கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 4 (Post No.12,254)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,254

Date uploaded in London – –  10 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 4

23.விதுர அரச மரம் ( விதுரஸ்வத்த வ்ருக்ஷ )

பெங்களூரு நகரிலிருந்து 50 மைல் தொலைவில் விதுரர் அஸ்வத்த / அரச மரம் இருக்கிறது. மஹாபாரத புகழ் விதுரர் , யுத்தத்துக்குப் பின்னர் தென்னாட்டுக்கு வந்த பொழுது நட்ட அரச மரம் என்று கருதப்படுகிறது. இதனால் இது வழிபாட்டுக்குரிய இடமாககே கருதப்படுகிறது. இதே போல புத்தரின் போதி /அரச மரம் இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம். பழைய மரம் பட்டுப்போவதற்குள் புதிய மரம் முளைப்பதால் தொடர்ச்சி காணப்படுகிறது. மஹாபாரத யுத்தம் கலியுகம் துவங்கும் முன் நடந்ததால் விதுர அஸ்வத்த மரம் குறைந்தது 5000 ஆண்டு பழமை உடைத்து. .கெளரிபி டானூர் அருகில் இது இருக்கிறது. இங்கும் குழந்தை பிறக்காதோர், நாக தோஷம் விலகுவதற்காக வைத்த எண்ணற்ற நாகர் சிலைகளைக் காணலாம்.

அரச மரத்தில் பிரம்மா , விஷ்ணு, சிவன் மூவரும் உறைவதாக இந்துக்கள் கருதுவதால் இந்துக்கள் அதைச் சுற்றி வலம் வந்து வணங்குவார்கள் . அதன் கீழ் பிள்ளையார் அல்லது நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்

24.பாண்டவர் கோவில்- பீமலிங்கேஸ்வரர் Bheemalingeswara Temple

சிக்கபலபூர் வட்டாரத்தில் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் நிறுவிய பீமலிங்கேஸ்வர் சிவன் கோவில் இருக்கிறது ; இதிஹாஸக் கதையாலும், கலை அம்சத்தாலும் இந்தக் கோவில் சிறப்பு பெறுகிறது.

மஹாபாரத காலத்தில் இதற்கு ஏக சக்ர புரம்  Ekachakrapuram என்று பெயர் இருந்ததாம். அங்கு மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த பகாசுரன் Bakasura என்பவனை பீமன் கொன்ற பின்னர், சிவனை நோக்கி தவம் புரிந்ததாகவும், சிவன் அவர் முன் தோன்றியதாகவும் ஸ்தல புராணம் சொல்லும்.சிவனுக்கு பீமன் ஒரு கோவிலைக் கட்டினார்.

கைவர நாராயண தட்டய்யா Saint Narayanappa (1730-1840 ADನಾರಾಯಣ ತಾತ)

தெலுங்கு, கன்னட மொழிகளில் விஷ்ணுவின்  புகழ் பாடிய புலவர் கைவர நாராயண தட்டய்யா , அருகிலுள்ள குகையில் சிறுத்தை, புலி சூழ தவம் செய்தாராம். ஜீவ சமாதி சடங்கின்படி அவர் உயிருடன் புதைக்கப்பட்டார். அவருடைய யோகி நாராயண ஆஸ்ரமம் இந்த ஊரில் இருப்பது கூடுதல் சிறப்பும் ஆகும்.

