
Post No. 12,277
Date uploaded in London – – 15 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Tiruvathavur Temple
முதல் பகுதி நேற்று வெளியிடப்பட்டது
லண்டனில் தொடர் சொற்பழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் (PROFESSOR S S M SUNDARAM, MADURAI), மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி 13-7-23 காலையில் நடத்திய சொற்பொழிவில் பல வியப்பான தகவல்களைத் தந்தார் . 18-7-23 முடிய காலையிலும் மாலையிலும் 60 நிமிடச் சொற்பொழிவுகள் லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும் ( 11 AM , 7 PM ).
ராஜாஜியும் திருவாசகமும்
ராஜாஜி என்னும் ராஜா கோபாலாச்சாரியாரை அறியாதோர் எவருமிலர்; இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்; தியாகி; மாபெரும் அறிஞர். சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ராமாயணத்தையும், வியாசர் விருந்து என்ற தலைப்பில் மஹாபாரதத்தையும் எழுதி புகழ் அடைந்தவர்.
அவர் சேலத்தில் வழக்கறிஞராக இருந் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்தவர் கிருஷ்ண ஐயர் . இருவருக்கும் ஒத்துவராது ; கிருஷ்ண ஐயர் ஒரு தரப்பை எதிர்த்தால் இவர் வக்கீல் என்ற முறையில் அவருக்குப் பாது காப்பு தருவார் . இருவரும் கான்டீனில் சாப்பிடுகையில் வெவ்வேறு டேபிள் . ஒருநாள் கிருஷ்ண ஐயர் வழக்கம் போல ஒரு பாடலைச் சொல்லிவிட்டு, இறைவனை வணங் கிச் சாப்பிட்டார் . அது ராஜாஜியின் காதிலும் விழுந்தது.
அந்தப் பாடல் திருவாசகம் அடைக்கலப்பத்து பகுதியில் வரும் பாடல்
வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால்
தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
அதை மீண்டும் சொல்லக்கேட்ட ராஜாஜி எனக்கு ஒரு திருவாசகம் வாங்கிக் கொடுங்கள் என்றார் . அவரும் அதை வாங்கிக் கொடுக்கவே ராஜாஜி அதை முழுதும் படித்துப் பொருள் உணர்ந்தார்
நான் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள அருமையான முருகன் கோவிலுக்குச் சென்றேன். அது யாழ்ப்பாணத் தமிழர்கள் நடத்தும் கோவில்; சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். போது ஒரு அம்மையார் உள்ளே நுழைந்தார். உடனே எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். எல்லோரும் எழுந்திருந்ததால் நானும் எழுந்தது மரியாதை செலுத்தினேன். என்னைத் தெரியுமா ? என்று கேட்டார். நானோ ஆஸ்திரேலியாவுக்குப் புதிது. இவரை எப்படித் தெரியும்? திகைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .
நான்தான் சேலம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண அய்யரின் மகள் . யாழ்ப்பாணத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு அறிஞரைத் திருமணம் செய்துகொண்டேன். இப்போது இங்கு சிட்னியில் இருக்கிறேன் என்றார் .
