கிராதார்ஜுனீயம் (Post No.12,339)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,339

Date uploaded in London –  29 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

கிராதார்ஜுனீயம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 6

ச.நாகராஜன்

பாரதம் கண்ட மிகப்பெரும் கவிஞர்களுள் ஒருவர் பாரவி. அவர் இயற்றிய மகா காவியம் கிராதார்ஜுனீயம்.

இது 18 காண்டங்களைக் கொண்டது.

இதற்கு விரிவுரை எழுதிய மல்லிநாதர் இதை மகாகாவியம் என்று புகழ்கிறார்.

மஹாபாரதத்தில் வன பர்வத்தில் (அத்தியாயம் 37 முதல் 41 முடிய) வரும் வரலாறு இது.

த்வைதவனத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்யும் போது ஒரு பிரம்மசாரி வந்து அவர்களைச் சந்தித்து கௌரவர்கள் எப்படி வளத்துடன் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்கிறார். இதைக் கேட்டு திரௌபதியும் பீமனும் தர்மராஜரிடம் விதியை நம்பும் அவரை இகழ்கின்றனர். அப்போது வியாஸர் அவர்களிடம் வந்து இந்திர மந்திரத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். அர்ஜுனனிடம் தவம் புரியுமாறு சொல்ல அவனுடம் இந்திரகீல மலை சென்று தவம் செய்கிறான்.

இந்திரன் தேவகன்னிகளை அவனிடம் அனுப்பி அவன் தவத்தைக் கலைக்க முயல்கிறான். ஆனால் அர்ஜுனனோ தனது கடும் தவத்தை விடவில்லை.

ஆகவே இந்திரன் ஒரு வயதான அந்தணர் தோற்றத்தில் அர்ஜுனனிடம் வந்து முக்தியைப் பற்றி ஒரு பெரிய உரையை நிகழ்த்த அர்ஜுனனோ தாங்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தான் தவம் செய்வதாகக் கூறுகிறான். உடனே இந்திரன் தனது உண்மை உருவத்தைக் காண்பித்து சிவனை நோக்கித் தவம் புரியுமாறு கூறுகிறான்.

அர்ஜுனனும் சிவனை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். அவன் தவம் கிளப்பிய அக்னியைத் தாள முடியாத முனிவர்கள் சிவனிடம் சென்று  முறையிட சிவன் அவர்களிடம் பயப்பட வேண்டாம் என்றும் அர்ஜுனன் நரன் என்றும் அசுர சக்திகளை அழிக்கவே பூமிக்கு வந்துள்ளான் என்றும் கூறி அருள்கிறார்.

பின்னர் கிராதன் (வேடன்) வேஷம் பூண்டு தனது கணங்களுடன் அர்ஜுனனிடம் வருகிறார்.

அப்போது அங்கு காட்டுப் பன்றி ஒன்று வர அர்ஜுனன் அதை வேட்டையாடத் துரத்துகிறான். சிவனும் அதைத் துரத்த இருவருக்கும் சண்டை மூள்கிறது.

அர்ஜுனன் தனது ஆயுதங்கள் அனைத்தையும் இழக்கவே கிராதனுக்கும் அவனுக்கும் மல்யுத்தம் ஏற்படுகிறது.

கிராதன் சண்டையின் போது வானில் எழும்ப அர்ஜுனன் கிராதனின் காலைப் பிடித்துக் கொள்கிறான். இதை எதிர்பார்க்காத கிராதன் பூமியில் குதித்து அர்ஜுனனைத் தழுவிக் கொள்கிறான்.

தான் யார் என்பதையும் தெரிவிக்கிறான். பின்னர் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தைத் தந்து அருள்கிறான்.

உடனே இந்திரனும் இதர லோகபாலர்களும் தங்கள் பங்கிற்கு அர்ஜுனனுக்கு அஸ்திரங்களைத் தந்து அருள்கின்றனர்.

சிவன், “திரும்பிச் செல். உனது எதிரிகளை வெற்றி கொள்” என்று அருள,  அர்ஜுனன் மீண்டு தர்மரிடம் வந்து நடந்ததை விவரிக்கிறான்.

இது தான் கிராதார்ஜுனீயத்தின் கதை.

இந்தச் சம்பவத்தை பாரதத்தில் உள்ள ஏராளமான கவிஞர்கள் தங்கள் தங்கள் பாணியில் அழகுற கவிதை வடிவத்தில் சித்தரித்துள்ளனர்.

சிற்பிகளோ ஆங்காங்கே சிற்பங்களாக இந்த வரலாறைச் செதுக்கியுள்ளனர்.

தஞ்சை பகுதியில் திருவேட்டகுடி, கும்பகோணம் பகுதியில் விஜயமங்கை மற்றும் திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் அர்ஜுனன் சிவனை வழிபட்டு பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாற்றைக் காண முடிகிறது.

மகாகவி பாரவி

மகாகவி பாரவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. மேலைகங்க வமிசத்தைச் சேர்ந்த துர்வீநீத மன்னன் அரசாண்ட ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் இவர் காலத்தை நிர்ணயிக்கின்றனர். அதே சமயத்தில் பல்லவ நாட்டை ஆண்டவன் மன்னன் சிம்ம விஷ்ணு.

இந்தக் காவியத்தின் 15வது காண்டமான சித்ர காவியம் அழகிய ஒன்றாகும்.

பாரவி அர்த்த கௌரவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறார். அவ்வளவு அர்த்தம் பொருந்திய கவிதைகளைப் படைத்தவர் இவர்.

பாரவியால் உத்வேகம் பெற்றவர்களுள் ஒருவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் மாகர். இவர் சிசுபால வதத்தை இயற்றியவர்.

ஐந்து பெரும் மகாகவிஞர்களுல் ஒருவர் பாரவி என சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறி பாரவியைப் புகழ்கின்றனர்.

***

Leave a comment

Leave a comment