திருக்கருகாவூர்  கர்ப்பரக்ஷாம்பிகை- Part 2 (Post No.12,334)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,334

Date uploaded in London –  27 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 மாலைமலர் ஆடி மாத அம்மன் கோவில்கள் வரிசையில் 22-7-23 அன்று பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

திருக்கருகாவூர்  கர்ப்பரக்ஷாம்பிகை

பெண்களுக்கு சுக பிரசவம்

கர்ப்பரட்சாம்பிகையின் கருணை

                                (பகுதி 2)

                       ச.நாகராஜன் 

கருகாஊர் ஆலயம்

இன்று திருக்களாவூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் முன்னொரு காலத்தில் முல்லை வனமாக இருந்தது. ஆனால் தாயின் வயிற்றில் இருந்த கருவைக் காத்ததால் கரு, கா, ஊர் என்ற பெயரைப் பெற்றது. மூன்று ஏக்கர் பரப்பில், நான்கு வீதிகளுக்கு இடையில் அழகுற அமைந்துள்ள இந்தக் கருகாவூர் கோவில் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டது. கிழக்கில் ராஜ கோபுரம் கம்பீரமாக விளங்க தெற்கில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியான லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆகவே மூலவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் பூசப்படுகிறது. சுயம்பு லிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.

மூலவரின் வலது புறம் உள்ள கற்பக விநாயகர் உளி படாத விநாயகர், அதாவது சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கருணையே வடிவான கர்பரக்ஷாம்பிகை நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார்.  ஐந்தரை அடி உயரத்தில் இடது கையை இடுப்பில் வைத்து அம்பிகை அழகுற தரிசனம் தருகிறாள்.

சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்கு இடையே முருகனின் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. இவை தவிர, தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நடராஜர், மஹாலக்ஷ்மி, காளி உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு எழுந்தருளி வழிபாடு செய்யப்படுகின்றன.   ஸ்தல விருக்ஷமான முல்லைக் கொடி சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலும், கோவில் சுற்றிலுமாக அமைந்து இது முல்லைவனமே தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தத் தலத்தில் நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கி அமைந்துள்ளன.

இத்தலம் சந்திரனால் பூஜிக்கப்பட்ட தலம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவனின்  மீது விழுகிறது. இது சந்திரனின் பூஜையாக ஒளிர்கிறது.

இங்குள்ள நந்தியும் ஸ்வயம்பு நந்தியாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் பெருமை பெற்றது இந்தத் தலம்.

பெண்கள் வழிபடும் முறை

குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள் அம்பாள் சந்நிதியின் படியை நெய்யால் மெழுகி அரிசி மாவால் கோலமிடுவது மரபாகும். குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு அம்பாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படும் நெய் பிரசாதம் வழங்கப்படுகிறது.  நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்வோர், வேண்டுதல் நிறைவேறி குழந்தைச் செல்வத்தைப் பெற்றவுடன் மீண்டும் இங்கு வந்து அம்பிகைக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தங்கள் சக்திக்குத் தக துலாபாரம் தருவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு அன்றாடம் நடைபெறும் ஒன்று. இந்த துலாபாரம் அம்பிகையின் சந்நிதியில் அமைந்துள்ளது.

தேவாரத் திருத்தலம்

கோப்பரகேசரிவர்மன் மற்றும் முதலாம் ராஜராஜன் ஆகிய  சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் கோவிலில் உள்ளன.

276 தேவார திருத்தலங்களில் முக்கியமான ஒன்றாக அமையும் இந்தத் தலத்தில் வந்து வழிபட்ட திருஞானசம்பந்தர் இறைவனை அழல் வண்ணமாகக் கண்டு மகிழ்ந்து ஒரு பதிகம்  (11 பாடல்கள்) அருளியுள்ளார். திருநாவுக்கரசரும் இறைவனை பல்வேறு விதமாக வர்ணித்து ஒரு பதிகத்தை (11 பாடல்கள்) அருளியுள்ளார்.

குருகாம் வயிரமாம் என்று ஆரம்பிக்கும் நாவுக்கரசரின் பதிகத்தை ஓதினால்  தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்கும். பிணக்குகள் ஏதேனும் இருப்பின் அது நீங்கும்.

 அப்பர் பெருமானின் அருள் வாக்கு இது :                                                             

குருகாம் வயிரமாங் கூறு நாளாங்

         கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்

பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்

          பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்                                                ஒருகா லுமையாளோர் பாக னுமாம்

          உள்நின்ற நாவிற் குரையா டியாங்

கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்

          கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே 

பாடலின் பொருள் : திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் எங்கள் கண் போன்ற எந்தை சிவபிரான் இளம் குருத்து போன்ற பொருள்களில் மென்மையாகவும் பல பொருள்களில் வைரம் போன்ற வலிமை உள்ளவனாகவும் விளங்குகிறான். சூரியனால் வகைப்படுத்தப்படும் பல நாட்களாகவும் அவற்றிற்குரிய கிரகங்களாகவும் இருக்கிறான். அவன் தன்னை நினைப்பவர் தம் அழுக்கை நீக்கும் அமுதம். பாலில் நெய். பழத்தில் சுவை. பாட்டில் பண். உமா தேவியைத் தன் உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள இறைவன் நமது நாவில் பொருந்தி நம்மைப் பேச வைப்பவனாகவும் உள்ளான். அவனே இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே கருவாய் இருந்து உலகத்தைத் தோற்றுவித்து நம் அனைவரையும் வழி நடத்திச் செல்கின்றான்.

 முல்லைவன நாதர் போற்றி! கர்ப்பரக்ஷாம்பிகை போற்றி போற்றி!!

****

Leave a comment

Leave a comment