இதிஹாஸப் பெண்மணிகள்!  (மூன்றாம் பகுதி)- Post No.12,415


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,415

Date uploaded in London –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

 குமுதம் பக்தி ஸ்பெஷல் 17-8-2023 SUPPLEMENTஆக

வெளியாகியுள்ள கட்டுரை

மூன்று பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

இதிஹாஸப் பெண்மணிகள்!  (மூன்றாம் பகுதி)

ச.நாகராஜன் 

காந்தாரி

காந்தாரத்தை ஆளும் சுபலன் என்பவனின் மகள் காந்தாரி. அவள் பரமேஸ்வரனை வழிபட்டு நூறு பிள்ளைகள் பெறும் வரம் பெற்றவள் என்று கேள்விப்பட்ட பீஷ்மர் கண்பார்வையற்ற திருதாஷ்டிரனுக்கு அவள் ஏற்றவள் என்று கருதி காந்தார தேச மன்னனுக்குத் தூது அனுப்பினார். காந்தார மன்னன், கண்பார்வையற்றவன் திருதராஷ்டிரன் என்பதால் அவனை மருமகனாக ஏற்கத் தயங்க, காந்தாரி தன் பெற்றோரிடம் சம்மதம் தெரிவித்தாள்.

கணவன் கண்பார்வையற்று இருப்பதால் அவனை ஒருநாளும் இகழக் கூடாது என்று விரதம் பூண்டு ஒரு துணியால் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

துரியோதனன் மகாபாரதப் போருக்குப் போகும் முன்னர் தன் தாயான காந்தாரியிடம் ஆசி வாங்க வந்த போது, ஆசி தந்த அவள், “எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்” என்றும் கூறினாள்.

யுத்தம் முடிந்தது. துரியோதனாதியர் கொல்லப்பட அவர்களின் பிணங்களின் அருகே மனைவிமார்கள் அழ வியாஸர் மூலமாக ஞானக் கண்ணைப் பெற்ற காந்தாரி அந்த அவலக் காட்சிகளைக் காண்கிறாள். அழுகைக் குரல் வானைப் பிளக்கிறது. கிருஷ்ணனை அடைந்த அவள், தனது குடும்பம் நாசமாவதற்குக் காரணமான அவனது குலம் 36 ஆண்டுகளில் அழியும் என சாபமும் இட்டாள்.

அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான் மகாபாரத இயக்குநரான கிருஷ்ணன். கதை வசனம் எழுதும் போது தன் முடிவையும் தனக்குத் தானே அவனே தானே எழுதினான்! அப்படித் தான் நடக்கும் என்று காந்தாரியிடமும் அவன் கூறுகிறான்!

 தர்மத்தை விடாமல், குடும்ப பாசத்தையும் விடாமல் ஒரு உயர்ந்த தாயாக, அரசியாக, சிறந்த மனைவியாக, தர்மம் காப்பவளாக முழு சமச்சீர்தன்மையுடன் – பாலன்ஸுடன் – வாழ்ந்தவள் அதிசயப் பெண்மணி – Wonder Woman – காந்தாரி.

தமயந்தி

வேதத்திலேயே கூறப்படும் சரித்திரம் நள-தமயந்தி சரித்திரம். எல்லையற்ற நுண்ணறிவு கொண்டவள் தமயந்தி. (Super IQ) கணவனுடன் இணைந்து எதிர்ப்பட்ட இன்னைலை எல்லாம் எதிர்கொண்டு வென்றவள். பேரழகி.

அவளது நுண்ணறிவுக்கு ஒரு உதாரணம் – அவள் மேல் காதல் கொண்ட தேவர்கள் நால்வர் ஸ்வயம்வரத்தில் நளன் உருவத்தில் வந்து இருக்க ,அதிர்ந்து போன தமயந்தி தனது காதலன் நளனைக் கண்டுபிடித்தது நுண்ணறிவால் தான்.

“கண் இமைத்தலால், அடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர் மாலை வாடுதலால்” – அவள் நளனைக் கண்டு பிடித்தாள்.

                (நள வெண்பா சுயம்வர காண்டம் பாடல் 135)

(தேவர்களுக்கு கண் இமைக்காது, மனிதனான நளனுக்கு கண் இமைக்கிறது; தேவர்களின் பாதங்கள் பூமியைத் தொடாது; ,மனிதனான நளனின் கால்களோ பூமியில் பதிந்துள்ளது; தேவர்களின் மாலை வாடவே வாடாது; மனிதனான நளனின் மாலையோ சற்று வாடி இருக்கிறது) ஆக இந்த லேடரல் திங்கிங்கால் (Lateral Thinking – மாற்று யோசிக்கும் நுண்ணறிவால் தனது நளனைக் கண்டாள் தமயந்தி. அவனுக்கே மாலையிட்டாள்.

