இதிஹாஸப் பெண்மணிகள்!—2 (Post No.12,409)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,409

Date uploaded in London –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

குமுதம் பக்தி ஸ்பெஷல் 17-8-2023 SUPPLEMENTஆக

வெளியாகியுள்ள கட்டுரை

மூன்று பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

இதிஹாஸப் பெண்மணிகள்!  (இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

கலாதிரிஜடை

ராமனைப் பிரிந்த மன உளைச்சலில் சீதை மனம் வருந்தி சோகத்துடன் உயிரையே விடக் கருதிய வேளையில் உளவியல் ரீதியாக ஆறுதல் சிகிச்சையை அளிப்பவர்கள் விபீடணனின் புதல்வியான கலாவும், திரிசடையும்.

இன்றைய நாட்களில் சைக்கலாஜிகல் ஹீலர்  (Psychological Healder) செய்யும் பணியை அவர்கள் செய்து சீதையை உற்சாகம் அடையச் செய்கின்றனர்.

 வெயிலில் வைத்த தீபம் போல வாடி இருக்கும் சீதையிடம் திரிசடை இராவணன் அழியப் போவதை தான் காணும் பல துர்நிமித்தங்களையும், தான் கண்ட கனவில் வரும் காட்சிகளையும் வைத்து விரிவாகக் கூறுகிறாள்.

‘பாதிக் கனவில் நீ எழுப்பவே நான் எழுந்தேன்’ என்று திரிசடை கூறிய போது, அவளைக் கை கூப்பித் தொழுத சீதை, ‘அன்னையே, அதன் குறை காண்க’ (மீதிக் கனவையும் காண்பாயாக) என்று வேண்டுகிறாள்.

ஸ்வயம்பிரபை

அரிய தவத்தைச் செய்யும் மூதாட்டியான ஸ்வயம்பிரபை ஹேமா என்பவளின் மாளிகையைக் காவல் காப்பவள். அந்த மாளிகை உள்ளிட்ட அற்புதமான சிருஷ்டியை மயன் என்ற அசுரன் தன் மாயையினால் விந்திய மலையில் ஒரு குகையில் செய்திருந்தான்.

அதற்குள் அநுமனும் மற்ற வீரர்களும் நுழைந்தனர். அதிசயமான பல அற்புதக் காட்சிகளை அங்கே கண்டனர். அவர்கள் ஸ்வயம்பிரபையைக் கண்டு தாங்கள் அனைவரும் சீதையைத் தேடி வந்ததைச் சொல்ல ஸ்வயம்பிரபை மனம் இரங்கினாள்.

இந்தக் குகையில் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே செல்லவே முடியாதே என்று அவள் சொல்ல அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அவர்களின் பணியை உணர்ந்த ஸ்வயம்பிரபை, “அனைவரும் கண்களை மூடுங்கள்” என்று சொல்லி தன் தவ வலிமையால் ஒரு நொடியில் அனைவரையும் குகைக்கு வெளியே கொண்டு விடுகிறாள். ஸ்வயம்பிரபை அறிவுநிலை கடந்த உளவியல் ஆற்றல் சக்தியைக் – mystic power – கொண்டிருப்பதை இங்குக் காண்கிறோம்.

இந்த வரலாற்றைக் கிஷ்கிந்தா காண்டத்தில் காணலாம்.

சீதை

இதிஹாஸத் தலைவியான சீதை பொன்னின் ஜோதி. போதின் இன் நாற்றம் (பூவின் நறுமணம்) செஞ்சொல் கவி இன்பம் போலத் திகழ்பவள். கற்பின் கனலி என இப்படியெல்லாம் கம்பனால் வர்ணிக்கப்படுகிறாள்.

சீதை அரண்மனையை விட்டு வெளியே செல்லாதவள். என்றாலும் ராமனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று கடும் வனவாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

‘இராவணனை மட்டுமல்ல கணக்கில்லாத உலகங்களை எனது சொல்லினால் சுட்டுப் பொசுக்குவேன்; ஆனால் அது ராமபிரானின் வில்லின் ஆற்றலுக்குக் குறையை உண்டாக்கும்; ஆகவே அப்படிச் செய்யவில்லை’ என்பது அவள் வாக்கு. (எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்)- சூளாமணிப் படலம் பாடல் 18)

Perfect Partner – என்றெல்லாம் இப்போது புகழ்கிறோமே பலரை – சீதையை என்ன சொல்லிப் புகழலாம்?!

இனி மஹாபாரதத்திற்குள் நுழைவோம்.

