
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,400
Date uploaded in London – 11 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 15
ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹீமர்
ச.நாகராஜன்
பகுதி 19
இரண்டாம் உலக மஹா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மாபெரும் விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமரின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாகச் சித்தரிக்கும் ஆங்கிலத் திரைப்படம் ஓப்பன்ஹீமர்.
மூன்று மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் நமக்கு பிரம்பிப்பைத் தருகிறது.
ஒரு வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட சொல்ல முடியுமா – அதுவும் 190 நிமிடங்களுக்கு!
சொல்ல முடியும் என்று நிரூபிக்கிறார் இந்தப் படத்தை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலன். (Christopher Nolan)
உலகின் மிக பிரம்மாண்டமான, அதே சமயம் அழிவைத் தரும் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தவர் ஓப்பன்ஹீமர்.
ஆம் அவர் தான் அணுகுண்டைக் கண்டுபிடித்தார். அணுகுண்டின் தந்தை என்ற புகழையும் பெற்றார் அவர்.
ஆனால் இந்த மாபெரும் சாதனையைச் செய்த அவர் தனது வாழ்க்கையில் அவலத்தையே அதிகம் கண்டார் என்பதை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.
அவரது வாழ்க்கையை ஒரு உளவியல் த்ரில்லராகக் காண்பிக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.
ப்ராஜெக்ட் மன்ஹாட்டன் என்பது அணுகுண்டு தயாரிப்பின் திட்டத்தின் பெயர். அது எப்படி உருவானது என்பதையும் அதில் ஓப்பன்ஹீமர் பட்ட சோதனைகளையும் படம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
அணுகுண்டு சோதனை நடத்தப்படும் இடமும், அந்த சோதனையின் இறுதி நிமிடங்களும் நம்மை திக் திக் என இதயத்தைத் துடிக்க வைக்கின்றன.
இந்தப் படம் 2006ஆம் ஆண்டிற்கான புலிட்ஸர் பரிசைப் பெற்ற ‘American Proetheus: The Triumph and Tragedy of J. Rober Oppenheimer’ என்ற ஆங்கில நூலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்கள் Karl Bird Martin மற்றும் J.Sherwin ஆகியோர் ஆவர்.
ஓப்பன்ஹீமர் சம்ஸ்கிருதத்தின்பால் அளவிலா ஆர்வம் கொண்டவர்.
ஒரு சில விநாடிகள் நீடிக்கும் காட்சியில் அவர், தான் சம்ஸ்கிருதத்தைக் கற்பதாகச் சொல்வது காண்பிக்கப்படுகிறது.
அணுகுண்டு வெடித்தவுடன் பகவத் கீதை ஸ்லோகங்களை அவர் நினைவு கூர்ந்தது நமது நினைவுக்கு வருகிறது.
(அஹம் காலோஸ்மி என்ற ஸ்லோகம்)
தனது சோதனை தளத்திற்கு அவர் TRINITY என்ற பெயரை சூட்டியிருந்தார்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது யூதர்கள் பட்ட பாடை இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது.
ஐன்ஸ்டீனை ஓப்பன்ஹீமர் சந்திக்கும் காட்சி நம்மை மிகவும் கவர்கிறது.
‘உலக நடப்பைத் தெரிந்து கொள்ளப் போகிறாய்’ என்று ஐன்ஸ்டீன் கூறியது அப்படியே ஓப்பன்ஹீமர் வாழ்வில் பலித்தது.
பெரிய சோதனைக்கு ஆளானார் அவர். ரஷிய ஒற்றருக்கு உதவி செய்தாரா, அவரது காதலி ரஷ்ய ஒற்றரா … இப்படிப் பல கேள்விகள்.
காதல், மோதல், அறிவியல் ஆர்வம், துடிப்பு, சோதனை என பல பரிமாணங்களைப் படம் சித்தரிக்கிறது.
அவரை ‘செக்யூரிடி ரிஸ்க்’ என அரசியல்வாதிகள் அறிவித்து அதை விசாரிக்க 1954ஆம் ஆண்டு ஒரு கமிட்டியையும் நியமித்து அவரையும் அவரது சகாக்களையும் விசாரிப்பதை மிகச் சுவையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அமெரிக்க அடாமிக் எனர்ஜி கமிஷனின் அங்கத்தினரான லூயிஸ் ஸ்ட்ராஸ் (Lewis Strauss) பற்றிய பல விவரங்களை இந்தப் படம் காட்டுகிறது. அவர் ஓப்பன்ஹீமரை எப்படி மாட்டி விட சதித்திட்டம் தீட்டினார் என்பதைப் பார்க்கும் போது ஒரு த்ரில்லர் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது.
விஞ்ஞானியின் வாழ்வில் அரசியல் நுழைய அவர் என்ன பாடு பட்டார் என்பதைப் பார்க்கிறோம்.
ஜனாதிபதி ட்ரூமன் ஒப்பன்ஹீமரைச் சந்திக்கும் காட்சி சில விநாடிகள் தான் என்றாலும் ரசிக்க முடிகிறது.
அணுகுண்டின் விளைவால் உலகமே அழிந்து விடும் அபாயம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலாக, ,கிட்டத் தட்ட; அழியாது என்கிறார் ஓப்பன்ஹீமர். முற்றிலுமாக உலகம் அழியவே அழியாது என்ற பதிலை எதிர்பார்க்கிறேன் என்கிறார் ராணுவ தளபதி.
ஓப்பன்ஹீமராக நடித்திருக்கும் Cillian Murphy அபாரமாக நடித்திருக்கிறார்.
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டவுடன் ஏற்பட்ட பேரழிவால் உலகமே அதிர்ந்தது. ஜப்பான் சரணாகதி அடைய உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.
அணுகுண்டின் அபாயத்தை நேரடியாக அறிந்த ஓப்பன்ஹீமர் அணுகுண்டுக்கு எதிராக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஓப்பன்ஹீமர் 1904ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பிறந்தார். 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி மறைந்தார்.
தொடர்ந்து புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்ட அவருக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. அதனால் அவர் மரணமடைந்தார்,
உலகப் போரைப் பற்றி அறிய விரும்புவோர் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது!
***