Amara Narayana Temple அமர நாராயணா கோவில்

இங்கு அமர நாராயணர் கோவில் , கன்யகா பரமேச்வரி Kanyakaparameshwari Temple கோவில்களும் இருக்கின்றன. குன்றில் பீமன்- பகாசுரன் சண்டையைக் காட்டும் காலடிச் சுவடுகளும் காணப்படுகின்றன.

xxxxx

25.விஸ்வ சாந்தி ஆச்ரமம் BHAGAVAD GITA MANDIR

பெங்களூர் நகரிலிருந்து 25  கி.மீ தொலைவில், தும்கூர் ரோட்டில்  உள்ள விஸ்வ சாந்தி ஆச்ர மம் 1982ல் கேசவ்தாஸ் சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. தற்காலக் கோவில் என்றாலும் இங்கே குறிப்பிட்டத்தக்க பல கடவுள் சிலைகள் உள்ளன.விஷ்ணுவின் அவதாரமான விட்டல் சிலை 36 அடி உயரத்துக்கு கம்பீரமாகக் காட்சி தருகிறது .சந்தோஷி மாதா சந்நிதி, காயத்ரி, துளசி மாடம் ,, விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், 7 புனித நதிகளைக் குறிப்பிடும் 7 நதி தேவதைகள், அஷ்ட லெட்சுமி, துர்கா சிலைகளும் இருக்கின்றன

எல்லாவற்றுக்கும் மேலாக 700 பகவத் கீதை ஸ்லோகங்களை பல மொழிகளில் பொறித்து வைத்துள்ள பகவத் கீதை மந்திரும் இருக்கிறது. கிருஷ்ண அர்ஜுன ரதம் பெரிய அளவில் முகப்பில் காட்சி தருகிறது.

XXXXX

. 26.நான்கு முக மலையில் 4 கடவுள்

பெங்களூர் நகரிலிருந்து 56  கி.மீ தொலைவில், தும்கூர் ரோட்டில்  4600 அடி உயரமுள்ள அதிசய மலை இருக்கிறது கிழக்கிலிருந்து பார்த்தால் நந்தியாகவும், மேற்கிகிலிருந்துபார்த்தால் கணபதியாகவும்,, தெற்கிலிருந்து கண்டால் லிங்கமாகவும், வடக்கிலிருந்து கண்டால் படம் விரித்தாடும் பாம்பாகவும் காட்சி தரும் . கர்நாடகம் முழுதும் பாம்பு/ /நாகர் வழிபாடு உண்டு. இந்த இடத்தின் பெயர் சிவகங்கே..

கங்காதரர் சிவன் கோவிலும் ஹொன்னாதேவி அம்மன் கோவிலும்  பாதாள கங்கை என்னும் இயற்கை நீரூற்றும் இருப்பதால் புனிதத்துவம் மிக்க இடமாகக் கருதப்படுகிறது.

XXXX

பெங்களூர் நகரிலிருந்து 70  கி.மீ தொலைவில் சித்த கங்கா க்ஷேத்ரம் இருக்கிறது . இது ஒரு குன்று. வீரசைவத் துறவி சித்தலிங்கேஸ்வரர் சமாதி அடைந்த இடம். ஒரு இயற்கை நீரூற்றும் உள்ளது .

Xxxxx

27.தேவராயண துர்கா Devarayana Durga

தேவராயண துர்கா ஒரு மலை. துர்க என்றால் கோட்டை. இந்தக் குன்றில் பல கோவில்கள் இருந்தாலும் யோக நரசிம்மர் போக நரசிம்மர் கோவில்கள் மிகவும் பிரசித்தமானவை . நிறைய பக்தர்களை ஈர்க்கும் கோவில். இந்த இடம் துமக்கூர் அருகில் இருக்கிறது. மலையில் உள்ள வற்றாத நாமதா சிலுமே என்ற இயற்கை ஊற்று பற்றி ஒரு கதையும் உண்டு. சீதாதேவிக்குப் பொட்டு வைக்க தண்ணீர் இல்லாததால் ராம பிரான் தனது அம்பால்  ஒரு ஊற்றை உண்டாக்கினார் என்பதும் அதுவே இன்றும் தண்ணீரை வழங்குகிறது என்பதும் நம்பிக்கை..

To be continued………………………………

Tags – கர்நாடக மாநிலம்,  108 , புகழ்பெற்ற,  கோவில்கள் – 4, அரச மரம், வழிபாடு, விதுரர், பீமன், ஊற்று , நான்கு முக மலை

Leave a comment

Leave a comment