XXXX

காந்திஜியும் திருவாசகமும்
காந்திஜி தென் ஆப்ரிக்காவில் இருந்த காலம் . ஒருவர் முகத்தில் ரத்தக் காயங்களுடன் வந்து சேர்ந்தார். அவர் பெயர் பாலசுந்தரம். என்ன இது ரத்தக் காயங்கள் என்றார் . நாங்கள் எல்லோரும் தென் ஆப்ரிக்காவில் வெள்ளைக்கார்களிடம் அடிமைத் தொழில் செய்துவருகிறோம். எங்களுக்கு ஒரு உரிமையும் சுதந்திரமும் இல்லை.எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டார். ஏனெனில் அப்போது காந்தி அங்கே வழக்கறிஞர் . காந்தி, அவர்களுடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அனைவரையும் அரசாங்கம் சிறைக்குள் தள்ளியது . அவர்களுடன் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயதுப் பெண்ணும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலம் குன்றியதால் விடுவிக்கப்பட்டார். அவர் தென் ஆப்ரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் சிறு வயதிலேயே இறந்தார். இறக்கும் தருவாயில் பாலசுந்தரத்தைப் பார்த்து “அண்ணா அந்தப்பாட்டைப் பாடுங்கள்” என்னு சொன்னவுடன் பாலசுந்தரமும் பாடினார். காந்தி , பால சுந்தரத்திடம் அது என்ன பாட்டு என்றவுடன் அவர் அது திருவாசகப் பாடல் என்றார் . இறக்கும் திருவாயில் ஒருவர் திருவாசகத்தைக் கேட்டாலோ இறந்த ஆவி உலவும் இடத்தில் அதைப் பாடினாலோ அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்; எந்த சிந்தனையுடன் ஒருவர் இறக்கிறோமோ அந்த சிந்தனையோடு மறுபிறப்பு ஏற்படும் . அந்தக் காலத்தில் காந்தியின் பெயர் எம்.கே .காந்த்திதான். மஹாத்மா எனும் பட்டம் பிற்காலத்தில் தாகூர் மூலம் வந்ததே . காந்தியும் திருவாசகத்தைப் படிக்க ஆவல் கொண்டார். தமிழும் அவர் கற்கத் துவங்கினார் . திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் (TRANSLITERATION) எழுதிப் படித்து அதன் பொருளையும் அறிந்தார்.
வள்ளியம்மையின் காதில் பால சுந்தரம் சொன்னது திருவாசகத்தின் கடைசி பகுதியாகும்; அதன் பெயர் அச்சோ பதிகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.–என்று துவங்கும் பதிகம் ஆகும்.
(தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் ஓர் செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி முதலியார் பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார். 1914ம் ஆண்டில் இறந்ததும் தென் ஆப்ரிக்க நகரமான ஜோஹன்னஸ் பரக்கில்தான். )
XXXX
திரு வி க வும் திருவாசகமும்
ரெவரெண்ட் ஜி.யூ .போப் இறக்கும்போது தமிழ் நாட்டு மக்க்கள்தான் தனது இறுதிச் சடங்கிற்கும் கல்லறைக்கும் பணம் தரவேண்டும். அது தான் என் விருப்பம் என்று தெரிவித்திருந்தார் . தமிழ்நாட்டிலுள்ள எல்லா பள்ளி களிலும் இந்த அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் அறிவித்தவுடன் பல மாணவர்கள் நாலணா கொடுத்தனர். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. ஒரு மாணவன் மட்டும் எழுந்து ஐந்து ரூபாய் கொடுத்தான். என்னப்பா இது! என் மாத சம்பளமே ஐந்து ரூபாய்தான் — என்று சொல்லி வாத்தியார் வியந்தார். அந்த மாணவன் சொன்னான்- அவ்வப்போது எனக்குக் கிடைக்கும் காசுகளை ஒரு டப்பாவில் போட்டுவைத்தேன். வீட்டிற்கு வந்து போவோர் கொடுத்த காசு அது. என் அப்பாவுக்கு திருவாசகம் பிடிக்கும். அதைப்படித்துவிட்டு அது பற்றி எனக்கும் சொல்லுவார் . ஆகையால் டப்பியில் இருந்த பணத்தைக் கொடுக்கிறேன்.
இப்படிச் சொன்ன அந்த மாணவன் யார் தெரியுமா ?
பிற்காலத்தில் தமிழ் அறிஞர், பேச்சாளர், நூலாசிரியர் என்று பெயர் எடுத்த திரு. வி. கலியாண சுந்தர முதலியார் .
XXXX
அண்ணாமலை செட்டியாரும் திருவாசகமும்
திருவாசகம் பிரதிகளை அச்சடிக்கப்போகின்றோம் . அது வேண்டுவோர் பிரதிக்கு பத்து ரூபாய்வீதம் அனுப்புங்கங்கள் என்று அறிவிப்பு வெளியான து . 1900ம் ஆண்டில் பத்து ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. பள்ளத்தூர் அண்ணாமலை செட்டியார் 5000 ரூபாய் அனுப்பி 500 பிரதிகளை அனுப்புங்கள் என்றார். திருவாசகத்தின் மீது அவ்வளவு மதிப்பு!.
