
Post No. 12,352
Date uploaded in London – 1 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 14
ஹிட்லரும் ஜோதிடமும்!
ச.நாகராஜன்
பகுதி 18
ஹிட்லருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?
உண்டு ஏராளமானோரும் இல்லை என்று பலரும் கருதுகின்றனர்.
உண்டு என்று கருதுவோர் அதற்கான சான்றாக ஸ்விட்சர்லாந்து ஜோதிடரான கார்ல் எர்ன்ஸ்ட் க்ராஃப்ட்- ஐச் (Karl Ernst Krafft) சுட்டிக் காட்டுகின்றனர். (க்ராஃப்ட் – தோற்றம் 10-5-1900 மறைவு 8-1-1945)
க்ராஃப்ட், ஜோதிடமும் ஒரு விஞ்ஞானம் தான் என்று கூறியதோடு தன் கருத்தை நிலைநிறுத்த வெகுவாகப் பாடுபட்டார். ‘எ ட்ரியடைஸ் ஆஃப் மாடர்ன் அஸ்ட்ராலஜி’ (A Treatise on Modern Astrology) என்ற புத்தகத்தை அவர் ஸ்விட்சர்லாந்தில் வெளியிட்டார்.
ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களுடைய பிறந்த தேதிகளில் உள்ள அதிசய ஒற்றுமைகளையும் அவர்களின் உருவத்தில் உள்ள ஒற்றுமைகளையும் சுட்டிக் காட்டிய அவர் ‘ஆஸ்ட்ரல் ஹெரிடிடி’ (Astral Heridity) என்ற புதிய சொற்றொடரையே உருவாக்கினார்.
தனது சொந்த நாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அவர் நாஜிக் கொள்கையில் ஊன்றியவர். அவர் ஜெர்மனிக்கு வந்து அங்கேயே தங்கலானார்.
நாஸ்ட்ரடாமஸ் பற்றி நன்கு ஆராய்ந்து விளக்க முடியாத நாஸ்ட்ரடாமஸ் செய்யுள்களுக்கெல்லாம் அவர் சரியான விளக்கம் கொடுத்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.
1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியில் அதிகாரத்திற்கு வந்த போது 1939இல் உலகப் போர் ஏற்படும் என்பதை க்ராஃப்ட் சரியாகக் கணித்துக் கூறி விட்டார்.
ப்ளூடோ கிரகத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அவரே தான் முதலில் கூறினார். கடக ராசிக்கு ப்ளூடோ நகரும் போது1914இல் முதல் உலகப் போர் உருவானது. அதே போல ஒரு நிலைமை 1939இல் ப்ளூடோ சிம்ம ராசிக்குப் பெயரும் போது ஏற்படும், உலகப் போர் உருவாகும் என்றார் அவர்.
தனக்கு எதிராக ஜோதிடம் சொன்ன அனைவரையும் சிறையில் தூக்கிப் போடுங்கள் என்ற ஹிட்லரின் ஆணைப்படி சுமார் 600 ஜோதிடர்கள் சிறையில் போடப்பட்டனர். அவர்களுள் க்ராஃப்டும் ஒருவர்.
ஹிட்லரின் பிரசார மந்திரியான கோயபல்ஸின் மனைவி மகதாவுக்கு நாஸ்ட்ரடாமஸ் கணிப்பின் மீது ஒரு அபாரமான ஈடுபாடு உண்டு.

“இன்னும் 290 வருடங்களில் பிரிட்டனை ஆளும் அரச வம்சம் ஏழு முறை மாறும். பின்னர் ஜெர்மனிக்கும் இன்னொரு ஜெர்மானிய இனத்திற்கும் போர் மூளும். போலந்தை பிரிட்டன் காப்பாற்றும்” என்றார் நாஸ்ட்ரடாமஸ்.
இதன் படியே நடந்தது. 1649ல் இதை நாஸ்ட்ரடாமஸ் கூறினார். 290 வருடங்கள் கழித்து 1939இல் போர் மூண்டது.
மகதா மூலம் க்ராஃப்ட் கோயபல்ஸுக்கு அறிமுகமாக அவர் நாஜித் தலைவர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த ஜோதிடராக ஆகி விட்டார்.
1939ஆம் ஆண்டு, ஹிட்லரின் உயிருக்கு நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து பத்தாம் தேதிக்குள் ஆபத்து ஏற்படும் என்று அவர் டாக்டர் ஹென்ரிச் பெசல் என்ற தனது நண்பருக்கு நவம்பர் 2ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார்.
அதே போல 8ஆம் தேதி மூனிச்சில் பீர் ஹாலில் ஒரு குண்டு வெடித்தது. அதில் கலந்து கொள்ள இருந்த ஹிட்லர் சரியாக 13 நிமிடம் தாமதமாக வந்ததால் பிழைத்தார். இது க்ராஃப்டின் புகழை உயர்த்தியது.
க்ராப்ஃட் கைது செய்யப்பட்டாலும் கூட பின்னர் எதிரிகளின் ஜாதகங்களைக் கணித்து நடக்கப் போவதைச் சொல்லுமாறு பணிக்கப்பட்டார்.
1941, ஜுன் மாதத்திற்குள் இங்கிலாந்தும் ஜெர்மனியும் சமாதானத்திற்கு உடன்படாவிடில் போரின் போக்கு ஜெர்மனிக்கு எதிரானதாக ஆகும் என்பது அவரது கணிப்பு.
இதனால் ஹிட்லருக்குக் கோபம் ஏற்பட 1941 ஜூன் 12ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 1944இல் கைது செய்யப்பட்டார். புச்சன்வால்ட் சித்திரவதை முகாமிற்கு அவர் கொண்டு செல்லப்படும் போது 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
ஹிட்லரைப் பற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள், அவர் ஜாதகத்தை ‘நான்சென்ஸ்’ என்று ஒதுக்கியதாகச் சொல்கின்றனர்.
ஆனால் அதே சமயம் அவர் ஜோதிடம், யோகா உள்ளிட்ட கலைகள் பற்றி மிகத் தீவிரமாகப் படித்தவர் என்பது மட்டும் உண்மை.
***