
Post No. 12,419
Date uploaded in London – 15 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
அஞ்சலிக் கட்டுரை
இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவர், இனிய கீதங்கள் புனைந்தவர் : திரு வெ.சந்தானம்!
ச.நாகராஜன்

பன்முகப் பரிமாணம் கொண்ட மாமனிதர்!
ஆகஸ்ட் 15. சுதந்திர தினம்.
அத்துடன் அந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தர அயராது உழைத்ததோடு பல்வேறு தியாகங்களைச் செய்த உத்தமர் மறைந்த நாளும் கூட அது தான். இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவரும் மாபெரும் புகழைக் கொண்டவருமான திரு வெ.சந்தானம் அவர்கள் மறைந்த நாளில் அவர் பற்றி நினைவு கூர்கிறோம்.
சுதந்திரப் போரில் சிறைவாசம் கண்டது ஒரு பக்கம்;
இதழியலில் நுழைந்து புதுமைகள் புகுத்தியது ஒரு பக்கம்.
ஆன்மீகவாதியாகத் திகழ்ந்து சாதனைகள் புரிந்தது ஒரு பக்கம்.
நல்ல மனிதராக இருந்து பலரை உயர ஏற்றியது ஒரு பக்கம்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பன்முக பரிமாணங்களைக் கொண்ட திரு வெ.சந்தானம் அவர்களைப் பற்றி.
ஹிந்து சிந்தனையோடு வேத உபநிடத புராண இதிஹாஸ சாஸ்திரங்கள் அனைத்தும் இரத்தமாக உடலில் ஓடும் பாங்கினால் அபூர்வமான ஒரு ஆளுமையை அவர் கொண்டிருந்தார்.
காஞ்சி பெரியவாள்!
காஞ்சி காமகோடி பெரியவாளின் பரம பக்தர் அவர்.
இளையாத்தங்குடி நிகழ்ச்சிகளையும் இன்னும் அவர் செல்லுமிடமெல்லாம் ஆற்றுகின்ற அற்புத உரைகளையும் கருத்துப் பிறழாமல் பெரிய பெரிய தலைப்புகள் கொடுத்து முழுதுமாக தினமணியில் பிரசுரித்து ஆன்மீக மறுமலர்ச்சியை அவர் ஏற்படுத்தினார் – அதுவும் நாத்திகர்கள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து தடைகள் பல செய்து வந்த காலத்தில்!
திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகளின் எழுச்சிக்கு அவரது தினமணி இதழியல் பணி பெரிதும் கைகொடுத்ததை ஆன்மீகவாதிகள் அனைவரும் அறிவர்.
சிருங்கேரி ஆசார்யாள்!
சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்தரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர் அவர். ஸ்வாமிகள் திரு வெ.சந்தானம் இல்லத்திற்கே எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதித்தார்.
அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா
அச்சன்கோவிலை ஸ்தாபித்து அங்கு பரசுராமர் நிறுவிய ஐயப்பனின்
விக்ரஹத்தை மீண்டும் நிறுவிய அச்சன்கோவில் ஸ்வாமிஜி ஆயக்குடி ஶ்ரீ கிருஷ்ணாஜியே திரு சந்தானம் அவர்களின் குரு.
தினமும் அவரால் உபதேசிக்கப்பட்ட கணபதிஹோமத்தை காலையில் செய்வது அவர் வழக்கம்.
ஸ்வாமிஜி கிருஷ்ணா அவரது இல்லத்தில் கணபதி ஹோமம் நடத்தினார்; அவர் உணவை விரும்பி ஏற்கும் வீடுகளில் மதுரையில் முக்கியமானது திரு வெ.சந்தானம் அவர்களின் வீடு தான்.
ஸ்வாமி சாந்தானந்தா!
புதுக்கோட்டை ஸ்வாமிஜி ஶ்ரீ சாந்தானந்தா அவர்கள் இயற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு – குறிப்பாக சஹஸ்ரசண்டி யாகத்திற்கு அவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது.
ஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் அவரது இல்லத்தில் பிக்ஷை ஏற்பது உண்டு. மூன்று கவளங்கள்- அனைத்தும் கலந்த கலவையாக அவர் திருமதி ராஜலக்ஷ்மி சந்தானத்திடமிருந்து பெறுவது பிரமிப்பையும் பக்தியையும் ஊட்டும்.

