QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,357

Date uploaded in London – –  2 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ

QUIZ SERIES No.57

1.பிற்கால ஔவையார்  வழங்கிய விநாயகர் அகவல் துதியில்  எத்தனை வரிகள் இருக்கின்றன ?

xxxxxx

2.ஔவையார் கண்ட பிள்ளாயாருக்கு எத்தனை கைகள், எத்தனை கண்கள் ?

Xxxx

3.முப்பழம் நுகரும் மூஷிக  வாகனனே என்பது ஔவையார்  சொன்ன வரி. 3 பழங்கள் எவை?

xxxxx

4.மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே என்று ஔவை சொல்லும் வரி திருவாசகத்தில்  எங்கு உள்ளது?

xxxxx

5.ஔவை வரிசையாக எண் பரிபாஷைகளை (Number Symbolism)  உபயோகிக்கிறார். ஐந்தெழுத்து, ஐம்புலன்கள் எல்லோருக்கும் தெரியும்..தலமொரு நான்கும் (4)   தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின்(3)   மயக்கம் அறுத்தே

ஒன்பது (9) வாயில்   ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை (5)   அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து(6)   அங்கிசை நிலையும் (35

இதிலுள்ள 4,  3, 9, 5 , 6 என்பன யாவை ?

xxxxxx

6.இடைபிங் கலையின்   எழுத்து அறிவித்து

கடையில் சுழுமுனைக்   கபாலமுங் காட்டி- என்ற வரிகளில் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்றால் என்ன அர்த்தம் ?

xxxxxx

7.நான்று எழுபாம்பின்   நாவில் உணர்த்தி

குண்டலி அதனில்   கூடிய அசபை

விண்டுஎழு மந்திரம்   வெளிப்பட உரைத்து– என்ற வரிகளில் பாம்பு, அசபை என்றால் என்ன ?

xxxx

8.மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி

சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்

எண்முக மாக இனிது எனக்கருளி

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி– என்பதன் சுருக்கமான பொருள் என்ன ?

xxxx

9.சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி—

இதில் சத்தம், சித்தம் என்பன என்ன ?

xxxxxx

10.ஒளவை எப்படி விநாயகர் அகவலை முடிக்கிறார் பொருள் என்ன ?

xxxxx

விடைகள்

1.ஆறு ஔவையார்களில் பிற்கால ஔவையார்  வழங்கிய விநாயகர் அகவல் துதியில் 72 வரிகள் உள .

Xxxxxx

2.ஐந்து கைகள் மூன்று கண்கள் .

Xxxx

3.மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்

Xxxx

4.மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி என்று சிவபுராண துதியில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

xxxx

5.மூன்று மலங்கள் – ஆணவம், கன்மம், மாயை

நான்கு தலங்கள் — சரியை, கிரியை, யோகம் , ஞானம் ஆகிய நான்கால் அடையும் சாலோக, சாமீப, சாரூப , சாயுஜ்ய என்னும் நான்கு நிலைகள்

ஐந்து புலன்கள் – கண், காது, , மூக்கு, , வாய், மெய்/உடல்

ஒன்பது வாயில் — பகவான் கிருஷ்ணர் கீதையில் நவத் வாரபுரி என்று உடலை வருணிக்கிறார்;  அவை இரு கண், இரு செவி, நாசியின் இரு துளை, வாய், எருவாய், (Anus) கருவாய் (Genital organ).

ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்

xxxxxx

6.இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்

பிங் கலை  வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்

சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி

Xxxxx

7.பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி

அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

xxxxxx

8. யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும். எட்டு என்பது- ஓசைஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.

xxxx

9.புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக

xxxx

10.கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன்  உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.

xxxxx

விநாயகர் அகவல் – ஔவையார்

சீதக் களபச்   செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு   பலஇசை பாடப்

பொன்னரை ஞாணும்   பூந்துகி லாடையும்

வன்ன மருங்கில்   வளர்ந்தழகு தெறிப்பப்

பேழை வயிறும்   பெரும்பாரக் கோடும் (5

வேழ முகமும்   விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும்   அங்குச பாசமும்

நெஞ்சில் குடிகொண்ட   நீல மேனியும்

நான்ற வாயும்   நாலிரு புயமும்

மூன்று கண்ணும்   மும்மதச் சுவடும் (10

இரண்டு செவியும்   இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல்   திகழொளி மார்பும்

சொற்பதங் கடந்த   துரியமெய்ஞ் ஞான

அற்புதன் ஈன்ற   கற்பகக் களிறே

முப்பழம் நுகரும்   மூஷிக வாகன (15

இப்பொழுது என்னை   ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத்   தானெழுந் தருளி

மாயாப் பிறவி   மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந்து   எழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்துஎன்   உளந்தனில் புகுந்து (20

குருவடி வாகிக்   குவலயந் தன்னில்

திருவடி வைத்துத்   திறமிது பொருளென

வாடா வகைதான்   மகிழ்ந்து எனக்கருளிக்

கோடா யுதத்தால்   கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம்   புகட்டிஎன் செவியில் (25

தெவிட்டாத ஞானத்   தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை   அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின்   இனிது எனக்கருளிக்

கருவிகள் ஒடுங்கும்   கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை   அறுத்து இருள்கடிந்து (30

தலமொரு நான்கும்   தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின்   மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில்   ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை   அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து   அங்கிசை நிலையும் (35

பேறா நிறுத்திப்   பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின்   எழுத்து அறிவித்து

கடையில் சுழுமுனைக்   கபாலமுங் காட்டி

மூன்று மண்டலத்தின்   முட்டிய தூணின்

நான்று எழுபாம்பின்   நாவில் உணர்த்தி (40

குண்டலி அதனில்   கூடிய அசபை

விண்டுஎழு மந்திரம்   வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின்   மூண்டுஎழு கனலைக்

காலால் எழுப்பும்   கருத்து அறிவித்தே

அமுத நிலையும்   ஆதித்தன் இயக்கமும் (45

குமுத சகாயன்   குணத்தையுங் கூறி

இடைச்சக் கரத்தின்   ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின்   உறுப்பையுங் காட்டி

சண்முகத் தூலமும்   சதுர்முக சூக்கமும்

எண்முக மாக   இனிது எனக்கருளி (50

புரியட்ட காயம்   புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும்   தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால   வாயில் காட்டி

இருத்திமுத்தி இனிது   எனக்கு அருளி

என்னை அறிவித்து   எனக்கருள் செய்து (55

முன்னை வினையின்   முதலைக் களைந்து

வாக்கும் மனமும்   இல்லா மனோலயம்

தேக்கியே எந்தன்   சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும்   ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்   தழுத்திஎன் செவியில் (60

எல்லை யில்லா   ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே   அருள்வழி காட்டி

சத்தத்தி னுள்ளே   சதாசிவம் காட்டி

சித்தத்தி னுள்ளே   சிவலிங்கம் காட்டி

அணுவிற் கணுவாய்   அப்பாலுக் கப்பாலாய் (65

கணுமுற்றி நின்ற   கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும்   விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர்   குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின்   அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின்   நிலையறி வித்து

தத்துவ நிலையைத்   தந்தெனை யாண்ட

வித்தக விநாயக   விரைகழல் சரணே. (72

—- SUBAM —–

TAGS- விநாயகர் அகவல், பொருள் என்ன, ஒளவையார், க்விஸ், கேள்வி-பதில்

Leave a comment

Leave a comment