
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,499
Date uploaded in London – 19 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!
இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் புவி வெப்பம்!
ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
உயிர் காக்கும் ஓஸோன் மண்டலம்
பூமியைச் சுற்றி உள்ள ஓஸோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் பெரும் வளையமாகும். இது வாயுக்களினால் ஆன ஒரு உறையாகும்.
சூரிய மண்டலத்திலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பூமியை ஓஸோன் மண்டலம் காக்கிறது. மனிதர்களையும் தாவரங்களையும் காப்பது இந்த மண்டலம் தான்.
சூரியன் தனது அளவற்ற சக்தியை பூமியின் மீது வீசும் போது அது மனிதன் தாங்க முடியாத அளவு அளப்பரியதாகும். அதைத் தாங்கக் கூடியதாக ஆக்கி, மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர் வாழும்படி செய்வது இந்த ஓஸோன் மண்டலமே.
இந்த ஓஸோன் உறை மட்டும் இல்லாவிட்டால் இன்னும் அதிக அளவில் புற்று நோயும் காட்ராக்ட் போன்ற கண் நோய்களும ஏற்படும்.
ஓஸோனில் துளை
ஆனால் நகரங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகைகள் இந்த ஓஸோன் உறை மீது பட்டுப் பட்டு அதில் அபாயகரமான அளவில் துளை
ஏற்பட்டுள்ளது; ஆஸ்திரேலியாவிற்கு மேலே அபாயகரமான அளவு பரந்து விரிந்தது மட்டுமின்றி பெரிதாகி வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா விண்ணில் ஏவிய
சாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படம் பூமியின் அபாயகரமான நிலையைக் காட்டுகிறது. அண்டார்டிகாவின் மேலே ஓஸோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது. இதன் பரப்பு 110 லட்சம் சதுர மைல்கள்.
அதாவது அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!
1970ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் ஓஸோன் மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றனர். கவலைப்படும்படியாக சீஸனுக்குத் தகுந்த படி இது சுருங்கியும், விரிந்தும் வருகிறது.

செப்டம்பர் 16 ஓஸோன் தினம்
1995ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் ஓஸோன் லேயர் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அது முதல் செப்டம்பர் 16ஆம் நாள் ஆண்டுதோறும் உலக ஓஸோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மெட்ரோலாஜிகல் கண்காணிப்பு மையம் ஓஸோன் துளை
பெரிதாகி வருவது குறித்துக் கவலை தெரிவித்து ஓஸோனைக் காப்பாற்றுமாறு உலக நாடுகளை வேண்டி கேட்டுக் கொண்டது.
1987ல் அனைத்து நாடுகளும் நச்சுப் புகை கக்கும் விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த உறுதி எடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆனால் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
போதுமானதாக இல்லை என்பதை இந்த ஓஸோன் துளை தெரிவிக்கிறது.
நச்சு வாயுக்களே காரணம்
நச்சு வாயுக்கள் பூமியிலிருந்து அதிக அளவில் வெளிப்படுவதால் தான் ஓஸோனில் துளை ஏற்பட்டது. இந்த அபாயகரமான வாயுக்களில் குறிப்பிடத் தகுந்தது CFC எனப்படும் க்ளோரோ ஃப்ளோரா கார்பன் – Chloro Floro Carbon – ஆகும். இது ரெப்ரிஜரேஷன் எனப்படும் குளிர் சாதனக் கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. PUF எனப்படும் பாலி யூரிதேன் ஃபோமிலும் (Poly Urethane foam) இந்த சி.எப்.சி உள்ளது. இது ரெப்ரிஜரேட்டர்களிலும், இன்சுலேடட் மற்றும் ரெப்ரிஜரேடட் வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
உலக நாடுகள் இதன் உபயோகத்தைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பொருளாக 134ஏ என்ற வாயுவை ரெப்ரிஜரேஷன் சம்பந்தப்பட்ட கருவிகளில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.
இது மட்டுமன்றி அனேக ஆலைகள் கக்கும் விஷப்புகைகள் பூமியின் மேலே உள்ள வளி மண்டலத்தை மோசமாகத் தாக்குகின்றன. ஆகவே விஷ வாயுக்களைத் தடுப்பதில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பர்டிகுலேட் மேட்டர்
காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமாக இருக்கிறது.
தொடரும்
***