சிவ சுப்பிரமணியசாமி கோவில்: இலங்கைத் தீவின்108…..-Part 37 (Post.12,629)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,629

Date uploaded in London – –  –  24 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 37

74.சிவ சுப்பிரமணியசாமி கோவில் , கொழும்பு

இலங்கைத் தலை நகரான கொழும்பு நகரில் இருக்கும் பழைய ஆலயங்களில் ஒன்று சிவ சுப்பிரமணியசாமி கோவில். 1902-ம் ஆண்டில் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் என்பவரால் துவக்கப்பட்டது. ஸ்லேவ் ஐலண்ட் , கியூ ரோட்டில் (Kew Road, Slave Island) இருக்கும் இந்த ஆலயம் 1962-ம் ஆண்டுவரை மிகவும் சிறிதாக இருந்தது. மூலஸ்தானத்தில் 6 அங்குல உயரமுள்ள சுப்பிரமணியர் விக்கிரகம்தான் வழிபாட்டில் இருந்தது அப்போது கதிரேசன் கோவில் என்ற பெயரில் இருந்தது

கொழும்பு Dam Street டேம் ஸ்ட்ரீட்டில் 1822-ம் ஆண்டிலேயே முருகன் கோவில் இருந்தது; பெரியதம்பி என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் சிறிய கட்டினார் கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும்– போயர் யுத்தத்தில் Boer War கலந்து கொள்ள ஆப்பிரிக்காவுக்குச் சென்ற — தமிழர்களுக்கு கோவிலாக விளங்கியது. Dam Street  டேம் ஸ்ட்ரீட் அரசாங்க பணிகளுக்குத் தேவை என்று சொல்லி, வேறு புதிய இடத்தில் கோவில் கட்டுங்கள் என்று அரசாங்கமே 1867-ல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியாரிடம் £.500 அளித்தது. அவர் 1870ல் தற்போதுள்ள இடத்தில் கதிரேசன் கோவிலைக் கட்டினார். அதை அவருடைய மகன் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் 1902 ஆம் ஆண்டில் புதுப்பித்தார் .அப்போது ஸ்ரீ  சிவ சுப்பிரமணியசாமி கோவில் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது

கோவிலுக்கு முன் பெரிய மண்டபமும், வசந்த மண்டபமும் கட்டப்பட்டன கட்டிடம் பழுதடைந்து வந்ததால் திருப்பணி வேலைகள் துவங்கின. 1975-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது விநாயகர், நடராஜர், மஹாவிஷ்ணு , சனைச் சரன் / சனீஸ்வரன் சந்நிதிகள் கட்டப்பட்டன  சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடத்தப்பட்டு கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது  விழாவின் கடைசி நாள் நடக்கும் தேர் விழா கொழும்பு நகரில் மிகவும் பெயர்பெற்ற விழா ஆகும் தேரில் வேல் பவனி வருவதைத் தரிசிக்கப் பெரும் பக்தர் கூட்டம் சேருகிறது.

Xxxx

75. மண்டூர் கந்தசாமி கோவில்

மட்டக்களப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் மட்டக்களப்பு வாவிக் கரையில்

அமைந்த இந்த ஆலயத்தை தில்லை மண்டூர் திருத்தலம் என்றும் அழைப்பார்கள். சூர சம்ஹாரம் நடந்த பொழுது , முருகப்பெருமானின் வேல் கடலில் விழுந்து மூன்று ஒளிக்கற்றைகளாகப் புறப்பட்டு மூன்று இடங்களில் விழுந்தன . மண்டூர் தில்லை மரம் அதில் ஒன்று. இதைக்கண்ட வேடர்கள் அங்கு சிறிய குடிலை அமைத்து வழிபட்டனர். காலப்போக்கில் மீன்பிடித்து தொழில் ,பயிர்த் தொழிலில் ஈடுபட்டோர் வீடுகட்டி வசிக்கத்  துவங்கியவுடன்  கிராமம் தோன்றியது

மாக மன்னன் ஆட்சிக்காலத்தில் 1215-1255, அவனுடைய தளபதி மண்டூர் நாகன் முறையான கோவிலாக கட்டுவித்தான். அத்தோடு போரத் தீவு  சித்திர வேலாயுத சுவாமி கோவிலையும் கட்டினான். கதிர் காமம் போலவே திரைக்குப் பின்னால்      பூஜைகள்  நடத்தப்படுவதால் இதை சின்னக் கதிர்காமம் என்றும் அழைப்பார்கள்.

