Post No. 12,404
Date uploaded in London – 12 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இதிஹாஸப் பெண்மணிகள்! (முதல் பகுதி)
ச.நாகராஜன்
இதிஹாஸப் பெண்மணிகள்!
ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய இடமே இல்லை என்ற குரல் தற்காலத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கான காரணம் மெக்காலே கல்வி முறையும் தொடர்ந்து இந்தியாவின் மேல் தொடுக்கப்பட்ட அன்னியப் படையெடுப்புகளும் அதைத் தொடர்ந்த முகலாயர் மற்றும் ஆங்கிலேய ஆட்சியுமே தான்!
சுதந்திர இந்தியாவில் மீண்டும் புகழோங்கிய காலம் மெல்ல மேல்ல ஏற்பட்டு வருகிறது.
‘பெண்ணின் பெருந்தக்க யா உள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்?’ (குறள் எண் 54) என்ற திருவள்ளுவர் கூற்றை மெய்ப்பிக்கும் பாத்திரங்கள் ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களில் உள்ளன.
அது மட்டுமல்ல, ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களை ஒரு பார்வை பார்த்தால் பழைய கால இதிஹாஸப் பெண்மணிகள் வியப்பூட்டும் பல்கலை நிபுணத்தன்மையைக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்திக் கூறும் நேர்த்தியான துணைவி – PERFECT PARTNER, உளவியல் சிகிச்சை நிபுணர் -PSYCHOLOGICAL HEALER, பாதுகாப்பு அதிகாரி SECURITY OFFICER, திறம்பட வாகனம் ஓட்டுநர் CHARIOTEER, அதீத தெய்வ ஆற்றல் கொண்டவர் MTSTIC, அதீத நினைவாற்றல் கொண்டவர் MEMORY EXPERT, நேருக்கு நேர் சண்டையிடும் திறன் படைத்தவர் COMBAT EXPERT, மரணத்தையும் வெல்லுபவர் PSYCHIC POWER, மாற்று யோசனைத் திறன் கொண்டவர் LATERAL THINKER போன்ற பல்வேறு அதிசயிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்ட இதிஹாஸப் பெண்மணிகள் ஏராளம்.
இதோ சில வியப்பூட்டும் பெண்மணிகள்:
லங்கிணி
இலங்கையை ஆண்ட இராவணனின் வலிமை ஒப்பற்றது.
முக்கோடி வாழ்நாள் பெற்றவன். ‘எக்கோடியாராலும் வெலப்படாய்’ என்ற வரத்தைப் பெற்றவன். வாரணம் பொருத மார்பு. (கைலாய மலையினை) வரையினை எடுத்த தோள்! நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா அவனுடையது. தாரணி மௌலி பத்து. சங்கரன் கொடுத்த வாள் – இப்படியெல்லாம் ராவணனின் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
அவனது இலங்கை பொன்னால் இழைக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டது. இலங்கையைக் காக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி – Chief Security Officer – லங்கிணி என்ற ஒரு பெண்மணியே. பிரம்மாவால் அனுப்பப்பட்ட அவளது காவல் மிக வலுவானது. இத்தனைக்கும் இராவணனை நினைத்தாலே உலகத்தோரும் தேவர்களும் பயப்படும் போது இலங்கைக்குள் யார் தான் புக முடியும்?
இந்திரஜித்தின் மாளிகையைக் காவல் காத்த வீரர்களுக்கு போர் அடித்துப் போயிற்றாம். சலிப்பு எதற்காக? யாரேனும் உள்ளே நுழைய முயன்றால் தானே அவர்களது காவலுக்கு ஒரு சிறிதாவது அர்த்தம் இருக்கும்! யாரும் லங்கிணியைத் தாண்டி இலங்கைக்குள்ளேயே நுழைய முடியாதே!
ஆகவே அவர்கள் மாளிகை வாயிலில் புதிர்களைச் சொல்லும் போட்டியில் – Quiz competition- இல் தான் எப்போதும் இருப்பார்களாம்!
இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகையை அங்கிருந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை சொல்லும் போது நகைச்சுவையையும் தவழ விடுகிறான் தன் பாடலில்!
வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தி புன்சிரிப்புடன் இருக்கும் வீரர்கள் பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பர் – டைம் பாஸ் செய்ய – (Time passing)
ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார் ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர் காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்
சுந்தர காண்டம், ஊர்தேடு படலம் பாடல் எண் 139
அநுமன் தனது பெரிய உடம்பைச் சுருக்கிக் கொண்டு (தன் தகை அனைய மேனி சுருக்கி) இருளில் பிரதான வாசல் வழியே செல்லாமல் மதிலைக் கடக்க முயற்சி செய்வதைப் பார்த்த லங்கா தேவி சூரியனை ராகு,கேது கவ்வுவது போலத் தடுத்தாள்.
எட்டுத் தோள் கொண்டவள் அவள். நான்கு முகம் அவளுக்கு உண்டு. வட்டமிடும் கண்ணால் அனைத்தையும் பார்ப்பவள், அநுமனை நில் நில் என்கிறாள். அப்படி ஒரு காவல் அவளுடையது.
பெரும் போர் நிகழ அனுமன் அவளைப் பிடித்து உதைக்கிறான். பிரமனால் காவல் காக்க அனுப்பப்பட்ட லங்கா தேவி, பிரமன், ‘எப்போது ஒரு குரங்கு உன்னை அடிக்கிறதோ அப்போதே உனது பணி முடிந்தது, நீ திரும்பலாம்’ என்பதை நினைவு கூர்ந்து தன் பணியை முடித்து ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று அனுமனிடம் சொல்லி பிரம்ம லோகம் மீள்கிறாள்.
அற்புதமான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான லங்கிணியின் பாத்திரப் படைப்பு விரிவாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கைகேயி
கேகய நாட்டு மன்னனின் புதல்வியான கைகேயி பேரழகி. மதி நுட்பம் வாய்ந்தவள். ஏழு சகோதரர்களுடன் ஒரே பெண்ணாக உடன் பிறந்ததால் அவர்கள் கற்ற கலை அனைத்தையும் அவளும் கற்றாள்.
சம்பராசுரன் என்னும் அசுரன் இந்திரனுக்குத் தீங்கு விளைவிக்க அவன் தசரதனின் உதவியை நாடினான். சம்பராசுரன் மீது போர் தொடுக்க தசரதன் சென்ற போது அவனது ரதத்தைச் செலுத்தியவள் கைகேயி. அதாவது charioteer. கடுமையான யுத்தத்தில் தசரதனின் உயிரைக் காப்பாற்றியதோடு ரதத்தின் அச்சாணி முறிந்தபோது அச்சாணி இருக்கும் இடத்தில் தன் கைவிரலை வைத்து ரதத்தைத் திறம்படச் செலுத்தினாள் அவள்.
‘கொடுமனக் கூனி’ ஒரு பாத்திரமாக ராமாயணத்தில் தோன்றுவதற்கு முன்னர் கம்பன் கைகேயியை வர்ணிக்கும் போது பாற்கடலில் அமைந்த பவளக்கொடி போல அவள் பேரணை மேல் படுத்துக் கொண்டிருந்தாள் என்று சிறப்பிப்பதோடு அவளை தெய்வக் கற்பினாள் என்றும் சிறப்பித்துக் கூறுகிறான்.
மான் போன்ற விழிகளுடைய கேகய மான் இரக்கத்தை உதறித் தள்ளினாள் என்கிறான் கம்பன். அதனால் தான் ராமாயணக் கதையே நகர்கிறது. தேவர்கள் மகிழ ராவணன் வதம் செய்யப்படுகிறான்.
தொடரும்