
Post No. 12,537
Date uploaded in London – 30 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்!
ச.நாகராஜன்
ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை உலகம் அறிய வழி வகுத்தவர் ‘எம்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகேந்ந்திரநாத் குப்தா ஆவார்.
பரமஹம்ஸர் அவரை மாஸ்டர் என்று அழைப்பார்.
ஆகவே அவரை அனைவரும் மரியாதையுடன் மாஸ்டர் மஹாஷய் என்று கூறுவர்.
‘எம்’ என்றே அவர் அனைத்து ஆன்மீக விஷயங்களையும் எழுதுவது வழக்கம்.
அவருக்கு இன்னும் சில புனைப்பெயர்கள் உண்டு – மணி, மோஹினி மோஹன், பக்தர் – இப்படியெல்லாம் அவர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அவர் பிறந்தார். அன்று நாக பஞ்சமி தினம். சதயம் அவரது நக்ஷத்திரம். எட்டுக் குழந்தைகளில் மூன்றாவதாக அவர் பிறந்தார்.
அந்தண குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1873ஆம் ஆண்டு நிகுஞ்சா தேவி என்னும் அம்மையாரை அவர் மணந்தார்.
அபாரமான ஞாபகசக்தி உள்ளவர் எம். 1867ஆம் ஆண்டு முதல் டயரி எழுதுவதை அவர் வழக்கமாகக் கொண்டார். இப்படி ஒரு நாட்குறிப்பை தினமும் எழுத வேண்டும் என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை.
இதன் பலன் 15 ஆண்டுகள் கழித்துத் தான் தெரிய வந்தது.
1882ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அவர் பரமஹம்ஸரை தரிசித்தார்.
தனது நாட்குறிப்பில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்திக்கும்போதெல்லாம் அங்கு நடப்பது அனைத்தையும் நாட்குறிப்பில் எழுதலானார்.
இதுவே ஶ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதமாகப் பரிணமித்தது.
ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அவதரித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சமாதி எய்தினார்.
மகேந்திரநாதர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தை முதலில் GOSPEL OF SRI RAMAKRISHNA என்று ஆங்கிலத்தில் 1897ஆம் ஆண்டு வெளியிட்டார்.
வங்காள மொழியில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது.
பின்னால் ஏராளமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த கதாம்ருதத்தை உலகிற்கு அளிப்பதற்காகவே அவர் பிறந்தார் போலும்!
ஐந்தாம் பாகத்தின் முடிவை இரவு ஒன்பது மணிக்கு அவர் எழுதி முடித்தார்.
உடனே அவருக்கு தலைவலி ஆரம்பித்தது.
அவருக்குப் பிடித்த பாட்டை அவர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது;
“ஓ! குருவே! அம்மா, என்னை உன் மடியில் ஏந்திக் கொள்”
1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழ்மையன்று அவர் சமாதி எய்தினார்.
எழுபதாவது வயது முதல் அவர் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு குடிலில் வசித்து வந்தார். இரு அறைகள் அங்கு இருந்தன. ஒன்றில் எம் வசித்தார். இன்னொன்று ஸ்டோர் ரூம். வாரந்தாவில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்று சமையலறை. இன்னொன்று குளியலறை.
இங்கு தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தன்னைச் சந்தித்த பக்தர்களுக்கெல்லாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் பல அரிய ஆன்மீக விளக்கங்களையும் தந்து வந்தார்.
ஸ்வாமி விவேகானந்தரை அவர் சுக மஹரிஷியின் மறு அவதாரம் என்றே கருதினார்.
அன்னை சாரதா தேவியார் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவதரித்தார். அவர் 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாளில் சமாதி அடைந்தார்.
பரமஹஸருடனும் அன்னை சாரதா தேவியாருடனும் அருள் பெற்று வாழ்ந்த நாட்களை மஹேந்திரநாதர் புனிதமாகக் கருதினார்.
மிகுந்த வேதனையுடன் அவர் சில சமயம் புலம்புவதுண்டு இப்படி:
“ அடடா! அன்னை போய் விட்டார். 35 ஆண்டுகள் நம்மை பாதுகாத்தார். ஐந்தே வருடங்கள் தான் ஶ்ரீ ராமகிருஷ்ணரின் அற்புதமான தெய்வீக பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் அன்னை 35 ஆண்டுகள் நம்மை நன்கு வளர்த்தார். அடடா! அவரும் போய் விட்டாரே!”
இதனால் அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டார்.
தனிமையில் வாழ மிஹிஜம் நோக்கி வந்து அங்கு வாழலானார்.
மஹேந்திர நாதர் இங்கு தன்னைப் பார்க்க வந்த பக்தர்களிடம் பேசியதை எல்லாம் ஸ்வாமி நித்யாத்மனானந்தா M-The Apostle & the Evangelist என்று ஆங்கிலத்தில் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.
அற்புதமான ஆன்மீக ரகசியங்களை மஹேந்திரநாதர் விளக்கியுள்ளதை இதில் காணலாம்.
***