசித்தமான
சக்ர – சக்கரத்தை உடைய
ரதம் – ரதமான சூர்ய மண்டலம்
இதில் ஆரூடர்களாக இருக்கும்படியான மந்த்ரிணீ ஶ்ரீ வித்யா உபாசகர்களால் வணங்கப்படுபவள்.
இன்னொரு பொருள்
கேய – முக்கியமான
சக்ர ரதா – சக்ராகாரமான ரதத்தில் வீற்றிருக்கும் அம்பாளை
ஆரூட – புத்தியில் அநுசந்தானம் செய்யும்
மந்த்ரிணீ – மந்திர சித்தி உடையவர்களால் வணங்கப்படுபவள்.
கிரி சக்ர ரதம்
அடுத்த 70வது நாமம் கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா
இதன் பொருள்:
கிரி சக்ரம் என்கின்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் தண்டநாதையை முன்னிட்டிருப்பவள்.
கிரி என்றால் வராஹம் என்று பொருள். தண்டநாதையின் ரதம் வராஹ வடிவத்தில் இருப்பதால் அதற்கு கிரி சக்ர ரதம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
வாராஹிக்கு தண்டநாதை என்று பெயர்.
கிரி – கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றின்
சக்ரம் – சமூகமாகிய ரதத்தில்
ஆரூட – ஏறி இருந்தவளாக இருப்பினும்
தண்டநாத – யமனால்
அபரஸ்க்ருதா – ஸ்வாதீனம் செய்யப்படாதவள்.
அதாவது ஒரு யோகியானவன் சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றில் அகப்பட்டிருந்தாலும் கூட அவன் யம வாதனைக்கு உட்பட்டவன் அல்ல என்பது பொருள்.
வெற்றிக்கு வழி!
அம்பாளின் ரதம் மற்றும் முக்கிய இரு தேவதைகளின் ரதம் ஆகியவற்றின் பெயரை தினமும் கூறுவோம்; வெற்றியைப் பெறுவோம்.
*
குறிப்பு: மேற்கண்ட வியாக்யானங்கள் திரு ஜி.வி.கணேச ஐயர் அவர்களால் ஆர்யதர்மம் பத்திரிகையில் எழுதப்பட்டவை.
லலிதா சஹஸ்ரநாமத்தை பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கு இணங்க அவர் அற்புதமாக விரிவுரை ஒன்றை ஆயிரம் நாமங்களுக்கும் எழுதினார்.
இது 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி புத்தகமாக வெளி வந்தது.
அதில் தரப்பட்ட விளக்கத்தையே இந்தக் கட்டுரை மாறுதலின்றி தற்கால நடையில் தருகிறது. ஶ்ரீ ஜி.வி. கணேச ஐயருக்கு நமது அஞ்சலியும் நன்றியும் உரித்தாகுக!
***