
Post No. 12,307
Date uploaded in London – 22 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நீதி த்விசஷ்டிகா
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 3
ச.நாகராஜன்
‘நீதி த்விசஷ்டிகா’ சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள அழகிய நீதி நூல்.
இதை இயற்றியவர் சுந்தரபாண்டியர்.
சுந்தரபாண்டியன் என்ற பெயர் பாண்டிய மன்னர்களுக்கு வழக்கமாக சூட்டப்பட்ட ஒரு பெயர். ஆகவே இந்த நூலை இயற்றிய சுந்தரபாண்டியரது காலத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
என்றாலும் கூட கி.பி.600 இல் ஜனாஸ்ரயா என்ற நூலில் இதிலிருந்து மேற்கோள்கள் காண்பிக்கப்பட்டிருப்பதால் இது ஆயிரத்திநானூறு வருடங்களுக்கு முற்பட்ட நூல் என்று உறுதிபடச் சொல்லலாம்.
கி.பி.750 ஆம் ஆண்டைச் சேர்ந்த சின்னமனூர் செப்பேடு ஒன்று சுந்தரபாண்டியன் சகல சாஸ்திர விற்பன்னன் என்று கூறுகிறது. அரிகேசரி வர்மனுக்கு மூத்தவர் இவர் என்பதால் இவர் நிச்சயமாக கி.பி, 600 அல்லது கி.பி.650 இல் வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.
ஆதிசங்கரரும் தனது பிரம்மசூத்ரத்தில் சமன்வயாதிகரணத்தில் சுந்தர பாண்டியரது மூன்று செய்யுள்களை மேற்கோளாகக் காட்டுகிறார்.
இப்படி இன்னும் ஏராளமான நூல்களில் சுந்தரபாண்டியரது அழகிய நீதி ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
இப்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச் சுவடிகளில் இது 120 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.
என்றாலும் கூட மூல நூலில் 100 ஸ்லோகங்கள் மட்டுமே இருந்திருக்கக்கூடும் என்றும் 20 அதிகப்படி ஸ்லோகங்கள் காலப்போக்கில் ஏற்பட்ட இடைச்செருகல்களாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆர்யா சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகும்.
மனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் பல்வேறு நிலைகளுக்கும் சுந்தரபாண்டியர் வாழ்வாங்கு வாழும் அற நெறிகளைக் கூறுகிறார்.
பேச்சில் அடக்கம், நளினம், சத்யம், இனிமை இருக்க வேண்டும் என்பது அவரது அறிவுரை.
நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது என்றும் நல்ல நட்பை யாராலும் சரியாக விவரிக்க முடியாது என்றும் கூறும் இவர் நட்பைப் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
வாழ்க்கைக்கு ஒரு பெரும் இடையூறு ஏழ்மை என்று கூறும் இவர் செல்வத்தின் பண்பைப் பற்றியும் அழகுறக் கூறுகிறார். ஆனால் செல்வத்தை விட ஞானம் மிகச் சிறந்தது என்று விளக்குகிறார் சுந்தரபாண்டியர்.
தானம் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற அறவுரையை நம் முன் வைக்கும் இவர் பல்வேறு பொருள்களைப் பற்றி மனிதனுக்குப் பயன்படும் விதத்தில் எடுத்துக் கூறுகிறார்.
இவரது நீதிகளைப் படிக்கும் போது தமிழில் உள்ள திருக்குறள் ஞாபகத்திற்கு வரும். தமிழ் நூலான மூதுரையில் உள்ள பல நீதிகளை இவர் சொல்கிறார்.
அதே போல கவிஞர்களான காளிதாஸர், பர்த்ருஹரி ஆகியோரின் பல செய்யுள்களையும் இவரது ஸ்லோகங்களுடன் ஒப்பு நோக்கி மகிழ முடியும்.
ஆரோக்கியம், வித்வதா, நல்ல நண்பர்களின் சேர்க்கை, நல்ல குலத்தில் பிறப்பு, யாரையும் நம்பி வாழாமல் ஸ்வாதீன வாழ்க்கை ஆகியவையே ஒரு மனிதனுக்கான உண்மையான செல்வம். அவனிடத்தில் லோகாயத ரீதியிலான செல்வம் இல்லாவிட்டாலும் இவையே உண்மையான செல்வங்கள் என்று உறுதிபட இவர் அறிவிக்கிறார். (‘ஆரோக்யம், வித்வத்தா சஜ்ஜனமைத்ரீ மஹாகுலே ஜன்ம’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)
யாரெல்லாம் மற்றவர்களைப் பற்றி தீங்கு பேசாமல் ஊமையாக இருக்கிறார்களோ,
யாரெல்லாம் மற்றவர்களுடைய மனைவிமாரைப் பார்ப்பதில் குருடர்களாக இருக்கிறார்களோ,
யாரெல்லாம் மற்றவர்களுடைய இரகசியங்களைக் கேட்பதில் செவிடர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள் என்கிறார் இவர். (பரபரிவாதே மூகா: பரதாரநிரீக்ஷணேஷு ஜாத்யந்தா:’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)
இப்படி 120 ஸ்லோகங்கள் கூறும் அறிவுரைகள் அறவுரைகளே.
டாக்டர் S.ஜெயஶ்ரீ இந்த நூலைத் திறம்பட ஆராய்ந்து நீதி த்விஷ்டிகா என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு அடையார் லைப்ரரி ரிஸர்ச் சென்டர் இதை வெளியிட்டுள்ளது.
சுந்தரபாண்டியரின் நீதி த்விஷ்டிகா காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த காமகோடி ப்ரதீபம் மாத இதழிலும் தொடராக தமிழில் அர்த்தத்துடன் வெளியிடப்பட்டது.
இதை அன்பர்கள் அனைவரும் ஒரு முறையேனும் படித்தால் அது வாழ்க்கையை வளம் படச் செய்யும் சிறந்த வழியை மேற்கொண்டதாக ஆகும்!
***