கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை- 1 (Post No.12,382)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,382

Date uploaded in London –  7 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை

(பகுதி 1)

ச. நாகராஜன்

.

சங்கர மடம் அமைந்துள்ள தலம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிருங்கேரி மகத்தான புண்ணிய தலமாகும்.

துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் சிருங்கேரி நுண்ணறிவையும் ஆன்மீக ஞானத்தையும் தந்து இகவாழ்வை சிறப்புறச் செய்து முக்தியையும் நல்கும் சிறப்பைப் பெற்றதாகும்.

தொன்றுதொட்டு இருந்து வரும் ஹிந்து தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்க அவதரித்த ஆதி சங்கரர் சிருங்கேரியின் பெருமையை நன்கு உணர்ந்ததோடு உலகிற்கும் உணர்த்தினார். அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.

சங்கர மடம் அமைந்த வரலாறு

இதற்கான வரலாறு சுவையானது

பூர்வ மீமாம்ஸகர்களின் கொள்கையை வலியுறுத்திய குமாரில பட்டரின் சீடரான மண்டனமிஸ்ரரை, அவர் வாதத்திற்கு அழைத்தார். வாதப் போரைத் தொடங்கிய போது அந்த வாதப் போருக்கு நீதிபதியாக இருந்தவர் மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி. இருவர் கழுத்திலும் மாலையை அணிவித்துக் கொள்ளச் சொன்ன உபயபாரதி,  வாதத்தில் யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர், என்று அறிவித்தார். பதினேழு நாட்கள் நடந்த வாதத்தில், மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடியது. சங்கரர் வெற்றி பெற்றார்.

பின்னர் உபயபாரதியுடனும் வாதம் செய்து, அவரையும் வென்றார் சங்கரர்.

போட்டி விதியின் படி மண்டனமிஸ்ரர் துறவு மேற்கொண்டார். அவருக்கு சுரேஸ்வரர் என்ற சந்யாச நாமம் அளிக்கப்பட்டது.

தனது சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்த சங்கரர் சிருங்க கிரியை வந்தடைந்தார்.

சிருங்க கிரி, மஹரிஷி ரிஷ்ய சிருங்கர் தவம் புரிந்த புண்ய தலமாகும். பவித்ரமான துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்க கிரியின் அற்புதமான இயற்கை வனப்பில் மூழ்கினார் சங்கரர். 

அவர் அங்கு ஓரிடத்தில் ஒரு அரிய காட்சியைக் கண்டு பிரமித்தார்.      

கர்ப்பமுற்ற தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் தவிக்க, நல்ல பாம்பு ஒன்று இரக்கம் கொண்டு அதன் மீது படம் எடுத்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவே தவம் செய்ய சிறந்த இடம் என நிர்ணயித்த சங்கரர்  அங்கே ஸ்ரீ சக்ரத்தை ஸ்தாபித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிறுவினார்.

அந்த பீடத்திற்கு சுரேஸ்வரரை முதல் ஆசாரியராகச் செய்து வேத பிரசாரம் செய்யுமாறு ஆணையிட்டார். அதிலிருந்து அந்த ஆசாரிய பரம்பரை, தொடர் சங்கிலியாக இருந்து வருகிறது. இப்போது 36வது பீடாதிபதியாக பல்மொழி வல்லுநரான ஸ்ரீ பாரதி தீர்த்தர் சிருங்கேரி மடாதிபதியாக அருளாட்சி புரிந்து வருகிறார்.

சிருங்கேரி : பெயர்க் காரணம்

சிருங்கேரி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

விபாண்டகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு ஊர்வசி என்ற அப்ஸரஸின் மூலாமாக அபூர்வமான  ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தலையில் மான் கொம்பு ஒன்று பிறக்கும்போதே முளைத்திருந்தது. ஆகவே அந்தக் குழந்தைக்கு ரிஷ்ய சிருங்கர் என்று பெயர் சூட்டப்பட்டது. காட்டுக்குள்ளேயே வளர்ந்த குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்தது. என்றாலும் தந்தையைத் தவிர வேறு யாரையும் ரிஷ்யசிருங்கருக்குத் தெரியவில்லை. அத்தோடு ஆண்-பெண் வேறுபாடு கூட அவருக்குத் தெரியவில்லை.

அந்தச் சமயத்தில் அங்க தேசம் என்ற பிரதேசத்தில் மழையின்றி மக்கள் வாடத் தொடங்கினர். அதை ஆண்டு வந்த ராஜாவான ரோமபாதர் தனது மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது ரிஷ்யசிருங்கரைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்த மந்திரிமார் அவரது காலடி இங்கு பட்டால் உடனே மழை பெய்யும் என்று கூறினர்.

அவரை அழைத்து வருவது எப்படி என்று யோசித்த பின்னர், காட்டிற்குள் உள்ள அவரைக் கண்டுபிடித்து அழைத்து வர பேரழகி ஒருத்தியை அனுப்பினார் ரோமபாதர்.

ரிஷ்யசிருங்கரின் தந்தை தம்மைப் பார்த்தால் கோபப்படுவார் என்பதை உணர்ந்த அழகி அவர் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுத்து ரிஷ்யசிருங்கரின் குடிலை அணுகினாள்.

ஆண்- பெண் வேறுபாடு தெரியாத குழந்தைத் தன்மையை உடைய ரிஷ்யசிருங்கர் அந்த அழகியைப் பார்த்தவுடன் விநோதமான ஒரு ஈர்ப்பு உணர்வை அடைந்தார். அந்தச் சமயத்தில் அவரது தந்தை குடிலுக்குத் திரும்பி வர அழகியும் அவசரம் அவசரமாக தான் பக்கத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றாள்.

அவள் சென்ற பின்னர் அவள் பால் உள்ள ஈர்ப்பு அதிகமாக அவளைத் தேடிப் புறப்பட்டார் ரிஷ்ய சிருங்கர். அவரது பாதங்கள் ரோமபாதரின் அங்க தேசத்தில் பட்டவுடன் மழை பொழியத் தொடங்கியது.

அவரை வரவேற்ற மகாராஜா மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; தனது பெண்ணான சாந்தையை அவருக்கே மணமுடித்தும் கொடுத்தார். சாந்தையுடன் அங்கு வாழ்ந்து தன் தவத்தைத் தொடர்ந்தார் அவர்.

சில காலம் கழித்துத் தன் உடலை விட அவர் எண்ணினார். அப்போது அவருடைய உடலிலிருந்து ஒரு மின்னல் தெறித்தது. அது ஒரு லிங்கத்தின் மீது பட்டு மறைந்தது. அந்த லிங்கம் சிருங்கேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிக்கா என்னும் இடத்தில் உள்ளது. லிங்கத்தின் உச்சியில் கொம்பின் வடு இன்றும் இருக்கிறது.

அதைக் காணலாம்.

ரிஷ்யசிருங்கரின் காலடி பட்டு செழிப்புற்ற பிரதேசமாக ஆனதோடு அவர் தவம் புரிந்த தலமாதலால் இந்தப் பகுதி ரிஷ்ய சிருங்க கிரி என்ற பெயரைப் பெற்றது.

நாளடைவில் இந்தப் பெயர் மருவி சிருங்கேரி ஆயிற்று.

–    தொடரும்

Leave a comment

Leave a comment