
Post No. 12,257
Date uploaded in London – 11 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஜூலை 11 – உலக மக்கள் தொகை நாள் – சிறப்புக் கட்டுரை மாலைமலர் 9-7-23 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்!
(முதல் பகுதி)
ச. நாகராஜன்
உலக மக்கள் தொகை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தினால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் முக்கியத்துவம் பெற்றதாக ஆகி விடுகிறது.
மனித வரலாற்றில் மனித குலம் முதல் நூறு கோடி என்ற மக்கள் தொகையை 1803ஆம் ஆண்டில் தான் எட்டியது. அடுத்த நூறு கோடி 124 ஆண்டுகளுக்குப் பின்னர் 1927இலும் அடுத்த நூறு கோடி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் 1960இலும் எட்டியது. பின்னர் ஒவ்வொரு 12 ஆண்டுகளிலும் நூறு கோடி அதிகரித்து வருகிறது.
இன்று உலக மக்கள் தொகை 800 கோடி என்ற அளவைத் தொட்டு விட்டது.
பிரம்மாண்டமான புவியில் இத்தனை பேர் தான் வாழ வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் இருக்கிறதா?
யாருக்கும் தெரியாது.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பூமியில் உள்ள ஆதார வளங்கள் புவியில் வாழ்கின்ற மக்களால் சுரண்டப்பட்டாலோ அல்லது காற்று, நிலம், நீர் அசுத்தப்படுத்தப்பட்டு வாழ முடியாத நிலை ஏற்பட்டாலோ அதிக மக்கள் தொகை ஒரு அபாயம் என்ற கருத்து வலுப்படுகிறது.
இன்றைய நிலையில் பூமியில் இருக்கும் ஆதார வளங்களை ஒவ்வொரு நாளும் பூமியில் இருக்கின்ற வளத்தை 1.6 மடங்கு என்ற அளவில் அதிகமாகத் துய்த்து வருகிறோம்.
அதிக மக்கள் தொகை என்ற கருத்து எப்போது யாரால் உருவானது?
.
தாமஸ் மால்தஸ் என்ற பொருளாதார நிபுணர் 19ஆம் நூற்றாண்டில் தனது மக்கள் தொகை கோட்பாட்டை உலகின் முன் வைத்தார். மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே போனால் பூமியின் வளங்கள் தாக்குப் பிடிக்காது என்பதே அவரது கோட்பாடு. ஆகவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை அவர் வலியுறுத்தினார்.
உலக மக்கள் தொகை தினம் முதன் முதலாக 1990இல் கொண்டாடப்பட்டது. அப்போது மக்கள் தொகை 530 கோடி தான்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 கோடி பேர் பிறக்கின்றனர். 5.70 கோடி பேர் இறக்கின்றனர்.
ஆனால் இப்போது கருத்தரிக்கும் விகிதம் சற்றுக் குறைவாக இருப்பதால் மக்கள் தொகைப் பெருக்கமும் குறைவாக உள்ளது.
1992ஆம் ஆண்டு உலகில் உள்ள 20000 விஞ்ஞானிகள் உலக மக்களுக்கு உலக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

அடுத்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னும் இரு நூறு கோடிப் பேர் கூடிய நிலையில் இன்னொரு அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். “இப்படிப்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம் மனித குலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும். சுற்றுப்புறச் சூழல் பெரிதும் கெடும். நாம் நமது இனப்பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்” என்று அவர்கள் இந்த இரண்டாவது அறிவிப்பில் சுட்டிக் காட்டினர்.
இதனால் மனித குலம் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களும் பாதிக்கப்படும் என்றனர் அவர்கள்.
விஞ்ஞானிகள் ஒன்பது புவி சார்ந்த எல்லைகளைக் குறிப்பிட்டு இவற்றை சரியாகப் பாதுகாக்காமல் எல்லை மீறினோம் என்றால் மனித குலம் அபாயத்தில் முடியும் என்று கூறுகின்றனர்.
மிக அதிக மக்கள் தொகை இந்த ஒன்பது எல்லைகளையும் மீற வைத்து உலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதே இதன் சாரம்!
ஒன்பது எல்லைகளைப் பற்றிய சுருக்கமான விவரம் இதோ:
1) பருவநிலை மாறுதல் : புவி வெப்பம் கூடிக் கொண்டே போவதால் வெப்ப அலையினால் நோய்கள் பரவும். கிருமிகளை வெப்பம் வேகமாகப் பரவச் செய்யும் போது ஜிகா, டெங்கு, மலேரியா, நிபா போன்ற கொடிய வியாதிகள் வெகு விரைவில் பரவும். மனித குலத்திற்குப் பேரிழப்பு ஏற்படும். வெள்ள அபாயம், அசுத்த நீர் கேடு உள்ளிட்டவை ஏற்படும்
2) பல்லுயிர் இணக்கத்தின் இழப்பு : இயற்கை அன்னை அளித்துள்ள தாவரங்களைக் காக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு. நாம் வாழும் பூமியில் பயோமாஸ் எனப்படும் உயிரினத் தொகுதியில் 82.4 விழுக்காடு தாவரங்களே. 12.8 விழுக்காடு பாக்டீரியா. 0.4 விழுக்காடு மிருகங்கள். 0.01 விழுக்காடு மட்டுமே தான் மனிதன் இனம். 82 விழுக்காடு உள்ள தாவரங்கள். அனைத்து உயிரினங்களையும் காக்கிறது. பாடும் பறவைகளில் மட்டும் 360 வகை இனம் உள்ளது. இமயமலை பிராந்தியத்தை ஆராய்ந்த வல்லுநர்கள் 10000 விதமான பறவைகளின் அற்புத ஒலிகளைப் பதிவு செய்துள்ளனர். காடுகளையும் தாவரங்களையும் அழிப்பதால் இவையெல்லாம் அழிந்து கொண்டே வருகின்றன.. இப்படி பல்லுயிர் இணக்கத்தின் இழப்பானது மனித குலமே அழிய வழி வகுக்கும்.
3. கடல் நீர் அமிலமயமாதல் : பூமியின் தட்ப வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உதவுவது கடல் தான். அது ஆக்ஸிஜனை உருவாக்குகிறது. வளி மண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றுகிறது. ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆதாரமாக இலங்குகிறது. கடல் நீரில் அமிலங்கள் கலப்பதால் மீன்கள், சிப்பிகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து படுகின்றன. பல நாடுகளின் பொருளாதார வளமே இதனால் சிதைகிறது.
– நாளை தொடரும்
—–subham——–