
Post No. 12,173
Date uploaded in London – 23 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷித செல்வம்
ஹரியும் சிவனும் ஒண்ணு!
ச.நாகராஜன்
ஹரியும் ஹரனும் ஒண்ணு!
சிலர் ஹரியை வணங்குகின்றனர். சிலர் ஹரனை வணங்குகின்றனர். இருவருமே சமமான தெய்வங்களே! வரம் அருளும் தெய்வங்களே!
இதை அறியாமல் என் தெய்வம் பெரிது; உன் தெய்வம் சிறியது என்று வீண் சண்டை போடக் கூடாது.
ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு என்று பெரியோர் கூறுவர்.
இதை விளக்கிக் கூறும் ஒரு சுபாஷிதம் இதோ:
கேஷாம்சிசிச்சதிகண்டே வைகுண்டே ப்ரீதிரன்யேஷாம் |
மம து த்வாவபி துல்யௌ ஹஸ்தத்வயோதகன்யாயாத் ||
சிலர் சிவனை வழிபடுகின்றனர். வே/று சிலர் வைகுண்டநாதனை வழிபடுகின்றனர். ஆனால் எனக்கோ இரு கடவுளருமே சமம் தான். இரு கைகளிலும் ஏந்தி இருக்கும் நீர் ஒன்றே என்ற பொது உண்மை போல!
*
ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியொர் அருள் புரியட்டும்!
கேஷ்டா மாநபஜாயுக்தா வார்சவீஷ்வரகோஜகா: |
ஷம் நோ ததது காஜேஷா வேதேலாஸ்வர்துநீதரா: ||
சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவி ஆகியோருடன் முறையே கூடி இருக்கும்,
அன்னம், கருடன், நந்தி ஆகியோரை வாகனமாகக் கொண்டிருக்கும் வேதம், பூமி, கங்கா ஆகியவற்றைத் தாங்கி இருக்கும் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் உனக்கு சர்வ மங்களத்தையும் அருள்வாராக!
*
கவிதை அழகு!
ஒரு கவிதையை இயற்றும் போது அதில் வடிவமும் இருக்க வேண்டும், உள்ளடக்கமான பொருளும் அதில் இருக்க வேண்டும், அப்போது தான் அது அழகு.
சிலர் இந்த இரண்டையும் அழகுறக் கொண்டு கவிதை படைக்கும் போது வேறு சிலரோ இது இரண்டுமே இல்லாமல் கவிதையைத் தருகின்றனர்.
இதைச் சொல்லும் ஒரு சுபாஷிதம் இதோ:
கேசித் வஸ்துநி நோ வாசி கேசித் வாசி ந வஸ்துநி |
வாசி வஸ்துனி சாப்யன்யே நான்யே வாசி ந வஸ்துநி ||
சிலர் நல்ல பொருளைக் கொடுத்து வடிவம் தராமல் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். சிலரோ நல்ல வடிவம் தந்து பொருளைத் தராமல் இருக்கின்றனர். இன்னும் சிலரோ இரண்டையும் தருகின்றனர். இன்னும் சிலரோ இந்த இரண்டையுமே தராமல் இருக்கின்றனர்!
*
காசியில் முக்தி; பெண்களின் அழகில் முக்தி!
கைரபி நிர்தாரி யதா முக்திர்வாரானசிமரனாத் |
நிரதாரி மயாபி ததா சஹஸ்ரபகதர்ஷனான் முக்தி: ||
சிலர் வாரணாசியில் இறந்து முக்தி அடைய வேண்டும் என்று உறுதி பட இருப்பதைப் போல நானும் ஆயிரம் பாகாக்களை தரிசனம் செய்தே முக்தி அடைவதாக உறுதி பூண்டுள்ளேன்.
இந்த கவிதையில் பாகா என்ற வார்த்தை இரு பொருளில் வந்துள்ளது.
சஹஸ்ர பாகா என்றால் அது இந்திரனைக் குறிக்கும். பாகா என்றால் பெண் என்றும் பொருள்; ஆகவே இந்திரனைக் கண்டு முக்தி அடைவேன் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது ஆயிரம் பெண்களின் தரிசனத்தைக் கண்டால் முக்தி அடைவேன் என்றும் பொருள் கொள்ளலாம்!
சிலேடை அமைந்த நையாண்டி செய்யுள் இது!
*
மேலே தண்ணீர் இல்லை!
ஒரு புதிர் கவிதையைப் பார்ப்போம்.
கேதாரே கீத்ருஷோ மார்க: குத்ர ஷேதே ஜனார்தன: |
ஸ்தீரிசித்தம் குத்ர ரமதே ஸ்வாமி கிம் வக்தி சேடிகாம் ||
வயல் பாதை எங்கே உள்ளது?
விஷ்ணு எங்கே சயனிக்கிறார்?
ஒரு பெண்ணின் மனம் எங்கே லயிக்கிறது?
எஜமானன் பணிப்பெண்ணிடம் என்ன கூறுகிறார்?
ஒரே வார்த்தையில் நான்கு கேள்விகளுக்கும் பதில் தரப்படுகிறது.
ஊபரிபாதாசிநரே.
ஊபரி என்றால் மேலே என்று பொருள். வயல் பாதை மேலே உள்ளது.
பாதாசி என்றால் சமுத்ர ஜலத்தில் என்று பொருள். விஷ்ணு பாற்கடலில் சயனிக்கிறார்.
நரே என்றால் ஆண் என்று பொருள். பெண்ணின் மனம் ஆணை நினைத்து மகிழ்கிறது.
ஊபரிபாதாசிநரே என்றால் மேலே தண்ணீர் இல்லை என்று எஜமானன் தனது பணிப்பெண்ணிடம் கூறுகிறார்.
***