
Kollur Temple from Wikipedia
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,372
Date uploaded in London – 5 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஆடி மாத அம்மன் தலங்கள் வரிசையில் 2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை
(இரண்டாம் பகுதி )
ச.நாகராஜன்
வாக்தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம். ஆகவே ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டு சரஸ்வதியின் அருளைப் பெறுகின்றனர். சரஸ்வதி பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறை சார்ந்தோர், ஓவியர்கள் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பித்து அருள் பெறுகின்றனர்.
இங்குள்ள அம்மனின் சிலை பஞ்சலோகத்தினால் ஆனது. காலையில் சரஸ்வதியாகவும் பகலில் லக்ஷ்மியாகவும் மாலையில் பார்வதியாகவும் அம்பிகை வழிபடப்பட்டு போற்றப்படுகிறாள்.
விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இங்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மூகாம்பிகை அம்மனுக்கான முக கவசத்தையும் அவர் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஷிமோகா பிரதேசமான அன்றைய கேளடி பகுதியை ஆண்ட கேளடி நாயக்க மன்னர்கள் இந்தக் கோவிலை நல்ல முறையில் அமைத்தனர். இதே வமிசத்தைச் சேர்ந்த ராணி சென்னம்மாவும் இந்தக் கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடும் இந்தத் திருத்தலத்திற்கு அரசியல் தலைவர்களும் பெருமளவில் வந்து வழிபடுவது வழக்கம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.
இங்கு வந்து வழிபட்டவுடன் எந்தக் காரியத்திலும் பக்தர்கள் வெற்றியை அடைவது நிதர்சனமாக இன்று வரை காணப்படுகிறது.
பங்குனி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று தேவி அவதரித்த நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சுமார் ஐயாயிரம் பேர் இங்கு வந்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச உணவு வழங்கப்படுகிறது.
இங்கு தங்குவதற்கு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. 250 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள விருந்தினர் விடுதியில் 350 அறைகள் உள்ளன. சுமார் 4000 பேர் தங்க இங்கு வசதி உள்ளது..
ரகசிய பொக்கிஷ அறை
இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போலப் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள ரகசிய அறை பற்றிக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள சங்கரபீடத்தில் ஒரு நாகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே ரகசியத்திற்கான அடையாளமாகக் கூறப்படுகிறது.
இந்தப் பீடத்தின் அடியில் பெரிய புதையல் இருப்பதாகவும், அதில் ஏராளமான வைரம், மரகதம் உள்ளிட்ட மணிகளோடு தங்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்மனுக்கு 90 கிலோ தங்கத்தினாலான தங்க ரதம் ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 48 கோடி ஆகும். இது தவிர பல கோடி பெறுமான தங்க நகைகளும் சுமார் 50 கோடிக்கும் மேலான மதிப்புள்ள மாணிக்கம், வைரம் கொண்ட நகைகளும் அம்மனுக்கு உள்ளன.
கர்நாடகத்தின் செல்வச் செழிப்புள்ள ஆலயம் இது என்றால் அது மிகையல்ல.
இங்கு அம்மனுக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை மட்டுமே உண்டு; அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் லிங்கத்திற்கு மட்டும் நடைபெறும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மூகாம்பிகையின் குங்குமத்தை இட்டுக் கொண்டால் கெட்ட தலையெழுத்து நீங்கும் என்பது ஐதீகம்.
லிங்கத்தின் நடுவே தங்க நிற ரேகை உள்ளது. அபிஷேக சமயத்தில் இதைக் காணலாம்.
எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சண்டி ஹோமத்தை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.
ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் துன்பப்படுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய அவை அகலும்.
இங்கு ஒரு கோசாலையும் உண்டு.
பொதுவாகவே தேவியைக் கும்பிட்டால் அவள் தனம் தருவாள், கல்வி தருவாள், தளர்வறியா மனம் தருவாள். தெய்வ வடிவு தருவாள். நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தருவாள் நல்லன எல்லாம் தருவாள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு தேவி மூகாம்பிகை. அவள் குடியுருக்கும் இடம் கொல்லூர்.
அம்மனை வணங்குவோம்; அருள் பெறுவோம்.
***