
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,424
Date uploaded in London – 16 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நீதி சதகம்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 9
ச.நாகராஜன்
ஸுபாஷித த்ரிசதி
யோகீஸ்வரர் என்றும் மஹாகவி என்றும் பிரசித்தமான சம்ஸ்கிருத கவிஞர் பர்த்ருஹரியின் ஸுபாஷித த்ரிசதி என்ற நூல் முந்நூறு சுபாஷித ஸ்லோகங்களைக் கொண்டது.
த்ரி சதி என்பதற்கு 300 ஸ்லோகங்கள் என்று பொருள்.
நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என மூன்று சதகங்களை அவர் இயற்றியுள்ளார். மூன்றும் இணைக்கப்பட்டால் த்ரீ சதி ஆகிறது.
இதில் முதல் நூறாக அமையும் நீதி சதகம் பற்றி இங்கு பார்ப்போம்.
காலம் காலமாக அறிஞர்களாலும், கவிஞர்களாலும், மேடைப் பேச்சாளர்களாலும், உபந்யாசகர்களாலும் பர்த்ருஹரியின் நீதி சதக ஸ்லோகங்கள் கையாளப்பட்டு வருகின்றன.
இவர் இதில் தொடாத முக்கிய பொருளே இல்லை. அழகிய உவமைகள், சொற் ஜாலங்கள், ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டதால் இந்த நூல் பிரபலமான ஒன்றாக ஆகி விட்டது.
வித்வான் யார்? மூர்க்கன் யார்? மற்றவருக்கு உதவி, வைராக்கியத்தின் மஹிமை, கர்மத்தின் பெருமை, விதி-மதி என இப்படி பலவற்றையும் பற்றி ஆணித்தரமாக நீதி மொழிகளைக் கூறுகிறார் பர்த்ருஹரி..
இவர் ஒரு சிறிந்த சிவ பக்தர்.
பர்த்ருஹரியைப் பற்றிய ஏராளமான கதைகள் உள்ளன. இவர் காசிக்கருகே உள்ள ஒரு குகையில் இன்றும் தவம் புரிந்து வருவதாகவும் ஒரு செய்தி உண்டு.
நீதி சதகத்தின் அருமையைத் தெரிந்து கொள்ள சில செய்யுள்கள் இதோ:
மூர்க்கனைத் திருத்தல் முடியாது!
சக்யோ வாரயிதும் ஜலேந ஹூதபுக் சூர்பேண ஸூர்யாதபோ
நாகேந்த்ரோ நிசிதாங்குசேந ஸமதோ தண்டேந கௌர்கர்தப: |
வ்யாதிர்பேஷஜஸங்க்ரஹைச்ச விவிதைமந்த்ரப்ரயோகைர்விஷம்
ஸர்வஸ்யௌஷதமஸ்தி சாஸ்த்ரவிதிதம் மூர்கஸ்ய நாஸ்த்யௌஷதம் ||
கொழுந்து விட்டு எரியும் தீயை நீரால் அவிக்கலாம்.
சூரியனது வெய்யிலை முறத்தினால் தடுத்து மறைக்கலாம்.
மதம் பிடித்த யானையைக் கூரிய செம்மட்டியால் அடக்கலாம்.
காளை மற்றும் கழுதையைக் கூடத் தடியால் அடக்கலாம்.
கொடிய நோயை மருந்தால் போக்கலாம்.
விஷத்தைப் பலவித மந்திர பிரயோகங்களினால் முறிக்கலாம்.
ஆதலால் இப்படி எல்லாவற்றிற்கும் கூட சாஸ்திரத்தில் கூறப்பட்ட மருந்து அல்லது வழி முறை ஒன்று இருக்கிறது.
ஆனால், மூர்க்கனுக்கோ என்றால் மாற்று முறை கிடையாது.
இது பத்தாவது செய்யுளாக அமைகிறது.
வித்யையின் பெருமை!
வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரசந்நகுப்தம் தனம்
வித்யா போககரீ யச:ஸுககரீ வித்யா குரூணாம் குரு:|
வித்யா பந்துஜநோ விதேசகமநே வித்யா பரா தேவதா
வித்யா ராஜஸு பூஜ்யதே நஹி தனம் வித்யா விஹீந: பசு: ||
வித்யை என்பது மனிதனுக்கு மிகுந்த அழகாகும்.
வித்யை என்பது மறைவாகவும் நன்கு காக்கப்பட்டதுமான பணமாகும்.
வித்யை ஐஸ்வர்யத்தைக் கொடுக்கிறது.
கீர்த்தியையும் சுகத்தையும் நல்குகிறது.
அது குருவிற்கெல்லாம் குரு.
வெளியூர் பயணத்தில் சுற்றமும் உறவுமாக அமைகிறது.
வித்யையே உயர்ந்த தேவதை.
வித்யையே அரசர்களிடம் கொண்டாடப்படும் ஒன்று, பணம் அல்ல.
ஆகவே வித்யை இல்லாதவன் மிருகமே.
இது நீதி சதகத்தில் 16வது செய்யுள்.
தெய்வ நம்பிக்கை உடையவன் தாழ்வடைவதில்லை!
யதா கந்துக பாதேந உத்பதத்யார்ய: பதந்நபி |
ததா த்வநார்ய: பததி ம்ருத்பிண்ட பதநம் யதா||
தெய்வ நம்பிக்கை உடையவன் தாழ்ந்த நிலையில் வீழ்ந்தாலும் கூட, மீண்டும் உயர்ந்த நிலைக்கு வருவான்.
பந்து கிழே விழுந்தாலும் மீண்டும் உயர்வை அடைவது போல
தெய்வ நம்பிக்கை உடையவன் உயர்வை அடைவான்.
தெய்வ நம்பிக்கையற்றவன் மண்ணுருண்டை கீழே விழுவது போல விழுந்து மீண்டும் கிளம்ப முடியாத நிலையை அடைவான்.
இது 83வது செய்யுள்.
இப்படி நீதி சதகம் 100 அற்புதமான நீதிகளைக் கூறும் செய்யுள்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது.
இது ஆர்யதர்மம் என்ற பழைய பத்திரிகையில் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டு பின்னர் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களால் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது. (அப்போதைய விலை ரூ ஒன்று)
நீதி சதகத்தை திரு சோஹன்லால் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை புது டெல்லி கீதா எண்டர்பிரைஸஸ் வெளியிட்டுள்ளது. (Gita Classic Series-2, Translated by (Late) Sohan Lal)
***