கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! (Post No.12,517

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,517

Date uploaded in London –  23 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்கள் வாழ்வில் ..

கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! 

ச.நாகராஜன் 

கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! 

ஶ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்களில் இன்னும் இரண்டைப் பார்ப்போம்.

ஸ்வாமிகள் மதுரையில் சொக்கப்ப நாயக்கன் தெருவில் சில காலம் வசித்து வந்தார்.

அந்தத் தெருவிற்கு மிக அருகில் உள்ளது பிரபல நகைக்கடை வீதியான தெற்காவணி மூல வீதி.

அந்த வீதியில் ஒரு சேட் வைரம், தங்கம் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி குணத்திலும் அழகிலும் சிறந்தவர்.

மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர்.

ஸ்வாமிகள் மீது சேட்டும் அவர் மனைவியும் அளவற்ற பக்தி கொண்டவர்கள்.

தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகும் போது ஸ்வாமிகளை தரிசிப்பது சேட்டின் மனைவியின் வழக்கம்.

ஒரு நாள் ரேஸ்கோர்ஸுக்குச் சென்று அமைதியாக சற்று நேரம் உலாவி விட்டு ஒஈர்டத்தில் அமர்ந்தார் அந்தப் பெண்மணி.

அப்போது மதுரையில் கலெக்டராக இருந்தவன் ஒரு காமவெறி பிடித்தவன்.

அழகிய பெண்ணைக் கண்ட அவன் அவளிடத்தில் முறை தவறி நடக்க முயன்றான்.

சேட்டின் மனைவி திடுக்கிட்டு பயந்தார். அன்று காலை ஸ்வாமிகள் அவரிடம், “இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு” என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவர் ஸ்வாமிகளையும் மீனாட்சியையும் பிரார்த்தித்தார்.

அப்போது திடீரென ஒரு பெரிய நாகப்பாம்பு கலெக்டரின் மீது சீறிப் பாய்ந்து வந்தது.

அதைக் கண்ட கலெக்டர் அலறி ஓடினார்.

ஸ்வாமிகள் அத்துடன் விடவில்லை. அவர் கனவிலும் தோன்றி அவனைத் திருத்தினார்.

சேட்டும் அவர் மனைவியும் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை போற்றி வணங்கினர்.

ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யர் பெயர் ராமலிங்க ஐயர்.

ஸ்வாமிகள் அவரிடம் தாமே சொன்ன நிகழ்ச்சி தான் இது.

(மதுரையில் ஶ்ரீ ராமலிங்க ஐயர் வாழ்ந்து வந்தார். அவர் தானப்ப முதலித் தெருவில் வாழ்ந்து வந்த இந்தியன் பேங்க் ஏஜண்ட் ஶ்ரீ சங்கர ஐயர் வீட்டுக்கு வருவது வழக்கம்.

அப்போது நான் (இந்தக் கட்டுரை ஆசிரியர்) அவரைப் பார்த்தது உண்டு)

உபநயனத்திற்குப் பணம்!

ஸ்வாமிகள் மதுரையில் தானப்பமுதலித் தெருவில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.

ஒரு செட்டியார் ஸ்வாமிகளுக்கு பாத பூஜை செய்து 1100 ரூபாய் பணத்தை காணிக்கையாக அர்ப்பணித்தார்.

அந்தப் பணத்தை ஏற்றுக் கொண்ட ஸ்வாமிகள் பக்கத்திலிருந்த ஒருவரை அழைத்தார்.

“வாசலில் ஒரு வயோதிக பிராமணர் ஒரு பையனை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அவரை என்னிடம் அழைத்து வா” என்றார்.

அப்படியே அவர் அழைத்து வரப்பட்டார்.

தனது பையனுக்கு உபநயனம் செய்விப்பதற்காக வீடு வீடாகச் சென்று அவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஸ்வாமிகள் அவரை ஆசீர்வதித்து துணியை விரி என்றார்.

அவரது வஸ்திரமோ கந்தலாய் இருந்தது. தனது மகன் இடுப்பில் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து அவர் விரித்தார்.

உடனே ஸ்வாமிகள் தனக்கு பாதபூஜை பணமாக வந்த ஆயிரத்தி நூறு ரூபாயையும் அதில் கொட்டினார்.

தனக்கு பாதபூஜைக்காக அளிக்கப்பட்ட பட்டாடையும் அவரிடம் கொடுத்து, “குழந்தைக்கு உபநயனம் செய்து சௌக்கியமாயிரு” என்று ஆசீர்வதித்தார்.

அந்த பிராமணர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அந்தப் பையனோ பின்னால் பெரியவனாகி ஒரு சிறந்த பிரபுவாக விளங்கினான்.

ஸ்வாமிகளின் ஆசீர்வாத மகிமை அப்படிப்பட்டது.

***

Leave a comment

Leave a comment