மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி-2 (Post No.12,483)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,483

Date uploaded in London –  30 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி

 (இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

அன்னபூரணி தேவி

தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது. ஆகவே காசியின் அரசியே அன்னபூரணி தான்!

இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன.

பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய  ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மண்டபத்தில் நின்று பலகணியின் வழியாகத் தான் தேவியைத் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.

அம்பாளின் அருகே இரு புறமும் தங்கத்தினால் ஆன ஸ்ரீ தேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.

கருவறையில் மூலையில் சிறு பள்ளம் ஒன்றில் விசுவநாதர் கொலுவிருந்து அருளாட்சி செய்கிறார்.  விசுவநாதர் ஏன் ஓரத்தில் இருக்கிறார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

ராணி அகல்யாபாய் சிதிலமடைந்திருந்த கோவிலை மீண்டும் கட்ட முனைகையில், முன் போலவே ஐந்து மண்டபங்கள் கொண்டதாக கோவில் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் விசுவநாதரின் திருவிளையாடல் அப்போது அரங்கேறியது.

“நான்கு புறமும் வாசல்கள் உள்ள ஒரு மண்டபம் கட்டிக் கர்ப்பூரத்தைப் போடுங்கள். எங்கே அது தானாகவே பற்றி எரிகிறதோ அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று ஒரு அசரீரி எழுந்ததாம்.

ஆகவே தான் விசுவநாதர் கர்ப்பூரம் தானாகவே பற்றி எரிந்த இடமான ஓர இடத்தில் இருக்கிறார்.

விசுவேசுவரர் லிங்கம் சிவசக்தி சொரூபமாக இருக்கிறது. லிங்கத்தின் மேல் பாகம் குமிழ் போல இருக்கிறது. அது சிவ வடிவம் என்றும் கீழ்ப்பாகம் சக்தி வடிவம் என்றும் சொல்லப்படுகிறது.

விசாலாட்சி ஆலயம்

அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் சிறு சந்து ஒன்றில்  விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம். பௌர்ணமி அன்று அம்மனுக்கு அபிஷேகம் உண்டு. விஜயதசமி அன்று தங்க விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறாள். கோவிலுக்குள் அம்பு விடும் உற்சவமும் நடைபெறுகிறது.

கால பைரவர் ஆலயம்

காசிக்குச் சென்று திரும்பும் யாத்ரீகர்கள் திரும்பும் போது கால பைரவரைத் தரிசித்து விட்டுத் திரும்புவது மரபு. கால பைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்திற்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. கால பைரவரே காசி தலத்தின் காவல் தெய்வம். இவருக்கு வாகனம் நாய். கலமும் உடுக்கையும் மழுவும் பாசக்கயிறும் ஏந்திய ஈசனின் திரு உருவமாகவே காலபைரவரைக் கருதுகின்றனர். அவர் உள்ள இடத்தில் யமபயம் இல்லை என்பது ஐதீகம். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அவர் போக்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் இதற்காக நம்மை மயில் இறகால் தட்டி ஆசீர்வதிப்பதோடு கையில் காசிக் கயிறு கட்டி விடுகிறார்கள். இந்தக் கயிறு விசேஷமானது. பல ஆண்டுகளுக்கு அறுந்து போகாமல் இருப்பது இது. இது நம்மைக் காக்கும் ஒரு காப்பு என்று கருதப்படுகிறது.

மகான்கள் தவம் புரியும் இடம்

துளஸிதாஸர், கபீர் தாஸர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் தவம் புரியும் இடமும் இதுவே.

கங்கைக் கரையில் ஈசன் தேவியுடன் திரு நடனம் ஆடிய இடம் காசி என்று அறநூல்கள் கூறுகின்றன. 

காசியின் முக்கியமான மூர்த்திகளைச் சொல்லும் ஒரு வடமொழி ஸ்லோகம் உண்டு.

“விஸ்வேஸம், மாதவம், துண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே

காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம்”

என்பதே அது. 

கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும். இது ஐதீகம் 

காசி யாத்திரை மேற்கொள்வோம். அம்பிகை மற்றும் ஈசன் அருளைப் பெறுவோம்!.

***

Leave a comment

Leave a comment