Love Birds என்ற வார்த்தைக்கு நள தமயந்தி பொருத்தம் தானே!

மகாபாரதத்தில் வனபர்வத்தில் 49 முதல் 76 அத்தியாயம் முடிய நள-தமயந்தி சரித்திரத்தை விரிவாகப் படிக்கலாம்.

சாவித்திரி

உலகில் எந்த நூலிலும் காண முடியாத ஒரு அற்புதமான பெண்மணியாக மஹாபாரதத்தில் நம் முன் சித்தரிக்கப்படுபவள் சாவித்திரி; குணக்கடல் என்பதால் இவளைப் பார்க்க யமனே நேரில் வருகிறான்.

மத்ர நாட்டு மன்னனின் புதல்வியான சாவித்திரி சத்தியவானைப் பார்த்துக் காதல் கொள்கிறாள். அவன் தன் தாய் தந்தையரை அழகுறப் பாதுகாத்த விதம் அவளைக் கவர்ந்தது. அவனையே மணந்து கொள்கிறாள். ஆனால் நாரத முனிவர் அவனது ஆயுள் இன்னும் ஒரு வருடமே உள்ளது என்கிறார். குறித்த நாளில் சத்தியவான் உயிரை எமன் கவர்ந்து கொள்ள, தன் கற்பின் சக்தியால் யமனைப் பின் தொடர்கிறாள் சாவித்திரி. கணவன் உயிரைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள் என்று எமதர்மன் கூற சாவித்திரி தனக்கு நூறு புத்திரர்கள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். யமனும் அருள்கிறான். ஆனால் பதிவிரதையான அவளுக்குக் கணவன் இல்லாமல் எப்படி நூறு மகன்கள் பிறக்க முடியும்? எமன் சத்தியவானின் உயிரைத் திருப்பித் தருகிறான்.

இந்த சாவித்திரி பாத்திரம் பாரத தேசப் பெண்மணிகளின் நம்பிக்கை நட்சத்திரம். காரடையான் நோன்பு, வடபூர்ணிமா விரதம் என்பன போன்ற விரதங்களை அனுஷ்டித்து, பெண்மணிகள் ‘சாவித்திரி போல ஆவாயாக’ என்று வாழ்த்துவது இன்றும் உள்ள மரபாகும்.

மகாபாரதத்தில் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் இதை மிக விவரமாக தர்மபுத்திரருக்குச் சித்தரிக்கிறார் (பதிவிரதா மாஹாத்ம்ய பர்வத்தில்)

போன உயிர் மீளாது என்பது நிரந்தர உண்மை.

ஆனால் அதையும் பொய்யாக்கி அதீத புலனாற்றல் சக்தி என்பதையும் மீறி இறப்பையே பொய்யாக்கிய பெண்மணி சாவித்திரி என்பதை நினைத்துப் பெருமை கொள்ளலாம்.

பெண்ணின் பெருமையே பெருமை

பெண்மையின் சிகரம் சீதை என்று பெருமையுடன் கூறினார் ஸ்வாமி விவேகானந்தர்.

சாதுர்யம் பூஷணம் நார்யா – சாதுர்யமே பெண்களுக்கு பூஷணம் என்று கூறினார் ஒரு கவிஞர்.

இப்படி பெண்ணின் பெருமையைக் கூறும் ஆயிரக்கணக்கான செய்யுள்கள் ராமாயண, மஹாபாரத, புராணங்களிலும் மற்றும் காவியங்களிலும் உள்ளன.

ஒரு பெண் ஐந்து குணங்களைப் பெற்றிருந்தாள் என்றால் அவளை மனைவியாகக் கொள்பவன் அதிர்ஷ்டசாலியே என்று ஒரு கவிஞர் பட்டியலிடுகிறார் :

1) அநுகூலம் – காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கை கொடுப்பவள்

2) விமலாங்கி – குற்றம் இல்லாதவள்

3) குலஜா – நல்ல குடியில் பிறந்தவள்

4) குஷலா – திறமை வாய்ந்தவள்

5) சுசீலா – நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

இப்படிப்பட்டவள் பெய் என்றால் மழையும் பெய்யும் அல்லவா?

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இணையே தான்!

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் விண்வெளி கலத்தில் செல்லும் வீராங்கனை, விமானம் ஓட்டும் பைலட், ராணுவ பெண் அதிகாரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என எங்கும் பெண்களை நாம் இன்று பார்க்க முடிகிறது.

சமுதாயத்தின் நடைமுறைப் போக்கில் ஆண் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஆண் பெண் இருவரும் சமம் என்பதை இன்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

இதை அன்றே ஏராளமான இதிஹாஸப் பெண்மணிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், இல்லையா?!

***

Leave a comment

Leave a comment