XXXX
ரமண மகரிஷியும் திருவாசகமும்

ரமண மகரிஷியின் தாயார் தனது இறுதிக்காலத்தில் திருவண்ணா மலையில் ரமணருடன் வசிக்க விரும்பினார் . இறுதி நாள் நெருங்கியதை அறிந்த ரமணர், தாயாரின் தலையைத் தன் மடியில் கிடத்தி திருவாசகத்தை ஓதினார் . அவர் இறந்தவுடன் எல்லோரும் சாப்பிட்டப் போங்கள் என்றார் . எல்லோரும் திகைத்து நின்றனர். இறந்த வீட்டில் , காரியங்கள் முடியும் வரை யாரும் சாப்பிடமாட்டார்கள்; தீட்டு என்று கருதும் காலம் அது. ஆனால் ரமணர் சொன்னார் — திருவாசகத்துக்கு தீட்டு என்பதே கிடையாது . எல்லோரும் சாப்பிட்டு வந்த பின்னர் திருவாசகப் பாராயணம் தொடர்ந்தது .
XXX
தாய் தள்ளிய பிள்ளையை பேயும் அணுகாது — ரமண மகரிஷி – தாய்- திருவாசகம் பற்றிச் சொன்னபோது சொ சொ மீ சொன்ன பழமொழி
XXXX
ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரும் திருவாசகமும்
ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரம் ஜி.யூ போப்பும் நண்பர்கள் . ஜியூ போப் அவருக்கு ஒரு பரிசு அனுப்பினார். அது என்ன தெரியும?. கண்ணீர் துளி விழுந்த தாள் . போப் மனம் உருகி திருவாசகம் படித்தபோது அவர் கண்ணீர்த் துளிகள் ஒரு பேப்பரில் விழுந்தது.
தமிழில் பேப்பரை தாள் என்போம். இறை வனின் பாதகமலங்களையும் தாள் என்போம். திருவள்ளுவரும் அப்படிப்படியுள்ளார். . இரு பொருள் படும்படி திருவாசக தாள் , சுப்ரமண்ய அய்யருக்கு பரிசாக வந்தது. அவரும் நன்றி தெரிவித்து பதில் அனுப்பினார். நீங்கள் அனுப்பிய தாளை நடராஜ பெருமானின் தாளில் (பாத கமலம் )வைத்து வணங் குகிறேன் என்று .
XXXX
திருவாசகம் = தேன்
திருவாசகத்தை தேன் என்பார்கள். ஏன் தெரியுமா?
தேன் எப்போதும் கெடாது . தேனில் போட்டுவைத்த பொருளும் கெடாது . பலாச் சுளைகளை தேனில் போட்டுக் கெடாமல் வைத்திருப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . திருவாசகம் ஒரு தேன் . அதில் நாம் திளைத்தோமானால் கெட்டுப்போக மாட்டோம்
XXX
தமிழ்நாட்டு வைஷ்ணவர்கள் சோற்றை, சாதத்தை திருவமுது என்பார்கள். சாப்பாடு நமக்கு இறைவன் படைக்கும் அமுதம் . சேக்கிழாரும் காரைக்கால் அம்மையார் பற்றிப் பாடுகையில் திரு அமுது சமைத்ததாகவே பாடுகிறார்.
XXX
1950ம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனம் முயற்சியில் தண்டபாணிதேசிகர் எழுதிய திருவாசக உரை நூல் வெளியானது ; அதற்கு முன்னுரை எழுதித் தருமாறு ராஜாஜியிடம் கேட்டபோது அவர் தனக்கு அந்தத் தகுதி கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டார். தான் அதை சிறையில் முழு க்கப் படி த்ததாகவும் அது தன் உயிர் நூல் என்றும் சொன்னார்
XXX
(காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் சொ சொ மீ ஆற்றிய உரை முழுதையும் எழுதவேண்டுமானால் அது புத்தக வடிவிற்குப் பெருத்து விடும் . ஆகையால் புல்லட் பாயிண்டு BULLET POINTS களை மட்டும் கொடுத்தேன். இதில் பிழை இருப்பின் அது என் காதில் தவறாகக் கேட்ட குற்றமே. சொ சொ மீ. சுந்தரம் அவர்களின் குற்றம் அன்று . பிழை பொறு த்தருள்க )
–சுபம் —
TAGS மாணிக்கவாசகர், சொ சொ மீ. சுந்தரம்,