திரௌபதி

பாஞ்சால நாட்டின் தவப்பயன். ஓவியம் நிகர்த்தவள். அருள் ஒளி. நிலத் திரு. எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியம். தெய்விக மலர்க் கொடி. கடி கமழ் மின்னுரு. கமனியக் கனவு – இப்படி மகாகவி பாரதியார் வர்ணிக்கும் பேரழகி திரௌபதியின் குணநலன்களை எடுத்துக் கொண்டால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

தர்மபுத்திரர் முடி சூடி அரசனாகத் திகழ நாட்டின் நிர்வாகத்தை நிர்வாகம் செய்யும் பெரும் நிர்வாகியாக – Great State Administrator ஆகத் திகழ்ந்தாள் திரௌபதி.

அவளுக்கு இருந்த நினைவாற்றல் அபாரமானது. பல்லாயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு படைப்பது திரௌபதியின் முக்கியச் செயல். திரௌபதியிடம் வேலை பார்த்தோர் பல்லாயிரக்கணக்கான பெண்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய பெயரும் திரௌபதிக்குத் தெரியும். அவர்களுக்குரிய அன்றாட வேலையையும் அவளே கொடுப்பது வழக்கம்.

தர்மர் அரசாட்சி செய்தாலும் முக்கியமான அரசு விதிகளை திரௌபதியே உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. கஜானாவில் உள்ள நிதிச் செல்வம் திரௌபதிக்கு அத்துபடி. ஏராளமான ஏழைகளுக்கு உதவும் திட்டத்தினால் அது குறையும் போது உடனடியாக அர்ஜுனன் மற்றும் பீமனை அழைத்து தேவையான நிதி பற்றிக் கூறி உடனே கஜானாவை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு கூறுவது திரௌபதியின் பழக்கம்.

இப்படி ஒரு நினைவாற்றல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுவது இயல்பு. ஆனால் இதெல்லாம் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. நெப்போலியனுக்கு அவனது படையில் இருந்த அனைத்து வீரர்களின் பெயரும் தெரியும். அவனைப் பற்றிய சரித்திரம் எழுதிய பல ஆசிரியர்களும் அவனது நினைவாற்றலை, ‘மாபெரும் விந்தை’, ‘போட்டோகிராபிக் மெமரி’, ‘ஒப்பற்றது’ என்றெல்லாம் வர்ணிக்கின்றனர்.

சைரஸ் மன்னனும் தனது படையில் இருந்த ஒரு லட்சம் வீரர்களைப் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம். தெமிஸ்டாக்ளிஸ் ஏதேன்ஸ் நகரில் இருந்த முப்பதினாயிரம் குடிமக்களைப் பெயர் சொல்லியே அழைப்பாராம். இந்த விவரங்களையும் இன்னும் பல அதிசயச் செய்திகளையும் டோனி புஜன் எழுதிய மாஸ்டர் யுவர் மெமரி நூலில் காணலாம். (Master Your Memory by Tony Buzan)

ஆக திரௌபதியை நினைவாற்றல் ராணி – மெமரி க்வீன் (Memory Queen) என்று சொல்வதில் தவறே இல்லை!

சத்யபாமா

பூமி தேவியின் அவதாரமான சத்யபாமா நரகாசுரனை வதம் செய்ய அவதரித்த வீராங்கனை.

கிருஷ்ணரின் மனைவி.

பூமித்தாயின் புதல்வனான நரகாசுரன் தன் அன்னையினால் மட்டுமே தன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன்.

நரகாசுரன் கிருஷ்ணர் ஏவிய அனைத்து அஸ்திரங்களையும் முறியடித்து அவரைத் தனது அஸ்திரங்களால் திணற அடிக்க, கிருஷ்ணர் கீழே விழுகிறார்.

இதைக் கண்ட சத்யபாமா பெரும் கோபம் கொண்டு நரகாசுரனின் மீது தானே அஸ்திரத்தை ஏவி அவனது நெஞ்சில் அடிக்க அவன் மாண்டு போகிறான். அற்புதமாகத் தேரோட்டுவதில் வல்ல சத்யபாமா அஸ்திரங்களைக் கையாளுவதிலும் வல்லவள்.

நேருக்கு நேர் நின்று போர் புரியும் சாகஸப் பெண்மணியை தற்காலத்தில் கூறப்படும் COMBAT EXPERT என்று சொல்லி வியக்கலாம்.

திரௌபதியின் நெருங்கிய தோழி சத்யபாமா. இருவரும் அந்தரங்கமாகப் பேசுகையில் தாம்பத்ய ரகசியங்களைப் பேசிக் கொள்ளும் போது திரௌபதி அவற்றை நுட்பமாக விளக்குகிறாள். (வனபர்வம்  235வது அத்தியாயம்).

கணவனுடன் ஒரு மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு திரௌபதி சத்யபாமைக்குக் கூறும் ரகசியங்களை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுவர்..

                           ***                   தொடரும்

Leave a comment

Leave a comment