மாஸ்டர் மஹாஷய்  தந்த அற்புத விளக்கங்கள்! (Post No.12,540)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,540

Date uploaded in London –  1 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா தந்த அற்புத விளக்கங்கள்! 

ச.நாகராஜன் 

மஹேந்திர நாதர் தன்னை அணுகுவோரிடம் இறைவனைப் பற்றியும் அவனது அற்புத லீலைகளையும் பரமஹம்ஸரின் அருள் வாக்குகளையும் பற்றியே பேசுவார்.

 தினசரி நடக்கும் உரையாடல்களில் அவர் திருவாய்  மலர்ந்தருளும் ரகசியங்கள் எத்தனையோ!

 காயத்ரி மகத்துவம்!

பரமஹம்ஸர் காயத்ரி மஹிமையைப் பற்றி கூறுவார் அடிக்கடி.

காயத்ரியானது சந்த்யாவை விட மேலானது. காயத்ரியை விட மேலானது ஓம்காரம்.  சந்த்யா காயத்ரியில் அடங்குகிறது. காயத்ரி ஓம்காரத்தில் அடங்குகிறது.  அதாவது ஒருவர் காயத்ரியைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவருக்கு சந்த்யா தேவை இல்லை.தொடர்ந்து இடைவிடாமல் ஒருவர் ஓம்காரத்தை ஜபித்துக் கொண்டிருந்தால் அவருக்கு காயத்ரி தேவை இல்லை. காயத்ரி அதிகமாகி விடும். ஓம்காரத்தை ஒரு தடவை உச்சரித்தாலேயே  கோடிக்கணக்கான சந்த்யாக்களின் மகிமை கிடைக்கிறது. ப்ரஹ்மத்தை உணர்ந்த ஒருவருக்கோ, சமாதியை அடைந்த பின்னர் ஒன்றுமே தேவை இல்லை.

ஓம்கார வழிபாடு கூட இருக்கவே இருக்கிறது. அ, உ, ம – இந்த மூன்று சப்தங்களும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கிறது என்பது அனைவருடைய நம்பிக்கையுமாகும்.

அவை மனித மனத்தின் மூன்று நிலைகளையும் குறிக்கிறது. ஜாக்ருதி (விழிப்பு நிலை பிரக்ஞை) ஸ்வப்னம் (கனவு நிலை) மற்றும் சுஷுப்தி (கனவற்ற உறக்கம்)

அவை விஸ்வம்(பருப்பொருள்), தேஜஸ் (அறிவு) மற்றும் ப்ரக்ஞா (ஆன்மீகம்) ஆகிய மூன்றையும் குறிக்கிறது.

இப்படி தொடர்ந்து இன்னும் பல விளக்கங்களை மகேந்திரநாதர் குறிப்பிட்டார்.

நெப்போலியனின் துரதிர்ஷ்டமும் அவனது உயர்வும்

நெப்போலியனைப் பற்றி மகேந்திரநாதர் கூறியது இது:

ஒருவரும் துரதிர்ஷ்டத்தைக் கண்டு அஞ்சக் கூடாது.

நெப்போலியன் ஒரு படைவீரனாகத் தான் இருந்தான். திடீரென்று அவனுக்கு வேலை போய் விட்டது. அவனது வீட்டிலிருந்து அவனது தாயார் அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “என் அருமைக் குழந்தாய்! நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். தயவு செய்து பணம் அனுப்பவும்” என்று எழுதியிருந்தார்.

ஆனால் நெப்போலியனிடமோ பணமே இல்லை. தனது தாயாரின் கஷ்டத்தை அறிந்தவுடன் அவரால் அதைப் பொறுக்க முடியவில்லை.

தண்ணீரில் குதித்து உயிரை விட்டு விடலாம் என்று அவர் முடிவு செய்தார்.

ஆற்றங்கரைக்குச் சென்றார் அவர். நீருக்குள் குதிக்க இருந்த தருணத்தில் அவரது நண்பர் ஒருவர் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தார்.

“என்ன ஆச்சு உனக்கு நெப்போலியன்?உனது முகத்தை ஒருபோதும் இப்படி பார்த்ததே இல்லையே” என்றார் அவர்.

நெப்போலியன் தனது நிலைமையை நண்பரிடம் கூறினார்.  ஆனால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்ள விழைந்ததை மட்டும் கூறாமல் மறைத்தார்.

அவரது நண்பர் தனது மடியிலிருந்த இரண்டாயிரம் மதிப்புள்ள காசுகளை நெப்போலியனிடம் கொடுத்தார்.

நெப்போலியன் அதை தபால் அலுவலகம் சென்று தாயாருக்கு உடனடியாக அனுப்பினார்.

திரும்பி வந்து பார்த்தால் நண்பரைக் காணோம்.

பல வருடங்கள் ஓடின.

பின்னர் நெப்போலியன் இத்தாலி, எகிப்துக்குச் சென்றார்.

பெரிய தளபதி ஆனார்.

மெதுவாக அவர் முன்னேறினார். ஜெனரல் ஆனார். பின்னர் சக்கரவர்த்தி ஆகி விட்டார்.

ஒரு நாள் நகரில் மாபெரும் ஊர்வலத்தில் நடுநாயகமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.  இரு புறமும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.

மக்கள் ஆரவாரித்து சக்கரவர்த்தியை உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது நெப்போலியன்  தனது பழைய நண்பர் கூட்டத்தின் நடுவில் இருந்ததைக் கவனித்தார்.

உடனே ஒருவரை அனுப்பி அவரைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தார்.

தன்னுடன் அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். நண்பரோ ஒரு முறை கூட அவருக்குத் தான் கொடுத்த பணம் பற்றிப் பேசவே இல்லை. மாறாக தனது பழைய நண்பர் இப்படி மாபெரும் சக்கரவர்த்தி ஆனதை எண்ணி மகிழ்ந்து பெருமைப்பட்டார்.

மிகவும் வற்புறுத்தி அந்த நண்பரை நெப்போலியன் ஒரு உயரிய பதவியில் அமர்த்தினார். அவருக்குப் பெரும் செல்வம் சேரும்படி செய்தார்.

இப்படி மகேந்திரநாதர் கூறி முடித்தவுடன் அருகில் இருந்த ஒரு பக்தர்,
“ஆஹா! அருமை! இதே போலத் தான் ஸ்வாமிஜி (விவேகானந்தர்)

கூட  அல்மோராவில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது ஒரு வெள்ளரிக்காயைத் தந்து தன்னைக் காத்த ஒருவரை அடையாளம் கண்டு அவருக்கு பெரிய மரியாதையை அனைவருக்கும் முன் செய்து அவரை பரிசுகள் தந்து கௌரவித்தார்” என்றார்.

மகேந்திரநாதர் இது தான் உயர்ந்தோரின் குணம் என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்தார்.

***

Leave a comment

Leave a comment