நிழல்தரு மரங்களும் அலை வீசும் ஏரியும் சூழ கோவில் இருப்பது மன அமைதியையும் தெய்வ பக்தியையும் அதிகரிக்கிறது. இயற்கை வனப்பானது பலரையும் கவி மழை பொழியவைத்ததால்  மண்டூர் வேலனுக்கு பாமாலைகள் அதிகம்.

ஆகஸ்ட் மாத பெளர்ணமியில் 20 நாள் உற்சவம் நிறைவு அடையும். கதிர்காமம்  போலவே தெய்வத்தை வள்ளி கோவிலுக்குக் கொண்டு சென்று வருவார்கள். கந்த சஷ்டி உற்சவத்தின்போது , வள்ளி திருமணமும் நடக்கும்.

திருச்செந்தூர் புராணம் பாராயணம் செய்யப்படும். பல வகைக் காவடிகளை சுமந்து கொண்டு பக்தர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஆடிக்கொண்டு வருவது பார்ப்போரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் .

இங்கு நடந்த அற்புதங்களில் ஒன்று போர்ச்சுகீசியப்ப படைகளை குளவி வண்டுகள் விரட்டியதாகும். ஆலயத்தை இடித்துத்தள்ள மத வெறி யர்கள் வந்தபோது, அவர்களைக் குளவிகள் கொட்டவே அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓட நேரிட்டது

இந்த ஆலயத்தின் மஹிமை  பற்றி மட்டக்களப்பு மான்மியத்தில் தாவல் உள்ளது.

மண்டூர் முருகன் மீது எழுதப்பட்ட பாமாலைகள் —

மண்டூர் பதிகம் , மண்டூர் இரட்டை மாலை, மண்டூர் காவடி விருத்தம், மண்டூர் முருகமாலை

Xxxx

76 .உகந்தமலை (Okanda) வேலாயுத சுவாமி கோவில்

Sea at Okanda (Ukantha malai)

பெளத்தர்களும் இந்துக்களும் வழிபடும் தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும் . அம்பாறை மாவட்டத்தில் நீலக்கடலின் கரையில் குன்றின் மீதமர்ந்து முருகப்பெருமான் அருள் புரிகிறார். முருகப் பெருமானின் வேல், கடலில் விழுந்த போது எழுந்த கதிர்களில் ஒன்று இங்கே விழுந்ததாகவும் பின்னர் வேடர்கள் கோவிலை எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது . கதிர்காம யாத்திரை செல்லுவோரின் வழியில் இருப்பதால் எல்லோரும் தங்கி வழிபட்டுச் செல்லுவார்கள். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதை மெய்ப்பிக்கும் மலை இது. இங்கு 7, 8 கிணறுகள் இருக்கின்றன. வன்னியர் ஆட்சிக்காலத்தில் சிங்க குமரன் வெட்டியவை இவை என்பர் .

இந்தக் கோவில் அம்பாறை மாவட்டத்தில் இருக்கிறது.

ஆலயத்தின் அருகில் 2 குன்றுகளில் வள்ளி அம்மன் , வேல்சாமி கோவில்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மார்க்கண்டு என்பவரசுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால் கோவிலைக் காட்டினார். அதற்கு முன்னர், வெறும் குடில் மட்டுமே இருந்தது.

ஜுலை மாத அமாவாசையில்  15 நாள் உற்சவம் முடிவடையும்; முருகப்பெருமான் வள்ளியை ரகசியமாக சந்திக்கும் மலை த் திருவிழா ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

முருகப்பெருமான் தங்கக் கப்பலில் வந்ததாகவும் பின்னர் அது மலைப் பாறை ஆகிவிட்டதாகவும் கடலிலுள்ள பாறையைக் காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டைப்போல முருகனுக்கு இலங்கையிலும் அறுபடை வீடுகள் உண்டு என்று சொல்லுவோர், இதையும் ஆறில் ஒன்றாககக் கணக்கிடுவர்.

–subham—

Tags–உகந்தமலை ,வேலாயுத சுவாமி கோவில்,  . மண்டூர், கந்தசாமி கோவில்,  சிவ சுப்பிரமணியசாமி கோவில் , கொழும்பு, Okanda

Leave a comment

Leave a comment