
Post No. 12,486
Date uploaded in London – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 16
ஹிட்லரின் மண்டை ஓடு!
ச.நாகராஜன்
பகுதி 20
1945, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. திங்கள்கிழமை.
இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தோற்பது உறுதி, பிடிபடுவதும் உறுதி என்ற முடிவுக்கு வந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.
தனது நீண்ட கால காதலியாக உடன் இருந்த தோழி இவா ப்ரானைத் திருமணம் செய்து கொண்டார்.
அவரையும் தற்கொலை செய்யச் சொல்லித் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு பங்கரில் நடந்தது இது.
அவர் தனது முடிவைத் தேடிக் கொண்ட பின் அவர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி அவரது உடல் அகற்றப்பட்டது.
மிக வேகமாக வந்த ரஷியப் படை ஏமாந்து போனது – ஹிட்லரை உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்று!
ஹிட்லரின் மண்டை ஓடு என்று ஒரு படத்தை ரஷியா வெளியிட அதைத் தொடர்ந்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.
ஹிட்லர் சயனைடு விஷத்தைச் சாப்பிட்டு பின்னர் துப்பாக்கியால் தனது வாயில் சுட்டுக் கொண்டார் என்பது ஊர்ஜிதமான செய்தி.
அவர் மண்டை ஓட்டில் தலையில் ஒரு ஓட்டை இருந்தது.
தலையில் எப்படி துப்பாக்குக் குண்டு ஓட்டை இருக்க முடியும், ஆகவே அவர் வாயில் சுட்டிக் கொண்டு இறக்கவில்லை என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முதலில் ஹிட்லரின் வரலாற்றை நன்கு ஆராய்ந்து எழுதிய அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் ஷ்ரிடர் (William L. Shrirer) ஹிட்லர் வாயில் சுட்டுக் கொண்டு இறந்தார் என்று தனது புத்தகமான ‘தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தேர்ட் ரெய்ச்’ (The Rise and Fall of Third Reich)-இல் உறுதிப் படுத்தியுள்ளார்.
வாய் வழியே சுட்டாலும் தலை வழியே துப்பாக்கிக் குண்டு வெளியேறுவது இயல்பே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
அத்தோடு ஹிட்லரின் எலும்புகளைச் சேகரித்த ரஷியக் குழு அந்தத் துண்டுகளைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தனர்.
மாஸ்கோவில் ரஷிய அரசு காப்பகத்தில் (The Russian State Archive in Moscow) அவை பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டில் அவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
ஹிஸ்டரி சேனல் ஒன்று கனெக்டிகட் புதைபொருள் ஆராய்ச்சியாளரான நிக் பெல்லண்டோனி (Nick Bellantoni) என்பவரை மண்டை ஓட்டையும் ஹிட்லர் அறையில் இருந்த சோபாவில் சிந்தி இருந்த ரத்தத்துளிகளையும் ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.
அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த அவர் அது ஹிட்லரின் உடலியல் ரீதியிலான ஆய்வுடன் ஒத்துப் போகவில்லை என்றார்.
அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
லிண்டா ஸ்ட்ராஸ்பா (Linda Strausbaugh) என்ற ஒரு பெண்மணி மாலிகுலர் அண்ட் செல் பயாலஜி துறையில் பேராசிரியை. அவர் தனது டிஎன்ஏ ஆய்வு மூலம் அது 20 முதல் 40 வயது வரையிலான ஒரு பெண்மணியுடையது என்று உறுதிப்படுத்தினார்.
இவா பிரானுடையதாக அது இருக்க முடியாது. ஏனெனில் அவர் சயனைடு அருந்தியே தற்கொலை செய்து கொண்டார்.
ரஷிய அதிகாரிகள் ஹிட்லரை சோவியத் ராணுவம் தனது பரேட் கிரவுண்டில் கிழக்கு ஜெர்மனியில் மாக்டெபர்க் நகரில் (Magdeburg) புதைத்தது என்றனர். 1970ஆம் ஆண்டு அந்த எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு, சாம்பலானது நகரின் சாக்கடையில் கொட்டப்பட்டது என்றனர்.
ஆக இப்படி தலையில் எப்படி புல்லட் ஓட்டை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது; ரஷிய அதிகாரிகள் சொல்வது உண்மை இல்லை என்பதும், அவர்கள் காட்டும் மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்பதும் உலகிற்குத் தெரிய வந்தது.
ஹிட்லர் வாழும் போது இருந்த மர்மம் அவர் இறந்த பிறகும் கூட அவருடன் கூடவே இப்படித் தொடர்ந்தது!
***
tags- hitler