ஶ்ரீ சத்ய சாயிபாபா!
ஶ்ரீ சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் நடந்த முதல் சந்திப்பிலேயே திரு சந்தானத்தைத் தன்னவராகக் கண்டு கொண்டது ஒரு அபூர்வ நிகழ்ச்சி.
சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த பெரும் மாநாட்டில் உரையாற்ற வருமாறு பாபா அவரை அழைத்தார். அவரும் சென்று உரையாற்றினார்.
மதுரையில் அவர் வரும்போதெல்லாம் அவரது ‘பங்காருவாக’ அமைந்தார் திரு சந்தானம்.
ஸாயி கீதங்கள்!
ஶ்ரீ சத்ய சாயி பற்றித் திடீர் திடீரென அல்லும் பகலும் அவர் மனதில் தாமாகவே உதித்த கீதங்கள் பல.
அவற்றை மேடைகளில் பிரபல வித்வான்களும் உரிய ராக தாளத்தில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.
அவற்றில் 108 கீதங்கள் 1966ஆம் ஆண்டு ஸாயி கீதங்கள் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. (விலை 60 பைசா!)
பாதகத் துயர் போக்கி சாதக வாழ்வருள் மகா கணபதே என்று முதல் கீதம் தொடங்குகிறது – ஹம்ஸத்வனி ராகத்தில் ஆதி தாளத்தில்!
சாயி கொடி!
அடுத்து வித்யா வர ஸரஸ்வதி தேவியிடம் ‘வரம் தா வீணாபாணி நான்முகன் மனோரமணி’ என்று வரம் கேட்கும் அவர்
சாயி கொடியை ஏற்றுகிறார்.
சாயி அருள்கொடி பறக்குது பாரீர்
சாந்தக் கொடியது தர்ம பிரேமக் கொடி
நீதி ஞான அன்புப் படையது சங்கநாதமது
சாந்தி சாம்ராஜ்யம் நிலைக்கப் பறக்குது
என்று சாயி கொடி பற்றி அவர் விவரிக்கிறார்.
சாயி அமரும் இடம்!
எங்கே சாயி வந்து அமருவார்?
இந்தக் கேள்விக்கு அவரது கீதம் பதில் தருகிறது:
தெய்வ நாமம் பாடுமிடம்
சாயி வந்து அமரும் இடம்
சந்தேகம் தரும் நாசமே
சாயி கீதை இதுவே
நமனுக்கு நமன்!
கலியுக வரதனாக சாயியை தரிசிக்கும் போது அவர் இசைக்கிறார்:
ஆறுமலையழகன் நேயர் மனஜோதி
ஆறுதலை கூறும் அருள் நேமி சிவஜோதி
நலந்தரும் தொண்டன் நாமமோதுவோர்க்கு
நால்வேத சரணன் நமனுக்கு நமன் வேலன்!
எத்துணை அற்புதமான சொற்கள்!
சாயி கிருபை!
என்றைக்கும் சாயி கிருபை எவருக்கும் உண்டு
அடையாதிருந்தால் அது கேளாத குற்றமே
என்ற வரிகளில் மாபெரும் இறை தத்துவத்தை அவர் குறிப்பிடுகிறார்.
ஓயாத கருணை மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கிறது.
அதை ஏந்தும் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தால் பயன் இருக்காதே!
பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து கருணை மழை கொட்டும் போது வேண்டும் வரைக்கும் வேண்டும் நேரமளவு பிடித்துக் கொள்!
பாத்திரத்தின் அளவும் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதே!
நல்ல பெரிய பாத்திரமாகக் கொண்டு வந்து கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள் என்பதே அதிசயத் தத்துவம்!
சாயி யார்?
ஞான கடைக்காரர் ஆத்ம ஞான பணக்காரர்
சாயி மொழி அமுதம் நிதமும் கேளும் ஆத்ம ஹிதம்
என்பது அவர் சாயியைப் பற்றி விவரிக்கும் ஒரு கீதம்.
இப்படி 108 கீதங்கள் அமுத மழையாகப் பொழியப்பட்டுள்ளது அவரால்!
இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர நன்னாளில் அன்னரை நினைந்து சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்!

Sri Santanam with Rajaji
–subham—