
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,290
Date uploaded in London – 18 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6
ச.நாகராஜன்
பூகம்ப ஜனாதிபதி!
மெக்ஸிகோவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் கார்லோஸ் ஸலினஸ் டி கார்டாரி. (Carlos Salinas De Gortari)
இவர் மெக்ஸிகோவில் அவமானப்பட்டார். 1995 மார்ச் மாதம் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட இடத்திற்குச் சென்று ஒதுங்குமறைவான ஒரு வாழ்க்கையை வாழலானார்.
பின்னர் 1999 ஜூன் மாதம் தனது நாட்டிற்குத் திரும்பினார். சிறிது காலம் தங்கி விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்.
அவர் தனது நாட்டை விட்டு வெளியேறிய மறு நாள் மெக்ஸிகோவை ஒரு பெரும் பூகம்பம் தாக்கியது. 17 பேரைக் கொன்ற 6.9 மாக்னிட்யூட் பூகம்பம் அது.
செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு நாள் விஜயமாகத் தனது நாட்டிற்கு அவர் வந்தார். 7.5 மாக்னிட்யூட் என்ற பெரிய அளவில் பூகம்பம் வட மெக்ஸிகோவைத் தாக்க 27 பேர் இறந்தனர்.
டிசம்பரில் மூன்றாவது முறையாக அவர் மெக்ஸிகோவிற்கு வந்த போது 5.3 மாக்னிட்யூட் அளவிலான பூகம்பம் அகாபல்கோ கடற்பகுதியைத் (Coast of Acapulco) தாக்கியது. அங்கு தான் ஸலினஸ் தங்கி இருந்தார்.
அதிலிருந்து மெக்ஸிகோ மக்கள் அவர் மெக்ஸிகோவிற்கு வருவதாகத் தெரிந்தாலே அஞ்சி நடுநடுங்க ஆரம்பித்தனர்.
ஜோதிடம் பலிக்கவில்லை ஜோதிடருக்கே!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபல ஜோதிடப் பெண்மணி சிபில் மோர்ஸ் (Sybil Morse).
ஒரு முறை அவர் ஒரு பந்தயத்தில் 70 பவுண்டை தான் இழக்கப் போவதாக ஒரு பந்தயம் கட்டினார். பந்தயத்திற்கு அவர் செலுத்திய தொகை 350 பவுண்ட். ஆனால் அவர் 70 பவுண்டை இழக்கவில்லை. தான் சொன்ன ஜோதிடம் பொய்யாகப் போக அவர் தனது பந்தயத் தொகையை இழந்தார்!

சர்ச்சில் கொடுத்த பணம்!
பிரிட்டிஷ் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை வெஸ்ட் எண்ட் பகுதியில் ஒரு டாக்ஸியைப் பார்த்து பிபிசி ஒலிபரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு கூறினார்.
அந்த டிரைவருக்கு சர்ச்சில் யார் என்று தெரியாது.
“ஐயா! மன்னிக்க வேண்டும். அவ்வளவு தூரம் என்னால் இப்போது வர முடியாது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதை நான் கேட்க வேண்டும்” என்றார்.
சர்ச்சிலுக்கு ஒரே சந்தோஷம்.
டாக்ஸி டிரைவர் தன் பேச்சைக் கேட்கப் போவதாகச் சொல்லி வருமானம் வரும் சவாரியைக் கூட மறுத்து விட்டாரே!
உடனே தன் பையிலிருந்து ஒரு பவுண்ட் நோட்டை எடுத்து அவர் டிரைவரிடம் கொடுத்தார்.
டாக்ஸி டிரைவர் இப்போது முகம் ஒளிரக் கூறினார்: “வாங்க, சார், வண்டியிலே ஏறுங்க! சர்ச்சில் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன? நீங்க வாங்க, போவோம்” என்றார்.
ஆபரேஷன் ஃபைனல்!
ஆபரேஷனை முடித்த டாக்டர் தனது நோயாளியிடம் மெதுவாகக் கூறினார் :”உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நண்பரே! இன்னும் இரண்டு நாட்கள் தான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள்.”
நோயாளி எதுவும் பேசவில்லை.
டாக்டர் தொடர்ந்தார் : “இப்போது வரிசையாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள்.
முதலில் நீங்கள் யாரையாவது பார்க்க வேண்டுமா?”
நோயாளி, “ஆமாம்” என்றார்.
“யாரை?” என்று கேட்டார் டாக்டர்.
“இன்னொரு டாக்டரை” என்றார் நோயாளி!
***
xxxx subham xxxx